திங்கள், 20 டிசம்பர், 2010

அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன்(1642-1727)



“உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !”
ஐஸக் நியூட்டன்
“எந்த ஓர் உயிரினமும் விண்வெளியை ஏதோ ஓர் முறையில் சார்ந்திருக்க முடியாமல் தனித்திருக்க இயலாது.  கடவுள் எங்கும் உள்ளது.  படைக்கப் பட்ட மனித உள்ளங்கள் எங்கோ இருக்கின்றன.  அதை ஆட்கொண்ட உடல் விண்வெளியில் உள்ளது.”
“பேரெழில் கொண்ட இந்தப் (பிரபஞ்ச) ஏற்பாடு பேரறிவும், பேராற்றலும் உள்ள ஓர் உயிர்ப்பு அரங்கிலிருந்துதான் தோன்றி இருக்க முடியும்.”
ஐஸக் நியூட்டன்
“நாம் போதுமான பாலங்களைக் கட்டாமல், பல்வேறு மதில் சுவர்களைத்தான் எழுப்புகிறோம்.”
ஐஸக் நியூட்டன்
“இயற்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நியூட்டனுக்கு அதில் உள்ள மெய்ப்பாடுகள் சிரமமின்றி எளிதாகப் புரிந்தன,”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
“டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்!  அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன!  நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்!  அது இரு நூறாண்டுகள் நீடித்தன!  இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்!  அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)
கோபுரத்தில் நின்று கோள்களை நோக்கிய நியூட்டன் !
‘மற்றவரை விடத் தீர்க்கமாக நான் எதையும் காண முடிவதற்குப் பல மாமேதைகளின் தோள் மீது நின்று கொண்டு நான் நோக்குவதுதான் காரணம்’ என்று ஐஸக் நியூட்டன் ஒருமுறை கூறியிருக்கிறார்! அவருக்குத் தோள் கொடுத்துத் தூணைப்போல் தாங்கிக் கொண்டிருப்பவரில் தலையாய மேதைகள் இருவர்! முப்பெரும் அண்டக் கோள்களின் சுற்று விதிகளைப் படைத்த ஜொஹானஸ் கெப்ளர், ஒருவர்! அடுத்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா’ என்று போற்றிய காலிலியோ! பெளதிக விஞ்ஞானத்திற்கு விதையிட்டு நீர் ஊற்றிச் செடி யாக்கியவர் காலிலியோ என்று சொன்னால், அதை விருத்தி செய்துப் படரும் ஆல விழுதுகளாகப் பெருகச் செய்தவர், ஐஸக் நியூட்டன்!  முதன் முதல் விஞ்ஞானத் துறையில் நிறை [Mass], பளு [Weight], விசை [Force], முடத்துவம் [Inertia], வளர்வேகம் [Acceleration], தளர்வேகம் [Deceleration], ஈர்ப்பியல் [Gravity], அசைப்பியல் [Dynamics], ஓளிப்பட்டை [Light Spectrum], பகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus], தொகுப்பியல் கால்குலஸ் [Integral Calculus] ஆகிய கணித விஞ்ஞானப் பதங்களைத் தெளிவாக விளக்கி, அவற்றைக் கணிதச் சார்பியல் சமன்பாடுகளில் இணைத்தவர், ஐஸக் நியூட்டன் !
பிரபஞ்சக் கோள் நகர்ச்சிக்குச் சீரான கணித அமைப்பாட்டை ஆக்கிய கெப்ளரின் ஒப்பற்ற விதிகளைப் பற்றிப் பரவசப் பட்டு, 1605 இல் நியூட்டன் கூறினார்: ‘பிரபஞ்சத்தின் அண்டகோள யந்திரம், வெறும் தெய்வீக ஆக்கம் என்று இல்லாது, ஒரு கடிகார வேலைப்பாடு என்று கெப்ளரால் அறியப்படுவது இனிமை தருகிறது ! கடவுள் சாவி கொடுத்துத் துவங்கிய பிரம்மாண்டமான கடிகார இரும்புச் சுருள் [Watch Spring] கொண்டது இந்தப் பிரபஞ்சம்’ என்று காண நியூட்டன் விரும்புகிறார்! பிரபஞ்ச அண்டங்களின் நகர்ச்சிகளில் [Celestial Mechanics of the Universe] மாறாத கணித விதிகளால் ஆளப் படுகின்றது என்று நியூட்டன் உறுதியாய் நம்பிடக் கெப்ளரின் அண்டகோள் விதிகள் உதவி செய்தன! புரியாத பிரபஞ்ச மர்மங்களைப் பூர்த்தி செய்ய இறுதியில், நியூட்டனே அண்டங்களின் இயக்கத்திற்குப் புதிய நியதிகள் ஆக்கவும், அவற்றின் நகர்ச்சிகளுக்கு ஓர் ‘கட்டமைப்பு அரங்கம்’ [Frame Work] அமைக்கவும் வேண்டிய தாயிற்று!


காலிலியோ, கெப்ளர் பாதையைத் தொடர்ந்த கணித மேதை
ஜெர்மன் வானியல் மேதை கெப்ளர் தனது முப்பெரும் அண்டக் கோள் விதிகளை ஆக்கிய பிறகு, அவை ஒன்றை ஒன்று ஓர் ஒழுங்கு நியதியில் ஏன் சுற்றி வருகின்றன என்ற வினா அவர் சிந்தையில் எழுந்தது! 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம்’ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்!
1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டுபிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்!  அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசைகளே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றிவர உதவுகின்றன என்றும் கூறினார். மேலும் நியூட்டன் கால்குலஸ் [Calculus] என்னும் கணிதத்தை ஆக்குவதற்கு முன்னோடியாக உதவியவர் கெப்ளரே! தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதை யிட்டவரும் கெப்ளரே!


பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட பளுக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காட்டியவர், காலிலியோ! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை’ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது’ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்!
‘வெளிப்புற விசை பாதிக்காத ஓர் அண்டம் திசை மாறாமல், வேகம் திரியாமல் சீராகச் செல்கிறது’ என்று ஐஸக் நியூட்டனின் நகர்ச்சி விதிகளுக்கு [Newton 's Laws of Motion] அடியெடுத்துக் கொடுத்த பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், காலிலியோவின் சோதனைகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தனது உன்னத ‘ஈர்ப்பியல் நியதியை’ [Theory of Gravitation] உருவாக்கினார்!


பெளதிகத்தில் ஐஸக் நியூட்டனின் அற்புதப் படைப்புகள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒருவரைத் தவிர, உலக மாந்தர் கருதி யிருந்த பிரபஞ்சத்தின் அமைப்பாடை மாபெரும் அளவில் மாற்றிக் காட்டியவர், ஐஸக் நியூட்டன்! கெப்ளரின் ஒப்பற்ற அண்டக்கோள் சுற்று விதிகளையும் [Laws of Planetary Motion], காலிலியோவின் யந்திரவியலையும் [Galileo 's Mechanics] ஒருங்கிணைத்து, பிரபஞ்ச கோளங்களின் ‘அகிலமய ஈர்ப்பியல் விதியை’ [Universal Law of Gravitation] ஆக்கினார். நியூட்டனின் எதிரிகளும் அவரது ஈர்ப்பியல் தத்துவத்தை மனதுக்குள் ஆதரித்து வரவேற்றனர்!
மூன்று யந்திரவியல் விதிகளையும், ஒப்பற்ற ஈர்ப்பியல் நியதியையும் படைத்ததாக நியூட்டன் நினைவுக்கு வந்தாலும், அவர் அணுவியலைப் [Atomism] பற்றி எழுதி யிருப்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்! அவர் 1704 இல் ஆக்கிய ‘ஒளியியல்’ [Opticks] என்னும் நூலில் ‘அணுவியல் நியதிக்கு’ [Atomic Theory] வேண்டிய அரிய பல விஞ்ஞானக் கருத்துக்களை வழங்கி யுள்ளார்! ‘சோதனை அணுவியல் ரசாயனத்திற்கு’ [Experimental Atomic Chemistry] மூல கர்த்தாவான பிரிட்டிஷ் மேதை ஜான் டால்டன் [John Dalton (1766-1844)], நியூட்டனின் அணுவியல் கூற்றைப் பின்பற்றித் தனது புகழ் பெற்ற அணுவியல் நியதியை பிறப்பித்தார்!


நியூட்டன் மனித இனத்துக்குப் பரிசாக அளித்த ‘இயற்கை வேதாந்தத்தின் கணிதக் கோட்பாடுகள்’ ['Principia' The Mathematical Principles of Natural Philosophy (1687)] விஞ்ஞான உலகில் புரட்சி செய்த முதல் கணிதப் படைப்பு. பதினெட்டு மாதங்களில் உதயமாகி வடிவம் பெற்ற அந்நூல், நியூட்டனின் தனித்துவ ஆராய்ச்சிகளில்தான் உருவானது. அது சிறப்பாக அண்ட கோளங்களின் நகர்ச்சி, அவற்றிடையே ஒன்றை ஒன்று கவர்ந்து ஆட்சி புரியும் ஈர்ப்பியல்பு ஆகியவற்றைக் கணித வடிவில் விளக்குகிறது. வெளிவந்த உடனே விஞ்ஞான வரலாற்றில் உலகின் மாபெரும் மகத்தான கணிதக் காவியமாக அது இடம் பெற்றது! அந்நூல் பிரபஞ்சத்தில் நிகழும் மர்மமான, புதிரான, மாயமான பல நிகழ்ச்சிகளுக்கு ‘அகிலமய ஈர்ப்பியல்பு’ [Universal Gravitation] மூலக் காரணம் என்று காட்டுகிறது! கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] எழுவதற்குக் காரணம் காட்டியது! நிலவின் ஒழுங்கற்ற நகர்ச்சி [Irregular Motion] எவ்வாறு உண்டகிறது என்பதை விளக்குகிறது. ஆட்டமிடும் பிரபஞ்ச அரங்கை, அந்நூல் கணிதக் கோட்பாடுகள் மூலம் அறிவிக்கிறது!
நியூட்டனின் அற்புதப் படைப்பு ‘கோட்பாடுகள்’ [Principia] என்னும் நூலின் கணிதச் சிறப்பை ஒப்பிட்டால், அது கணித மேதை யூக்ளிட் [Euclid] ஆக்கிய ‘அடிப்படைகள்’ [Elements] என்னும் நூலுக்கு இணையாகும்! அதன் பெளதிக நுணுக்கத்தையும், விளைவுகளையும் ஒப்பிட்டால், சார்லஸ் டார்வின் படைத்த ‘உயிர்ப்பிறவிகளின் மூல அடிப்படைகள்’ [Darwin 's Origins of Species] என்னும் நூலுக்குச் சமமாகும் !


