"அறிவியலில் இறங்கினால் நாம் நாத்திகன் ஆகிவிடுவோம். ஆழ்ந்து இறங்கினால் மீண்டும் ஆத்திகன் ஆகிவிடுவோம்."
சனி, 17 செப்டம்பர், 2011
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு !
ஊழி முதல்வன் விட்ட பெருமூச்சில்
உப்பிடும் பிரபஞ்சம்
சப்பிக் போய் விடும்
ஒரு யுகத்தில் !
சுருங்கி மீண்டும்
உயிர்தெழும் வேறு பிரபஞ்சம் !
உதிக்கும் விண்மீன்கள்
ஈர்த்துச்
சுற்ற வைக்கும்
புதிய அண்டக் கோள்களை !
கோடான கோடிப் பரிதிகள் நம்
சூரிய மண்டலம் போல்
இயங்கும் !
சுய ஒளிவீசும்
ஒற்றை நியூட்ரான் விண்மீனைச்
சுற்றிவரும்
வைரக்கோள் ஒன்றைக்
கண்டு பிடித்துள்ளார் !
புதுவிதக் கோள்களை