ஐஸக் நியூட்டனின் அரிய வாழ்க்கை வரலாறு
இத்தாலிய மேதை காலிலியோ காலமான அதே ஆண்டு [1642], ஏசு மகான் பிறந்த நாள் டிசம்பர் 25 இல் உலக மெல்லாம் கொண்டாட, மாமேதை ஐஸக் நியூட்டன் இங்கிலாந்து லிங்கன்ஷயர், உல்ஸ்தோர்ப்பில் [Woolsthorpe, Lincolnshire] ஒரே பிள்ளையாகப் பிறந்தார். வானியல் மேதை கெப்ளர் பிறந்தது போல், குழந்தை முழு முதிர்ச்சிக்கு முன்னே [Premature Baby] வெளிவந்து, உயிரோடு வாழுமா என்று ஐயுறும்படி நலிந்து, மெலிந்து சிறிய வடிவில் இருந்தது! ஆனால் நியூட்டன் 84 வயது வரை வாழ்ந்து, வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்க முடியாத மகத்தான விஞ்ஞான மெய்ப்பாடுகளை ஆக்கினார்! வேளாண்மையில் ஈடுபட்ட அவரது தந்தை, பிள்ளை பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். இரண்டு வருடங்களில் மறு முறைத் திருமணம் செய்து கொண்ட தாயும், புதுத் தந்தையும், ஐஸக் நியூட்டனைப் பாட்டியிடம் விட்டுவிட்டு, அருகில் இருந்த கிராமத்தில் வாழச் சென்றனர்! இரண்டு வயது பச்சிளம் குழந்தை நியூட்டன், தாய் தந்தையரின் அன்பும், அணைப்பும், ஆதரவும் இன்றி ஒன்பது ஆண்டுகள் தனித்து வாழ வேண்டிய தாயிற்று! சிறுவன் நியூட்டன் தந்தையை வெறுத்துத் தாயோடு அவரையும் எரித்து, வீட்டைக் கொளுத்தி அவர்கள் மீது தள்ளப் போவதாய் ஒரு சமயம் பயமுறுத்தினான்! பிற்கால மனநோயில் அவர் பாதிக்கப் பட்டதற்குப் பால்ய வயதில் இல்லறப் பாதுகாப்பு இல்லாது, பயங்கரத் தனி வாழ்வில் அவதி யுற்றதே காரணம், என்று பின்னால் கூறினார் நியூட்டன்!


இரண்டாம் முறையாக விதவை ஆனதும், தாய் பத்து வயது நியூட்டனை அழைத்துக் கொண்டு போய் விவசாயத்தில் நுழைக்க முயன்றாள். அது தவறு என்று உணரப் பட்டு, பாட்டி நியூட்டனைக் கிரந்தம் இலக்கணப் பள்ளியில் [Grammar School in Grantham] சேர்த்தாள்! அங்கே அமைதியாக நடந்து கொண்ட நியூட்டன் படு மோசமாய்ப் படித்தான்! பிறகு பிரமிக்கத் தக்க அளவில் நியூட்டனின் அறிவு வெள்ளம் மடை திறந்தது! அவர் தங்கி யிருந்த இல்லம் ஒரு மருந்தியல் பட்டதாரிக்குச் [Pharmacist] சொந்த மானது. நியூட்டனின் பிற்கால ரசாயன வேட்கைக்கு, அவரே அடிகோலியவர்! சிறு வயதிலே சூரிய கடிகாரம் [Sun Dials], காற்றாடி மாடல் யந்திரம் [Model Windmill], நீர்க் கடிகாரம் [Water Clock], யந்திர வாகனம் [Mechanical Carriage], விளக்குக் கட்டிய பட்டம் [Kite with Lanterns at the Tail] ஆகியவற்றை சிறுவன் நியூட்டன் செய்தான். கிரந்தப் பள்ளி ஆசிரியர் ஒருவர், நியூட்டனின் அபார அறிவை வியந்து, நியூட்டன் கல்லூரிக்குப் போகத் தாயை உடன்பட வைத்தார்!
1661 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடி கல்லூரியில், நியூட்டன் சேர்ந்தார். அங்கே கணிதம், ஜியாமெட்ரி, டிரிகொனாமெட்ரி [Trignometry], வானியல் [Astronomy], ஒளியியல் [Optics] ஆகியவற்றைப் படித்தார். அவரது 23 ஆவது வயதில் அங்கே B.A. பட்டம் வாங்கினார். 1665 ஆம் ஆண்டு நியூட்டனின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போது பிளேக் நோய் பரவி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இரண்டு ஆண்டுகள் தற்காலியமாக மூடப் பட்டது! அந்த சமயத்தில் ஈரிலக்கக் கூட்டின் nth அடுக்கு எனப்படும் ‘பைனாமியல் நியதி’ [Binomial Theorem (X + Y) to power n], பகுப்பியல் கால்குலஸ், தொகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus & Integral Calculus] ஆகியவற்றின் அடிப்படைகள், ஈர்ப்பியல்பின் [Gravitation] துவக்கக் கருத்துக்கள் நியூட்டனுக்கு உதயம் ஆகின!


கால்குலஸ் என்று இப்போது அழைக்கப் படுவதை, நியூட்டன் ·பிளக்ஸியான்ஸ் [Fluxions] என்று அப்போது பெயரிட்டி ருந்தார். அடுத்து முப்பட்டைப் பளிங்கில் [Prism] சூரிய ஒளியைச் செலுத்தி நிறப்பட்டை [Light Spectrum] விரியும் விந்தையைக் கண்டு பிடித்தார்!  இதுவரை யாரும் ஓராண்டுக்குள் இவ்வாறு அரிய புதிய விஞ்ஞானக் கணிதப் படைப்புக்களை ஆக்கிய தில்லை!
1668 இல் M.A. பட்டத்தைப் பெற்று, டிரினிடியில் சிறப்புநராகி [Fellow of Trinity], தனது 26 ஆம் வயதில் புகழ்மிக்க லுகாஸியன் கணிதப் பேராசிரியர் [Lucasian Professor of Mathematics] உயர் பதவி கிடைத்தது! முப்பது ஆண்டுகள் நியூட்டன் கேம்பிரிட்ஜிலே தங்கி, ஏறக் குறைய முழு நேரமும் தனியாகப் படித்துக் கொண்டும், மற்ற விஞ்ஞானிகளுக்குக் கடிதம் எழுதிக் கொண்டும் காலம் தள்ளினார்! 1672 இல் நியூட்டன் 30 வயதாகும் போது லண்டன் ராயல் குழுவினரின் சிறப்புநர் [Fellow of Royal Society, London] விருதைப் பெற்றார்!


1687 இல் நியூட்டனின் முதல் பதிப்பு ‘பிரின்ஸிபியா’ வானியல் வல்லுநர், செல்வந்த நண்பர் எட்மண்டு ஹாலியின் [Edmund Halley (1656-1742)] நிதி உதவியில் அச்சாகி வெளிவந்தது. அப்போது லண்டனுக்கு வருகை தந்த உன்னத டச் விஞ்ஞானி கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens (1629-1695)] நியூட்டனைக் கண்டு பேசினார். ‘பிரின்ஸிபியா’ 1713 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு முறை திருத்தப் பெற்றது.  ஓய்வின்றி இரவும் பகலும் உழைத்ததால், நியூட்டன் மிகவும் சோர்வுற்று, 1692 இல் தீவிர மனமுடக்கம் [Severe Mental Depression] அடைந்து, அவரது சீரான சிந்தனா சக்தி சிதைந்தது! அதற்குப் பிறகு நியூட்டனின் விஞ்ஞானப் படைப்புகள் பெருமளவில் குறைந்தன!
நியூட்டன் கண்டுபிடித்த நகர்ச்சி விதிகள்
1665 இல் பிளேக் நோய் பரவி அடைபட்டுப் போன அந்த இரண்டு ஆண்டுகளில் நியூட்டனின் ‘அசைப்பியல்’ [Dynamics] பெளதிகச் சிந்தனை ஆரம்ப மானது. அதற்கு முன்பே அவர் ‘வட்ட நகர்ச்சி’ [Circular Motion], ‘மோதும் அண்டங்கள்’ [Colliding Bodies] ஆகியவற்றைப் பற்றி சிந்தித்திருந்தார். விசை [Force], முடத்துவம் [Inertia], நகர்ச்சி [Motion], சுழல்வீச்சு விசை [Centrifugal Force] ஆகியவை அண்டங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் அவர் அறிந்திருந்தார். அவற்றைப் பயன் படுத்தி அவர் புதிய நகர்ச்சி விதிகளை [Laws of Motion] ஆக்கினார்!


முதல் விதி: ஓர் அண்டத்தைப் புற விசை எதுவும் தள்ளாத போது, அது நிற்கும்; அல்லது நேர் கோட்டில் சீரான வேகத்தில் செல்லும். இவ்விதியே இப்போது ‘முடத்துவக் கோட்பாடு’ [Principle of Inertia] என்று அழைக்கப்படுவது.  எந்த ஒரு பண்டத்தையும் நகர்த்த, ஒரு விசை தேவைப்படும் என்பது அரிஸ்டாடில் காலம் முதலே கூறப் பட்டது! இவ்விதி விசைக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகிறது.
இரண்டாம் விதி: ஓர் அண்டத்தின் நகர்ச்சி வேக மாறுபாடு அதன் நிறைக்கு எதிர் விகிதத்திலும், தள்ளும் விசைக்கு, செல்லும் திசைக்கு நேர் விகிதத்திலும் உள்ளது. இவ்விதி வளர்வேகக் கோட்பாடு [Principle of Acceleration] என்று குறிப்பிடப் படுகிறது. [விசை = நிறை x வளர்வேகம்], [Force = Mass x Acceleration]. அதாவது விசை ஓர் அண்டத்தின் நிறைக்கு [Mass] ஏற்றபடி நேர் விகிதத்தில் வேக வளர்ச்சியை அதனில் உண்டாக்குகிறது.
மூன்றாம் விதி: ஒவ்வொரு நேர் உந்தலுக்கும் எதிரே அதற்குச் சமமான எதிர் உந்தல் உண்டாகுகிறது. நியூட்டன் ஆறு உபரி விதிகளை [Corollaries], மூன்றாவது விதிக்கு எழுதினார். எப்படி ஓர் அண்டம் நகர்த்தப் படுகிறது என்பதை, மூன்றாம் விதி விளக்குகிறது.


ஆப்பிள் பழ வீழ்ச்சி, ஈர்ப்பியல் நியதிக்கு அடிகோலியது!
நியூட்டன் தனது ஈர்ப்பியல் நியதியை 23 ஆவது வயதில் யூகித்தார்! ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுந்து சிந்தனையைக் கிளரியது,  ஐஸக் நியூட்டனின் கூற்றுப்படி மெய்யாக நடந்த ஒரு நிகழ்ச்சி! ஆப்பிளைத் தன்னகத்தே இழுக்கும் பூமி, மாபெரும் நிலவையும் அதே போன்று தன்வசம் இழுத்துப் பாதையில் சுற்ற வைக்க வேண்டும் என்று நியூட்டன் அனுமானித்தார்! ஆனால் அந்தக் கருத்து முழுமை பெறும் வரைத் தாமதம் செய்துக் கவனமோடுப் பல்லாண்டுகள் கழித்தே அதை வெளியிட்டார்! அவரது ஈர்ப்பியல் நியதி அண்டக் கோள்கள் நீள்வட்ட வீதியில் சுற்றுவதற்குக் காரணத்தை விளக்கியது. பூமியை நோக்கி அண்டங்கள் விழுவதை எடுத்துக் காட்டியது. கை தவறிக் கீழே விழுந்துடையும் பண்டத்துக்கும் காரணி ஈர்ப்பியல் விசையே! அண்ட கோளங்களைச் சீராகப் பரிதியைச் சுற்றி வரச் செய்வதும் ஈர்ப்பியல் விசையே என்று நியூட்டன் கருதினார்.

அவர் ஆக்கிய ‘அகிலமய ஈர்ப்பியல் நியதி’ [Universal Gravitational Theory] இதுதான்: ‘இரு அண்டங்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு எனப்படும் கவர்ச்சி விசை அவற்றின் நிறைகளின் பெருக்கலுக்கு [Product of two Masses] நேர் விகிதத்திலும், இடைத் தூரத்தின் ஈரடுக்கிற்குத் தலைகீழ் விகிதத்திலும் [Inversely Proportional] உள்ளது’.  பூமியின் மேலே எறியப்படும், அல்லது கீழே விழும் ஓர் அண்டத்தின் பளு [Weight], அந்த அண்டத்தின் ஈர்ப்பியல் விசையின் அளவைக் காட்டுகிறது. ஆனால் ஐன்ஸ்டைனின் ‘ஒப்பியல் நியதி’ [Theory of Relativity] ஈர்ப்பியலை, வரைவடிவில் [Geometrically] காண்கிறது. அதாவது ‘ஓர் அண்டத்தின் பிண்டம் [Matter] அதன் அருகே உள்ள பிரதேசத்தில், நாற்புற அங்களவு கொண்ட கால-வெளித் தொடர்ச்சி வளைவை [Curvature of the Four Dimensional Space-Time Continuum] உண்டாக்குகிறது’. அவ்வாறு ஐன்ஸ்டைன் ஈர்ப்பியலை இருபதாம் நூற்றாண்டில் விளக்கினார்!


நியூட்டன் ஆக்கிய ஒளியியல் (Optics) நியதி
நியூட்டனின் படைப்புப் பொற்காலம் எனப்படும் [1665-1666] இரண்டு ஆண்டுகளில் ஒருசமயம், சூரிய ஒளியை முப்பட்டைப் பளிங்கில் [Prism] கடந்து செல்ல விட்டு, ஒளி பல்நிறப் பட்டையாய்ப் [Light Spectrum] பிரிவு படுவதைக் காட்டினார். அந்நிறங்கள் ஏழு: [(VIBGYOR) Violet, Indigo, Blue, Green, Yellow, Orange & Red]. அச்சோதனை மூலம் நிறப் பிரிவுகள் ஒளியின் உடன்பிறந்த குணாதிசயம் என்றும், நிறங்கள் முப்பட்டைப் பளிங்கின் தன்மைகள் இல்லை என்றும் விளக்கம் தந்தார்! அந்தச் சோதனையின் துணை விளைவு நியூட்டன் எதிரொளி தொலை நோக்கியை [Reflecting Telescope] மேம்படுத்தி விருத்தி செய்தது!
1704 ஆம் ஆண்டில் நியூட்டன் எழுதிய ஒளியியல் [Optics] நியதி என்ன கூறுகிறது ? ‘கதிர் வீசும் அண்டங்களின் ஒளியானது நுண்ணிய துகள்களைக் [Particles] கொண்டது’. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அக்கோட்பாடு நீடித்தது. அதன் பின்பு ‘ஒளியின் அலைக் கோட்பாடு’ [Wave Theory of Light] ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.  பிறகு 20 ஆம் நூற்றாண்டில் மைகேல்ஸன் ஐன்ஸ்டைன் [Michelson, Einstein] ‘ஒளியின் மின்காந்தக் கோட்பாடு’ [Electro-magnetic Theory of Light] மற்ற கோட்பாடுகளைக் கீழே தள்ளி, அதன் கை ஓங்கியது!


நியூட்டன், லைப்னிஸ் படைத்த கால்குலஸ் கணிதம்
நியூட்டன் விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்து கொண்டு வந்த போது, 1665 இல் அவர் கண்டு பிடித்து விருத்தி செய்தது, சிற்றிலக்கங்களைக் கையாளும் ‘பகுப்பியல் கால்குலஸ்’ [Differential Calculus].  பலவித யந்திரவியல், நீரழுத்த அசைப்பியல் பிரச்சனைகளைத் [Mechanical, Hydrodynamic Problems] தீர்வு செய்ய கால்குலஸ் கணித முறையை உபயோகிக்கலாம். விஞ்ஞானப் பொறியியல் பிரச்சனைகளையும் தீர்வு செய்யப் பயன்படுத்தலாம். ‘ஃபிளக்ஸியான் கோட்பாடு’ [Theory of Fluxions] என்று பகுப்பியல் கால்குலஸ் கணிதத்திற்குப் பெயர் கொடுத்த நியூட்டன், அதை 38 வருடங்கள் தாண்டி 1704 ஆம் ஆண்டில்தான் அவர் எழுதிய ‘பிரின்ஸிபியா’ [Principia] என்னும் நூலில் வெளியிட்டார்! ஆனால் அந்நூலில் கூறப்படும் கோட்பாடுகளுக்குக் கால்குலஸை நியூட்டன் பயன் படுத்தவில்லை!
கால்குலஸை முதலில் கண்டு பிடித்தது யாரென்று ஒரு முரண்பாடுக் கேள்வி நியூட்டன் காலத்திலே வாய்ப் போராய் மூண்டது! சிலர் நியூட்டன் என்று எண்ணுகிறார்! வேறு சிலர் ஜெர்மன் கணித மேதை லைப்னிஸ் [Leibniz] என்று கருதுகிறார்! நியூட்டன்தான் முதலில் கண்டு பிடித்தாலும், அவர் முப்பத்தி யெட்டு ஆண்டுகள் வரை அதை வெளியிடவே யில்லை! ஒரே சமயத்தில் தனியாகச் சற்றுத் தாமதமாக விருத்தி செய்த லைப்னிஸ் முதலாகக் கால்குலஸை வெளி உலகுக்கு அறிவித்தார்! அத்துடன் லைப்னிஸியன் கால்குலஸ் நியூட்டனின் ஃபிளக்ஸியான்ஸை விடச் சீரானதாகவும், செம்மைப்பாடு உள்ளதாகவும், முழுமைப்பாடு பெற்றதாலும் அதுவே இப்போது யாவராலும் கையாளப் படுகிறது.



நியூட்டன் கால்குலஸைப் பயன்படுத்தி, சூரியன், பூமி உள்படச் சூரிய குடும்பத்தின் ஒவ்வோர் அண்டத்தின் நிறையைக் கணித்தார்! பூமியின் திணிவு [Density] நீரின் திணிவைப் போல் ஐந்து, ஆறு மடங்குகளுக்கு இடைப்பட்ட தென்று [மெய்யாக 5.5] மதிப்பீடு செய்தார். வாழையடி வாழையாய் வாழ்ந்து மறைந்த பல்வேறு மேதைகள், நியூட்டனின் விஞ்ஞான சாதனைகளைக் கண்டு பிரமித்து, ‘அவை மானிட ஆற்றலுக்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு மாமேதையின் ஆக்கமென்று’ வியந்தனர்!
கடவுளைப் பற்றி ஐஸக் நியூட்டன் கருத்துக்கள்.
நியூட்டனுக்கு ரசவாதம் [Alchemy], மதவியல் [Theology], சரித்திரம் [History], மாய விஞ்ஞானம் [Occult Science] ஆகியவற்றில் ஆர்வமும் மிக்க நம்பிக்கையும் உண்டாயினும், அவர் வெளியே அதைக் காட்டிக் கொள்வதில்லை! தனது ஆழ்ந்த கருத்துக்கள், சிந்தனைகள், கண்டு பிடிப்புகள், நம்பிக்கைகள் எதையும் மற்ற மாந்தரிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இன்றித், தனிமையின் இனிமையில் எப்போதும் ஆராய்ச்சியில் காலம் தள்ளுவதே, நியூட்டனுக்குப் பிடித்தமானது! தான் செய்யும் ஆராய்ச்சியில் மனம் ஊன்றி நியூட்டன் ஆழமாய் மூழ்கிப் போவதுண்டு! அல்லாவிடில் அவரது மூளை மதச் சிந்தனையில் சிதறிப் போய்விடும்!

நியூட்டன் ஒரு மூர்த்தியை நம்புபவர், மும்மூர்த்தி அன்று [Unitarian not a Trinitarian] ! அதாவது கடவுள் ஒன்றே !  அது மூவடிவம் அற்றது! [Trinity means Father, Son & Holy Spirit]. நியூட்டனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு!  ஆனால் அவருக்கு ஏசுக் கிறிஸ்து மீதும், புனித ஆவி [Holy Spirit] மீதும் நம்பிக்கை இல்லை! நியூட்டன் காலத்தில் அவரைப்போல் மத நம்பிக்கை கொண்டவர், பிரிட்டனில் தண்டிக்கப் பட்டனர்! 1696 ஆம் ஆண்டில் மும்மூர்த்தி மீது நம்பிக்கையற்ற ஒருவர் தூக்கிலிடப் பட்டார்!  மூவடிவத்தில் நம்பிக்கையற்ற ஐஸக் நியூட்டன் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பிக் கொண்டார்!  1689, 1701 ஆண்டுகளில் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில், நியூட்டன் பணி செய்தார். 1696 முதல் 1727 வரை பண அச்சகத்தில் அதிபதியாகப் [Master of Mint] பணி யாற்றினார். ராயல் சொஸடியின் [Royal Society] அதிபதியாக 1703 இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1705 ஆம் ஆண்டு அன்னி ராணியால் [Queen Anne] பிரிட்டிஷ் தீரராக [Knight] ஆக்கப் பட்டார்!


நியூட்டனின் குண மாறுபாடு, இறுதிக் கால வாழ்வு
முப்பது வயதிலே தலை நரைத்துப் போனாலும், 84 வயது வரைக் கிழவராய் வாழ்ந்த நியூட்டன், கடைசிவரை கண்ணாடி போட்டுக் கொள்ள வில்லை! அத்தோடு திடகாத்திரமாயும் இருந்தார்! எல்லாப் பற்களும் ஒருவிதப் பழுதின்றி அத்தனையும் சீராக இருந்தன வென்று அறியப் படுகிறது!  நியூட்டனுக்கு ஞாபக மறதி மிகுதி! பெளதிகச் சிந்தனையில் ஆய்வுக் கடலில் மூழ்கி யிருக்கும் போதெல்லாம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, தன்னைச் சுற்றி யாருள்ளார் என்பது நியூட்டனுக்குத் தெரியாது! ஒன்றையே ஆழ்ந்து எண்ணிக் கொண்டு உலகையே மறந்து விடுபவர், நியூட்டன்! படுக்கை மெத்தை மேல் அரை நிர்வாணத்தில் மணிக் கணக்காக அமர்ந்திருப்பார் என்று சொல்லப் படுகிறது! அடிக்கடி தான் உணவு அருந்தி விட்டோமா, இல்லையா என்பது கூட அவருக்கு நினைவிருக்காது!
நியூட்டன் ஒரு பேராசைக்காரர்! புகழ்ச்சிகள் மீது அவருக்கு வேட்கை மிகுதி! எதையும் சந்தேகப்பட்டு, அவரது கோட்பாடுகளை எதிர்ப்போரிடம் போரிடத் தாவும் சண்டைக்காரர்! கால்குலஸை யார் முதலில் படைத்தவர் என்ற வாதப் போரில், தனியாகப் படைத்த ஜெர்மன் கணித மேதை லைப்னிஸ் [Leibniz] கூட நியூட்டன் போட்ட சண்டை ஓர் உதாரணம்! கால்குலஸை முதலில் கண்டு பிடித்த நியூட்டன், வெளி யிடாமலே பல்லாண்டுகள் வைத்திருந்தவர்! ஆனால் லைப்னிஸ் அவருக்குப் பின்னால் கண்டு பிடித்து, உலகுக்கு முதலாக அறிவித்தவர்!


நியூட்டன் பதினேழாம் நூற்றாண்டில் ஆக்கிய ‘பிரின்ஸிபியா’ கணித நூல், ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதி [Relativity Theory], குவாண்டம் யந்திரவியல் [Quantum Mechanics] தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் புதிய விஞ்ஞான முற்போக்கு நிலைக்கு மாற்றப்பட வேண்டிய தாகிறது! ஆயினும் ஒளிவேகத்திற்கு நிகரற்ற வேகமுடைய அண்டங்கள், நாமறிந்த முப்புற அமைப்பாடுகளில் [X,Y,Z Three Dimensional Systems] நகரும் அண்டங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நியூட்டனின் நியதிகள் ஏற்றவை.
லண்டன் மாநகரில் இனிதாக வாழ்ந்து, தன் அழகிய மருமாள் [Niece] இல்லத்தைக் கண்காணித்துக் கொள்ள, நியூட்டன் இறுதி ஆண்டுகளில் படிப்புகளைத் தொடர்ந்தார்! இல்லத்தில் அவரது ஆராய்ச்சிகளுக்குத் தேவையான எல்லாக் கருவிகளும், சாதனங்களும் வசதியாக எப்போதும் அமைக்கப் பட்டிருந்தன. 1725 ஆம் ஆண்டு நியூட்டனுடைய புப்புசங்களில் பழுதேற்பட்டு, தூய காற்றுள்ள இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டார்! அதன் பின்பு படிப்படியாக வலுவிழந்து, ஐஸக் நியூட்டன் தனது 84 ஆவது வயதில் 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி காலமானார். பிரிட்டனின் மகா மேதைகள் புதைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் [Westminster Abbey], அரச மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது!


நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை! வாலிப வயதில் அண்டை வீட்டுப் பெண்ணொருத்தி மீது லிங்கன்ஷயரில் [Lincolnshire] அவருக்கு அன்பு உண்டானது! ஆனால் தனது விஞ்ஞானப் பணிக்கு தடையாக இருக்கும் என்று நியூட்டன் அந்த உறவைத் தொடரவில்லை! அதற்குப் பிறகு எந்தப் பெண்ணின் மீதும் அவருக்குக் காதல் மலராமலே போனது! நியூட்டனின் காம இச்சையைப் பற்றி அவரது சரிதையில் எதுவும் அறிய முடிவதற்கு இல்லை!
“இயற்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நியூட்டனுக்கு அதில் உள்ள மெய்ப்பாடுகள் சிரமமின்றி எளிதாகப் புரிந்தன,” என்று ஐஸக் நியூட்டனைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார்!
*****************************
தகவல்:

1.  Men of The Stars -Sir Isaac Newton By Patrick Moore (1986)
2  Isaac Newton’s Life By Alfred Rupert Hall (Microsoft Encarta) (1998)
3.  Philosophy 100 Essential Thinkers -Sir Isaac Newton By Philips Stokes (2002)
4.  The Story of Astronomy “The Clockwork Universe” By Peter Auguston (2008)
5.  Wikipedia – Sir Isaac Newton (December 15, 2010)
**************








வியாழன், 16 டிசம்பர், 2010

வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)



"காஸ்ஸினி அறிவு ஆர்வத்தில் இச்சை கொண்டவர். குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர். அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர். தொலைநோக்கிகள் மூலம் உளவும் கூர்மையான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டுபிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை."
டேடன் (Taton)
"கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்".
காலிலியோ (1564-1642)
முன்னுரை: உலகின் முதல் பெளதிக விஞ்ஞானி என்று அழைக்கப் படும் இத்தாலியில் தோன்றிய காலிலியோ, அடுத்து பிரிட்டாஷ் கணித விஞ்ஞானி ஐஸக் நியூட்டன், டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ், இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி ஆகிய நால்வரும் ஐரோப்பாவில் வானியலைக் கணித வடிவில் விஞ்ஞானம் ஆக்கிய முக்கிய மேதைகள் ஆவார். அவர்கள் யாவரும் காபர்னிக்கஸ் கூறிய பரிதி மைய நியதியை [Sun-centered System] மெய்யாகக் கருதிப், பண்டைக் காலப் புவிமையக் கோட்பாடைப் [Earth-centered System] புறக்கணித்தவர் !
காலிலியோ முதன் முதலில் வெள்ளியின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சியைத் தனது தொலைநோக்கியில் கண்டு பரிதி மைய நியதியை நிரூபித்துக் காட்டினார். பிற்போக்கான தொலைநோக்கியில் காலிலியோ முதலில் தவறாகப் புரிந்து கொண்டு கூறிய 'நீள்கோளச் சனியைத்' [Ellipsoidal Saturn], திருத்தி ஹியூஜென்ஸ் செம்மையான தனது தொலைநோக்கியில் சனிக்கோளைக் கண்டு, அதைச் சுற்றித் திடமான வளையங்கள் இருப்பதை முதலில் உலகுக்கு அறிவித்தார்! அவருக்குப் பிறகு, காஸ்ஸினி அந்தக் கருத்தை மீண்டும் விருத்தி செய்து, சனியின் வளையங்கள் திடமானவை [Solid Rings] அல்ல வென்றும், அவற்றிடையே எண்ணற்ற இடை வெளிகள் உள்ளன வென்றும் எடுத்துக் கூறினார்.
சூரிய மண்டலக் கோள்களில் நீர்வளம், நிலவளம், உள்நெருப்பு, காற்றுச் சூழ்வெளி யாவும் படைக்கப்பட்டு, அவற்றில் புல்லினம், உயிரினம், மானிடம் ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெறத் தகுதியுள்ள அண்டம் பூமி ஒன்றுதான்! ஆனால் எல்லாக் கோள்களிலும் எழில் மிகுந்த விந்தையாக, ஒளிமயமாக அநேக வளையல்கள் அணிந்தது சனிக்கோள் ஒன்று மட்டுமே! பூமியின் விஞ்ஞான மேதைகள் அவ்வரிய சனிக்கோளை 400 ஆண்டுகளுக்கும் மேலாக தொலை நோக்கி மூலமாகவும், விண்கப்பலை அண்ட வெளியில் ஏவியும் ஆராய்ந்து வருகிறார்கள்! காஸ்ஸினியின் பெயரால் 1997 இல் ஏவப்பட்டுப் பயணம் செய்யும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் ஆகஸ்டு 2004 முதல் சனிக்கோளை அடைந்து அரிய தகவல் அனுப்பி வருவதுடன் ஆறு ஆண்டுகளைக் கடந்தும் மேற்கொண்டு உளவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!
காலிலியோ விண்வெளியில் கண்டுபிடித்தவை

கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் 'பரிதி மைய நியதி' மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! பூமியைச் சுற்றி வரும் நிலவுக்குப் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி உண்டாகி முழுநிலவு, மறைநிலவு தோன்றுவதுபோல், பரிதியைச் சுற்றி வருவதால்தான் வெள்ளிக் கோளுக்கும் பிறைத்தோற்றம் [Phase] ஏற்படுகிறது என்று எடுத்துக் காட்டியவர், காலிலியோ.

அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் வரைந்து காட்டினார்! பரிதியின் சிவப்புத் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான 'நெப்டியூனை' [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ! பிறகு 230 ஆண்டுகள் கடந்து நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!


சனிக்கோளை முதலில் தொலைநோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹியூஜன்ஸ் [Christiaan Huygens], தானமைத்த முற்போக்கு தொலைநோக்கியில் உற்று நோக்கி, அக்கருத்தைத் திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! காலிலியோவின் கண்களுக்கு வளையங்கள்தான் சனியை முட்டை வடிவத்தில் காட்டி யிருக்க வேண்டும்!

காலிலியோதான் தனது தொலைநோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் 'நோக்காய்வு வானியலை' [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய 'விண்மீனின் தூதர்' [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை 'நவீன பெளதிகத்தின் பிதா' [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!


கிரிஸ்டியான்†ஹியூஜென்ஸ் வானியல் கண்டுபிடிப்புகள்

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் (1629-1695) காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த ஒரு டச் விஞ்ஞானி. இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறந்த ஆண்டும், பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறந்த ஆண்டும் ஒன்றுதான்! அப்போது வாழ்ந்து வந்த கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு பெரும் முன்னோடி விஞ்ஞானிகள் [காலிலியோ, நியூட்டன்] படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலை நோக்கியை விருத்தி செய்தவரும், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனியின் வளையத்தை முதலில் கண்டுபிடித்தவரும் ஹியூஜென்ஸ் ஒருவரே! ஆனால் அவரும் சனிக்கோளின் வளையங்கள் திடப் பிண்டத்தால் (Solid Rings) ஆனவை என்று தவறாகக் கூறினார்.


1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலைநோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலைநோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! தொலைநோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்!

சனிக்கோளின் அற்புத வளையங்கள் கண்டுபிடிப்பு

காலிலியோவின் தொலைநோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலைநோக்கியைத் தயாரித்து 45 ஆண்டுகள் கழித்து 1655 இல் கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதலில் கண்டுபிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றிவரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த 'திடவத் தட்டு ' [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், 'துளைத் தட்டு' [Donut Shape] என்றும் கூறினார்!


பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகியவற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] கண்டு பிடித்தார். அதன் பின் சனியின் வளையம் 'திடவத் தட்டு' என்னும் கருத்து மாறி, இடை வெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

வானியல் விஞ்ஞானி காஸ்ஸினி கண்டுபிடித்தவை

காஸ்ஸினி ஒரு கணித ஞானி. மேலும் அண்டக் கோள்களைக் கூர்ந்து உளவு செய்யும் வானோக்காளர் [Planet Observer]. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க, காஸ்ஸினி 1672 இல் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. அண்டக் கோள்களான வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகியவைத் தன்னைத் தானே சுற்றிவரும் காலத்தைக் கோள்களில் உள்ள நிரந்தரப் புள்ளிகளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் தொலைநோக்கி மூலம் பார்த்துப் பதிவு செய்தவர். அவர் கணித்த அண்டங்களின் சுற்றுக் காலங்கள், அவரது வாழ்நாளில் முரண்பாடுடைய புவிமைய நகர்ச்சிக்கு எதிராக எண்ணிக்கை நாட்களை அளித்தன. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் தனது தொலைநோக்கியில் சனியின் மிகப் பெரும் சந்திரன், டிடானை [Titan] முதலில் கண்டுபிடித்த பின், காஸ்ஸினி மற்றும் நான்கு சந்திரன்கள் சனியைச் சுற்றி வருவதை எடுத்துக் காட்டினார். 1652-1653 இல் காஸ்ஸினி முதன்முதல் ஒரு வால்மீனைக் கண்டு ஆராய்ந்தார். பூமியின் நிலவு பொழியும் வெளிச்சம், பரிதி மறைந்துள்ள சமயம் காலைக் கீழ்வானில், மாலை மேல் வானில் தெரியும் வெளிச்சம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்தி வால்மீனின் [Comets] நகர்ச்சிக் கோட்பாடுகளை அறிவித்தார்!

பொலோனா செயின்ட் பெட்ரோனியஸ் கோயிலில் [St. Petronius Church, Pologna] இஞ்னேஸியோ தாந்தே [Ignazio Dante] 1576 இல் பயன்படுத்திய 'பரிதிக் கடிகாரத்தைச்' [Gnomon or Sun Dial] 1653 இல் செப்பணிட்டுப் பெரிது படுத்தி, ஆண்டுக் காலண்டரைத் [Yearly Calendar] திருத்தம் செய்தார். பரிதியைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, சில அட்டவணைகளை 1662 இல் வெளியிட்டார். 1664 இல் வால்மீன் ஒன்றைக் கண்டு அதன் நகர்ச்சிப் பின்பற்றி, அது பரிதியைச் சுற்றி வட்ட வீதியில் வருகிறது என்று அறிவித்தார். அதே ஆண்டு மிக நுணுக்கமான சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், வியாழன் தன்னச்சில் சுற்றும் நாட்களைக் கணித்தார். அத்துடன் வியாழன் துருவப் பகுதிகளில் தட்டையாக இருப்பதாகவும் கூறினார். வியாழனுடைய பட்டைகளையும், புள்ளிகளையும் கண்டறிந்து பதிவு செய்தார். செவ்வாய்க் கோளின் சுய சுற்றைக் கணக்கிட்டு மூன்று நிமிடத் துல்லிமையில் பதிந்தார். 1668 இல் வியாழக் கோளின் சந்திரன்களைக் கண்டு பல விபரங்களைப் பதிவு செய்தார்.

ஒளியின் வேகத்தை அறிய விபரங்கள் சேகரித்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ரோமர் [Romer] அவரது தகவல்களைப் பயன்படுத்தி ஒளிவேகத்தைக் கணித்தார். சனியின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தபின், 1975 இல் வளையங்களை தொலைநோக்கியில் ஆராய்ந்தார். சனியின் வளையங்கள் தனித்தனியானவை என்றும், தொடர்ந்த வட்டமல்ல என்றும், இடைவெளி உள்ளவை என்றும், அவை கோடான கோடி சிறு, சிறு துணைக் கோள்கள் போல் சுற்றி வருகின்றன வென்றும் அறிவித்தார். 1679 இல் பூமியின் நிலவை நோக்கிப் பெரிய வரைப்படமாய் வரைந்து 'விஞ்ஞானப் பேரவைக்குச்' [Academy of Sciences] சமர்ப்பித்தார். காமிரா நிழற் படங்கள் [Photography] தோன்றிய காலம்வரை, காஸ்ஸினியின் படமே ஓர் உதவும் நிலவுப் படமாக இருந்து வந்தது. 1680 இல் பூமிக்கும், பரிதிக்கும் உள்ள ஒப்புமை நகர்ச்சி வேகங்களை ஆராய்ந்து, அண்டக் கோள்களின் சுற்றுவீதிகளைக் கணித்தார். அவை 'காஸ்ஸினியின் வளைகோடுகள்' [Cassini Curves] என்று அழைக்கப் பட்டன. ஆனால் அக்கோடுகள் கெப்ளர் [Kepler] அனுமானித்த நீள்வட்ட வீதிகளை [Elliptical Orbits] ஒத்திருக்க வில்லை!


வானியலில் தேர்ச்சி பெற்ற காஸ்ஸினி அத்துடன் 'நோக்கியல் விஞ்ஞானம்' [Optics], 'திரவழுத்தவியல்' [Hydraulics], 'வரைப்படவியல்' [Cartography], சிவில், ராணுவ எஞ்சினியரிங் [Civil Engineering & Military Engineering] ஆகிய துறைகளிலும் நுணுக்க அறிவு உள்ளவராய் இருந்தார். அவரது திரவழுத்தவியல், பொறியியல் [Hydraulics, Engineering] திறமையைப் பாராட்டிப், போப்பாண்டவர் 1665 இல் ரோமானியக் கோயில்களின் மாநில நீர்நிலை வாரியங்களின் மேற்பார்வை அதிபராக நியமித்தார். ரோமாபுரியில் இருந்த போது, காஸ்ஸினி டைபர் நதியின் பாலத்தை உறுதிப் படுத்தியதாகத் தெரிகிறது.

கியோவன்னி காஸ்ஸினியின் வாழ்க்கை வரலாறு.

1625 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஜெனோவா [Genoa, Italy] என்னும் நகரில் ஜேகப் காஸ்ஸினி, ஜூலியா குரோவேஸி [Jacopo Cassini, Julia Crovesi] ஆகிய இருவருக்கும் பிறந்தார். பள்ளிப் படிப்பை அவர் வல்லெபோன் என்னும் ஊரில் முடித்த பின், கல்லூரிப் படிப்புக்கு ஜெனோவா நகருக்குச் சென்றார். கல்லூரியில் கவிதை, கணிதம், வானியல் துறைகளில் மிக்க ஆர்வம் காட்டித் தனது மேதமையை வெளிப்படுத்தினார், காஸ்ஸினி.

முதலில் காஸ்ஸினி வானியலில் [Astronomy] மனது ஊன்றாமல் ஜோதிடத்தில் [Astrology] ஈடுபாடு மிகுந்து தேர்ச்சி பெற்றார்! ஆனால் ஜோதிட முன்னறிவிப்பில் [Predictions] அவருக்கு நம்பிக்கை யில்லை! அவரது ஜோதிட வல்லமையை மெச்சி, 1644 இல் பொலோனா நகரின் மேலவை உறுப்பாளி [Senator] மார்க்குவிஸ் மல்வாஸியா காஸ்ஸினியை அழைத்து, பொலோனாவில் கட்டப்படும் பன்ஸானோ வானோக்ககத்தில் [Panzano Observatory] பணி செய்யும்படி வேண்டினார். அப்போது காஸ்ஸினிக்கு வயது பத்தொன்பது! ஆனால் கல்லூரியில் அடுத்து நான்கு ஆண்டுகள் படித்து, ஒருவிதப் பட்டமும் பெறாமல் 1948 முதல் பன்ஸானோ நோக்ககத்தில் சேர்ந்து பணியாற்றினார்! காஸ்ஸினி நோக்ககத்திற்கு வேண்டிய ஆய்வுச் சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்கி அதை இயக்கத் துவங்கினார். இரண்டாண்டில் நோக்ககத்தை விருத்தி செய்து, செனட்டரின் பெரும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றார்.


அப்போது புகழ் பெற்ற விஞ்ஞானிகளான பட்டிஸ்டா ரிக்கியோலி [Battista Riccioli], பிரான்ஸெஸ்கோ கிரிமால்டி [Francesco Grimaldi] போன்றோரிடம் தனிப்பட்ட முறையில், காஸ்ஸினி நிறையக் கற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும்தான் பின்னால் 'ஒளித்திரிபைக்' [Diffraction] கண்டு பிடித்தார்கள். செனட்டர் மல்வாஸியாவின் ஆதரவில் 1650 இல் பொலோனா பல்கலைக் கழகத்தில் வானியல், கணிதத் துறைகளின் பேராசிரியராகப் பதவி பெற்று, காஸ்ஸினி ஆசிரியராகவும் பணி செய்தார்.

பிரென்ச் நாட்டுக் குடிநபரான விஞ்ஞானி காஸ்ஸினி

பொலோனா நோக்ககத்தில் காஸ்ஸினி 1652 ஆண்டில் ஒரு வால்மீனைக் கண்டு அதன் நகர்ச்சியை ஓராண்டு காலம் பதிவு செய்து வெளியிட்டார். அக்காலங்களில் அவர் டைகோ பிராஹோ [Tycho Brahe] 1659 இல் பிறப்பித்த புவி மைய ஏற்பாடை [Earth-centered System] நம்பினார்! அதாவது நிலாவும், பரிதியும் பூமியைச் சுற்றிவர, மற்ற கோள்கள் [செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி] சூரியனைச் சுற்றுவதாகக் கூறிய டைகோ பிராஹோவின் கருத்தை ஏற்றுக் கொண்டார்! பிறகு அக்கருத்து பிழையான தென்று உணர்ந்து, காஸ்ஸினி காபர்னிகஸ்ஸின் [Copernicus] பரிதி மையக் கோட்பாடை ஒப்புக் கொள்ளும்படி நேரிட்டது!


காஸ்ஸினியின் அண்டக்கோள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் பாராட்டப் பட்டன. 1668 இல் பிரான்ஸின் அரசர் பதினான்காம் லூயி [Louis XIV] அவர்களிடமிருந்து அரண்மனை விருந்தில் கலந்து கொள்ள, காஸ்ஸினிக்கு அழைப்பிதழ் வந்தது. பாரிஸில் வானோக்ககம் ஒன்று கட்டப்பட்டு அதன் தலைமைப் பதவி பெரும் வருவாயுடன் அவருக்காகக் காத்திருந்தது! பதினான்காம் லூயி 1671 இல் அளித்த பாரிஸ் வானோக்ககத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு, காஸ்ஸினி பிரென்ச் நாட்டின் குடிமகனாய் ஆனார். 1974 இல் ஜெனிவி டி லைஸ்டர் [Genevieve de Laistre] என்னும் ஓர் எழில்மாதை மணந்து பாரிஸில் நிரந்தரமாகக் குடியேறினார். 1677 இல் ஜேக்ஸ் காஸ்ஸினி [Jacques Cassini] என்னும் புதல்வன் அவருக்குப் பிறந்தான். தந்தையின் தடத்தில் நடந்து வானியல் விஞ்ஞானியாய்த் தேர்ச்சி பெற்றுத் தந்தை முதுமை அடைந்ததும், ஜேக்ஸ் காஸ்ஸினியே, பின்னால் பாரிஸ் வானோக்ககத்தின் தலைவர் பதவியைப் பெற்றார்!

1789 இல் பிரென்ச் விஞ்ஞானி பியர் ஸைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] சனிக்கோளின் வளையங்கள் மிகச் சிறிய துணுக்குகள் கொண்டவை என்றும், அவையே சூரிய ஒளியைப் பிரதிபலித்துச் சுடரொளி வீசுகின்றன என்று விளக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் [James Maxwell (1831-1879)] கோடான கோடித் துணுக்குகள் தூரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேகங்களில் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் வளையங்கள் நீடித்துச் சனிக்கோளைச் சுற்றி நிலை பெற முடிகிறது என்று கணித மூலம் 1857 ஆம் ஆண்டில், நிரூபித்துக் காட்டினார்! சனியைச் சுற்றித் திடவ வடிவு வளையமோ [Solid Ring], திரவவாயு வளையமோ [Fluid Ring] இருந்தால் அவை சனியின் கவர்ச்சி விசையால் இழுக்கப் பட்டுத் தளத்தில் மோதி நொறுங்கி விடலாம் என்றும் ஜேம்ஸ் மாக்ஸ்வெல் கூறினார்!


காஸ்ஸினியின் இறுதிக்கால வாழ்க்கை

1695 இல் பதினெட்டு வயது மகன் ஜேக்ஸ¤டன் காஸ்ஸினி இத்தாலிக்குச் சென்றார். அங்கே உள்ள பல புவித்தள ஆய்வு நோக்குகளை [Geodesic Observations] இருவரும் பார்வை யிட்டனர். பொலோனாவுக்குச் சென்று தான் முப்பது ஆண்டு களுக்கு முன்பு ஆக்கிய சூரியக் கடிகாரத்தைக் காஸ்ஸினி செப்பணிட்டார். 1709 இல் மகன் ஜேக்ஸ் காஸ்ஸினி பாரிஸ் நோக்ககத்தில் சிறுகச் சிறுகத் தந்தையின் பணிகளை மேற்கொண்டார். தந்தையின் உடல்நிலை குன்ற ஆரம்பித்தது. குறிப்பாக கியோவன்னி காஸ்ஸினியின் கண்ணொளி மங்கிப் போய்க் கொண்டிருந்தது! இல்லச் சிறையில் [House Arrest] தள்ளப்பட்ட முதிய காலிலியோ பல்லாண்டுகள் விண்வெளி அண்டங்களையே பார்த்துப் பார்த்து ஒளியிழந்தது போல், காஸ்ஸினியின் கண்களும் அண்டக் கோள்களைக் கூர்ந்து பார்த்து ஒளி மங்கி 1711 இல் குருடாகிப் போயின! 1712 ஆம் ஆண்டு பாரிஸில் கியோவன்னி காஸ்ஸினி தனது 87 ஆம் வயதில் காலமானார்.


கியோவன்னி காஸ்ஸினி பல்கலைக் கழகத்தில் எந்தப் பட்டமும் பெறாத வானியல் விஞ்ஞானி! அவர் ஒரு நியதிவாதி [Theoretician] அல்லர்! மேதமை மிக்க கூரிய வானோக்காளர் [Gifted Astronomical Observer]! காஸ்ஸினி 1667 இல் பிரான்ஸின் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர் [Member, Academie Royale des Sciences] ஆனார். 1672 ஆம் ஆண்டு பிரிட்டன் கியோவன்னி காஸ்ஸினியின் கணித விஞ்ஞானச் சாதனைகளைப் பாராட்டி, அவரை ராஜீயக் குழுவின் மதிப்பாளி யாகக் [Fellow of Royal Society] கெளரவித்தது. முரண்பாடில்லாத அவரது உறுதியான, மெய்யான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், நியூட்டனுக்கு முந்தி வாழ்ந்த வானியல் விஞ்ஞான மேதைகளுக்குள் உச்ச இடத்தை அவருக்கு நிச்சயம் அளிக்கின்றன!


படங்கள் : நாசா

தகவல்:

1. Giovanni Domenico Cassini, Catholic Encyclopedia

2. Giovanni Casinni, U.K. History of Mathematicians By: E.F. Robertson, J.J. O 'Connor.

3. Cassini, Giovanni Domenico, Astronomical Institutions

4. Cassini I Gian Domenicao, Catalog of the Scientific Community

5 Giovanni Cassini By : J. J. O'Connor & E. F. Robertson

6. http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Cassini.html (Cassini Biography

வெள்ளி, 10 டிசம்பர், 2010

புதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி !

புறவெளிப் பரிதிகளைச் சுற்றும்
பூத வடிவான ஐந்து
பூமிகளைக் கண்டுபிடித்தது !
கெப்ளர் விண்ணோக்கி !
புதிய பூமியின்
சூழ்வெளியை அளந்துள்ளது
முதன்முதல் !
பரிதியைப் போல்
தனியாய் ஒளிவீசும்
ஒளிமந்தைப் பரிதிகளைச் சுற்றும்
அண்டக் கோள்கள்
ஆயிரம் ஆயிரம் !
ஈர்ப்பு விண்வெளியில்
பூமியைப் போல்
நீர்க்கோள் ஒன்றை
நிபுணர்
பார்த்திலர் இதுவரை !
சில்லி வானோக்கி மூலம்
விண்வெளி வல்லுநர்
கண்டனர் புதுக்கோள் ஒன்றை !
நமது பரிதிக் கப்பால்
இன்றுவரை
முன்னூறு கோள்கள் கண்டாலும்
மித வெப்ப முடைய
மீறாத குளிருடைய
உயிரின வசிப்பு அரங்கில்
உலாவி வரும்
அண்டக் கோள்கள் ஆயிரம்
காத்துக் கிடக்கும்
கண்டுபிடிக்க !


"இந்த அசுரப் பூமிதான் (Super Earth) முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட வாயுச் சூழ்வெளியுள்ள தூரக்கோள் (Exoplanet). புதிய கணிப்பு அளப்பில் அந்தச் சூழ்வெளி என்ன வாயுக்களால் ஆனது என்று சொல்ல முடியாது. அந்தக் கோள் மெய்யான இயல்பைக் காட்டாமல் தன்னை மூடி நாணிக் கொண்டுள்ளது."

ஜேகப் பீன் (NASA Astronomer, Harvard-Smithsonian University Center for Astrophysics)

"தூரக்கோள் ஆராய்ச்சியில் என்ன நிகழ்கிறது என்று முன்னறிய அசுரப் பூமிகளின் கண்டுபிடிப்புகள் நமக்கு உதவி புரியும். ஏனெனில் அவைதான் நாமறிந்த பூமி, வெள்ளி, செவ்வாய் போன்ற திடக் கோளிலிருந்து, யுரானஸ், நெப்டியூன் போன்ற பனிக் கோள்களுக்கு மாறுபடும் ஒப்பீடாக இருக்கும்."

ஜேகப் பீன் (Harvard-Smithsonian University Center for Astrophysics)

"இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்."

ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)


"திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள கோள்களின் சுற்றுவீதியில் "உயிரின வசிப்பு அரங்கம்" (The Habitable Zone) என அழைக்கப்படும் பகுதியில் விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற அண்டக்கோள்கள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடிப்பது எமது குறிக்கோள். அப்படி யானால் அந்த அரங்கில் உயிரினம் விருத்தி பெறப் பற்பல பகுதிகள் உள்ளன என்று அர்த்தமாகிறது ! கெப்ளர் ஒளிக்கருவி அப்படி நூற்றுக் கணக்கில் இருக்கும் அண்டக் கோள்கள் சுற்றுவதைக் கண்டுபிடிக்க டிசைன் செய்யப் பட்டுள்ளது. நாங்கள் தேடிப் போவது மித வெப்பமான, மிதக் குளிரான கோள்களைக் கண்டுபிடிக்கத்தான் !"

வில்லியம் பொரூக்கி (Bill Borucki, Kepler Pricipal Scientist) (March 6, 2009)

பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி ! அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas)


"புதிய பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்."

ஸ்டெ•பினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

"மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்."

அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London's Science Museum]

"அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வசிப்புக் கேற்ற அரங்குகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்."

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech's Michelson Science Center]


"பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்."

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

"தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !"

மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)


பூமியைப் போன்ற புதிய கோள் தேடும் தொலைநோக்கிகள்

1984 ஆம் ஆண்டில் "படப் பரிமாண முறையில்" (Photometric Method) பூமியைப் போன்ற உயிரினம் வாழும் கோள்களைத் தேடி உளவ முடியும் என்று வில்லியம் பொரூக்கி (William Borucki) என்னும் பிரதம உளவு விஞ்ஞானி புதிய கருத்தை வெளியிட்ட பிறகு முதல் புறவெளிக் கோள் 1992 இல் கண்டுபிடிக்கப் பட்டது. 2009 ஆண்டு மத்திம வேனிற் காலத்தில் கெப்ளர் விண்ணோக்கி புறவெளிப் பரிதிகளைச் சுற்றும் ஐந்து புதிய கோள்களைக் கண்டுபிடித்தது. அவை தம் அருகில் உள்ள பரிதியை நெருங்கிச் சுற்றிவரும் சூட்டுக்கனல் வாயுக் கோள்கள். அவை அனைத்தும் நமது பூமியை விடப் பெரியவை. நமது பூதக்கோள் வியாழனைப் போன்றவை ஆயினும் அவை குளிர்க்கோள்கள் அல்ல ! கெப்ளர் விண்ணோக்கி நமது பரிதிக்கு அப்பால் ஒளிந்துள்ள புறப்பரிதி மண்டலக் கோள்களைத் (Extrasolar Planets) தொடர்ந்து தேடி வருகிறது. புறப்பரிதியை நெருங்கிச் சுற்றும் வாயுக் கோள்களை கெப்ளர் தொலைநோக்கி கண்டாலும், அதன் பிரதான குறிப்பணி பூமியை ஒத்த கோள்களை உளவிக் கண்டுபிடிப்பதே ! 2009 ஏப்ரலில் கெப்ளர் விண்ணோக்கி முதல் 10 நாட்களில் மட்டும் சுமார் 53,000 விண்மீன்களைத் தேடியது. அது முதல் 43 நாட்களில் சுமார் 170,000 விண்மீன்களை உளவி 306 புதிய கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. 2010 ஆண்டில் இன்னும் 400 புதுக் கோள்களை உளவிக் கண்டுபிடித்துள்ளது. அவற்றின் விபரங்களை 2011 ஆரம்ப மாதங்களில் நாசா வெளியிடும்.

இருபது ஆண்டுகளாக ஹப்பிள்" தொலைநோக்கி விண்வெளியை நோக்கி விஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது. புதுப்பிக்கப்பட்டு பேரளவு பணிபுரியும் ஹப்பிள் 2014 ஆண்டில் ஓய்வெடுக்கும் என்று தீர்மானம் செய்யப் பட்டுள்ளது. அது செய்துவரும் விண்ணோக்குப் பயணத்தைத் தொடரப் போகும் புதிய நூதன "ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி" (James Webb Space Telescope - JWST) 2014 ஆண்டுக்குள் தயாராகி விடும். வெப் விண்ணோக்கி முக்கியமாக உட்சிவப்பு அலை நீளத்தில் (500 நானோ மீடர் முதல் 24 நானோமீடர் வரை) (Infrared Wavelengths 500 nanometers to 24 nanameters) பணி புரியும். அதன் குறிப்பணி நமது பூமியைப் போன்ற புதிய பூமிகளை உளவி அறிவது. 2020 ஆண்டில் ஜப்பானின் "ஸ்பைகா" (SPICA - Space Infra-Red Telescope for Cosmology and Astrophysics) உட்சிவப்பு விண்ணோக்கி விண்வெளியில் புதிய பூமிகளை நோக்க ஏவப்படும்.


கொதி ஆவி அல்லது வெப்ப வாயு எழுப்பும் ஒரு புதிய பூமி கண்டுபிடிப்பு

புறவெளிப் பரிதி விண்வெளியில் (Extra Solar Space) செந்நிறக் குள்ளிச் சூரியனைச் (Red Dwarf Star) சுற்றும் இரண்டு புனைச் சந்திரன்கள் (Two Hypothetical Moons) கொண்ட ஒரு தூரக்கோளின் (Exoplanet GJ 1214b) அடர்ந்த சூழ்வெளிக் கொதிவாயு மண்டலத்தை விஞ்ஞானிகள் முதன்முதல் கண்டுபிடித்தது "இயற்கை" பிரிட்டிஷ் இதழில் (டிசம்பர் 2, 2010) வெளியாகியுள்ளது. அந்தக் கோள் பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. நமது பூமியைப் போல் 3 மடங்கு வடிவமும், 7 மடங்கு நிறையும் கொண்டது. பூமியை ஒத்த அம்மாதிரிக் கோள்கள் "அசுரப் பூமிகள்" (Super Earths) என்று குறிப்பிடப் படுகின்றன ! அக்கோளின் சூழ்வெளியில் நீராவியுள்ள திண்ணிய வாயு மண்டலம் (Dense Atmosphere of Water Steam) நமது வெள்ளிக்கோள் போல் (Venus) போர்த்தியுள்ளது என்று அறியப் படுகிறது.


தொடர்ந்து வரும் 2011 ஆரம்ப மாதங்களில் சோதனைகளில் நிறப்பட்டைகள் ஆராயப்பட்டு அவை என்ன மூலக்கூறுகள் என்று அறியப்படும். இதுவே விஞ்ஞானிகள் முதன்முதல் புறப் பரிதிக் கோள் ஒன்றின் சூழ்வெளி வாயு மண்டலத்தின் பரிமாணத்தைக் கண்டது ! இந்த அசுரப் பூமி (Exoplanet GJ 1214b) முதன்முதல் 2009 நவம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது.

"இந்த அசுரப் பூமிதான் (Super Earth) முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட வாயுச் சூழ்வெளியுள்ள தூரக்கோள் (Exoplanet). புதிய கணிப்பு அளப்பில் அந்தச் சூழ்வெளி என்ன வாயுக்களால் ஆனது என்று சொல்ல முடியாது. அந்தக் கோள் மெய்யான இயல்பைக் காட்டாமல் தன்னை மூடி நாணிக் கொண்டுள்ளது." என்று ஜேகப் பீன் (NASA Astronomer, Harvard-Smithsonian University Center for Astrophysics) கூறுகிறார். புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட இந்த அசுர பூமி ஒன்று மெல்லிய நீராவி மூடிய சூழ்வெளி கொண்டதாக இருக்கலாம். அல்லது அடர்ந்த வாயு மண்டலம் சூழ்ந்த கோளாக இருக்கலாம். நீராவி முகில் என்றால் அது பனி படர்ந்த கோளாக இருக்க வேண்டும். அது வெறும் வாயு முகிலாக இருந்தால் ஒன்று வெள்ளிபோல் பாறைக் கோளாக அல்லது யுரேனஸ், நெப்டியூன் போல் வாயுக் கோளாக இருக்க வேண்டும். புதிய பூமி வாயுச் சூழ்வெளியுள்ள ஒரு திடக்கோள் (Solid Planet) என்பது விஞ்ஞானிகளின் யூகிப்பு.

மங்கலான ஒரு பரிதியை அந்தக் கோள் 1.3 மில்லியன் மைல் தூரத்தில் (0.014 AU) (1 Astronomical Unit = Distance Between our Sun & Earth =93 Million Miles) சுற்றி வருகிறது. நமது பரிதியிலிருந்து புதன் 36 மில்லியன் மைல், வெள்ளி 67 மில்லியன் மைல், பூமி 93 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகின்றன. அதாவது புதிய பூமி அதன் பரிதிக்கு மிக நெருங்கிச் சுற்றி வருவதால் அது ஒரு கொதிக்கும் கோளாக (Hot Steaming Planet) இருக்க வேண்டும் ! அத்தகைய கோர உஷ்ணத்தில் எந்த உயிரினமும் வசிக்க இயலாது ! அதாவது புதிய பூமி உயிரின வசிப்பரங்கத்தில் (Habitable Zone) தனது பரிதியைச் சுற்றி வரவில்லை ! நமது பூதக்கோள் வியாழன் போன்ற வாயுக்கோளில் ஹைடிரஜன், மீதேன், சோடியம் ஆவி வாயு முகிலை விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார். புதிய பூமியில் அதுபோல் இரசாயனக் கைத்தடங்கள் (Chemical Fingerprints) இருப்பது தென்பட்டது. கூர்ந்து நோக்கினால் அங்கே கொதி நீராவியோ அல்லது வாயு முகிலோ இருப்பதாகக் கருதப் படுகிறது. 2011 ஆண்டு ஆரம்பித்தில் புதிய பூமியின் சூழ்வெளியில் உள்ள வாயுக்கள் என்ன வென்று உட்சிவப்புக் கண்ணுள்ள ஸ்பிட்ஸர் விண்ணோக்கி (Spitzer Spacr Telescope) மூலம் விஞ்ஞானிகள் ஆழ்ந்து உளவி அறிவிப்பார்.


புதிய பூமிகளைத் தேடிவரும் நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி !

2009 மார்ச் 6 ஆம் தேதி நாசா விண்வெளித் தேடல் ஆணையகம் பிளாரிடா கேப் கெனவரல் ஏவு தளத்திலிருந்து டெல்டா -2 ராக்கெட்டை (Delta II Rocket) உந்த வைத்து, இதுவரை அனுப்பாத மிகப் பெரிய காமிராவைத் தாங்கிய கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியை (Kepler Space Telescope) வெற்றிகரமாக அனுப்பியது. ஜெர்மன் வானியல் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) நினைவாக ஏவப்பட்ட அந்த நூதனத் தொலைநோக்கி பூமியைத் தொடர்ந்து பரிதி மையச் சுற்று வீதியில் (Earth-Trailing Heliocentric Orbit) சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் தொலைநோக்கி பூமியைப் போல் பரிதியிலிருந்து அதே தூரத்தில் (1 AU Miles) 372.5 நாட்களுக்கு ஒருமுறைச் சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் சுமார் மூன்றரை ஆண்டுகள் விண்வெளியைக் கண்ணோக்கி வரும். மூன்றே காலடி விட்டமும் 1039 கி.கிராம் எடையும் கொண்டது. கெப்ளர் தொலைநோக்கியை நாசா அனுப்பியதின் குறிக்கோள் இதுதான் : மூன்றரை அல்லது நான்கு ஆண்டுகளாய் விண்வெளியில் உள்ள 100,000 விண்மீன்களை உளவிப் பூமியைப் போலுள்ள மித வெப்பமான, மீறிய குளிரற்ற உயிரினம் வாழத் தகுதியுள்ள புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும்.

1995 ஆண்டு முதல் இதுவரை [மார்ச் 2009] வானியல் விஞ்ஞானிகள் பூமியைப் போல் உள்ள 340 அண்டக் கோள்களை விண்வெளியில் கண்டுபிடித்துப் பதிவு செய்துள்ளார். அவை யாவும் உயிரின வளர்ச்சிக்கு ஆதரவாக இல்லாத பூதக் கோள் வியாழனைப் போல் பெருத்த வாயுக்கோள்கள். ஆனாலும் அக்கோள்களில் நீர்க்கோளான பூமியைப் போல் உயிரினம், பயிரினம் வாழும் ஓர் உலகத்தை எவரும் கண்டுபிடித்ததாக அறியப் படவில்லை ! விஞ்ஞானிகள் தேடிப் போவது நீர் திரமாக நிலவ ஏற்புடைய மித வெப்பமான, மிதக் குளிரான கோள்களையே ! அத்தகைய கோள்கள் சுமார் 50 இருக்கலாம் என்று கெப்ளர் திட்டப் பிரதம விஞ்ஞானி வில்லியம் பொரூக்கி மதிப்பீடு செய்கிறார். நமது பால்வீதி காலாக்ஸி ஒளிமந்தைகளில் சுயவொளி வீசும் சுமார் 100,000 விண்மீன்களை கெப்ளர் தொலைநோக்கி சுமார் மூன்றரை ஆண்டுகள் கண்காணித்து வரும். அப்போது அந்த விண்மீன்களைச் சுற்றிவரும் அண்டக் கோள்களின் நகர்ச்சியைக் கூர்ந்து நோக்கும் கெப்ளரில் அமைக்கப் பட்டுள்ள "ஒளிமானி" (Photometer OR Lightmeter). சுயவொளி உள்ள விண்மீனின் ஒளிவீச்சைச் சுற்றிவரும் அண்டக் கோள் ஒன்று குறுக்கிடும் போது உண்டாகும் ஒளி மங்குதலை ஒளிமானி உடனே பதிவு செய்யும் ! அவ்வித ஒளிமங்குதலே அண்டக் கோள் ஒன்று அந்த விண்மீனைச் சுற்றிவருவதை நிரூபித்துக் காட்டும் ! நாசாவின் இந்த நான்கு வருடக் கெப்ளர் திட்டத்துக்கு ஆகப் போகும் செலவு : 600 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) !


எத்தனை வகையான புதிய பூமிகள் உள்ளன ?

அண்டவெளித் தேடலில் கெப்ளர் தொலைநோக்கிச் சுயவொளி வீசும் சுமார் 100,000 விண்மீன்களை ஆராயும் என்பது திட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்றாய் இருக்கிறது ! கெப்ளர் விண்ணோக்கி எண்ணிக்கையில் 500 பூமியை ஒத்த பாறைக் கோள்களையும் 1000 பூதக்கோள் வியாழனைப் போன்ற வாயுக் கோள்களையும் பதிவு செய்யும் திறமை கொண்டது ! இதுவரை (2009 மார்ச்) கண்டுபிடித்த 340 கோள்களில் பெரும்பான்மையானவை பூதக்கோள் வியாழனைப் போன்ற வாயுக் கோள்களே ! கெப்ளர் ஒளிக்கருவி நோக்கப் போகும் அண்டக் கோள்களை மூவகையாகப் பிரிக்கலாம் !

1. பூத வாயுக் கோள்கள் (Gas Giants) (பரிதியைச் சுற்றும் வியாழன், சனி போன்றவை) விண்மீன்களைத் வெகு தொலைவில் தூரப் பாதையில் சுற்றி வருபவை !

2. பெரு வெப்பக் கோள்கள் (Hot Super Earths) (பரிதியை வெகு அருகில் சுற்றும் புதன் கோள் போன்றவை). இவ்வகைக் கனல்கோள்கள் விண்மீன்களை வெகு அருகில், வெகு விரைவில் சுற்றி வருபவை !

3. பூதப் பனிக்கோள்கள் (Ice Giants) (பரிதியைச் சுற்றும் யுரேனஸ், நெப்டியூன் போன்றவை) விண்மீன்களைத் வெகு தொலைவில் தூரப் பாதையில் சுற்றி வருபவை !

இம்மூன்று வகைகளில் விஞ்ஞானிகள் குறிப்பாகத் தேடுவது நமது பூமி வடிவத்துக்கு சற்று பெரிய அல்லது சற்று சிறிய உருவத்தில் உள்ள மித தட்ப-வெப்ப நிலைக் கோள்களே ! அத்தகைய கோள்களில்தான் நீர் திரவமாக இருந்து உயிரினம், பயிரினம் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.


கெப்ளர் விண்ணோக்கி நான்கு வகையான விண்மீன்களை அண்டவெளியில் ஆராயும் :

1 எ•ப் -வகை விண்மீன்கள் (Type F Stars) : (ஒளியும் உருவமும் பூமியின் பரிதி விட மிகையானது)

2. இ -வகை விண்மீன்கள் (Type E Stars) : (ஒளியும் உருவமும் பூமியின் பரிதியை ஒத்தது)

3. கே -வகை விண்மீன்கள் (Type K Stars) : (ஒளியும் உருவமும் பூமியின் பரிதியை விடக் குறைந்தது)

4 எம் -வகை விண்மீன்கள் (Type M Stars) : (ஒளியும் உருவமும் பூமியின் பரிதியை விடக் குறைந்தது)

கெப்ளர் விண்ணோக்கி 4 ஆண்டுகள் நமது நிலவின் பரப்பைப் போல் 500 மடங்கு பகுதியை ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெப்ளர் விண்சிமிழில் அமைக்கப்படுள்ள "ஒளிக்கருவி" (Photometer) ஒரே சமயத்தில் பற்பல விண்மீன்கள் வீசும் ஒளியை 20 ppm துல்லிமத்தில் (Parts per Million Accuracy) துருவிக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. கெப்ளர் கண்டுபிடிக்கும் புதிய பூமிகளின் விபரம் 2012 ஆம் ஆண்டில்தால் வெளியிடப்படும் என்று நாசா கூறுகிறது.


புதிய பூமிகளில் உயிரின விருத்திக்கு உள்ள தகுதிகளைத் தேடல்

1992 ஆம் ஆண்டு முதன்முதல் 2009 அக்டோபர் மாதம் வரை விஞ்ஞானிகள் பூமியைப் போலுள்ள 400 மேற்பட்ட அண்டக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவற்றில் பெரும்பான்மையானவை பூதக்கோள் வியாழனை ஒத்த வாயுக் கோள்களே ! 2009 மார்ச் 7 ஆம் தேதி விண்வெளியில் நமது பால்வீதிப் பரிதியைச் சுற்றி வர அனுப்பிய கெப்ளர் விண்ணோக்கியின் கூரிய ஒளிக்கண் குறைந்தது 500 புதிய பூமிகளைக் கண்டுபிடித்துக் காட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது ! அந்த விண்வெளித் தேடல் முடிவுகளை நாசா 2012 ஆம் ஆண்டில்தான் வெளியிடும் என்று தீர்மானமாக அறிவித்துள்ளது ! 2015 முதல் 2025 ஆண்டு வரை மூன்று முற்போக்கு விண்ணோக்கிகளை நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. முதலாவது "விண்வெளி நுண்ணோக்கிக் குறிப்பணி" [Space Interferometry Mission (SIM)], இரண்டாவது "பூமியை ஒத்த கோள் நோக்கி" [Terrestrial Planet Finder (TPF)], மூன்றாவது "உயிரினம் நோக்கி" [Life Finder (LF)]. "சிம்" விண்ணோக்கி பல்லடுக்குத் தொலைநோக்கிகளைக் கொண்டு ஒளிமூலம் விண்மீன்களைத் துருவிப் (Multiple Telescopes to Map Stars) புதிய உலகங்களைக் கண்டுபிடிக்கும். "டிபியெ•ப்" விண்ணோக்கி புதிய பூமியைக் கண்டுபிடித்து உயிரினம் வாழத் தகுதி உள்ளதா வென்று இரட்டைப் பணிகள் புரியும். இறுதியாக 2025 (?) ஆண்டில் ஏவப்படும் "உயிரினம் தேடி" விண்ணுளவி கண்டுபிடித்த ஒரு புதிய பூமியில் நிகழும் உயிரியல் இயக்கங்களை உளவி அறிந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.


தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe - National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe - How Many Planets Surround Other Star Systems ? & Are There Other Planets Like Earth ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope - Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science - Webster's New world [1998]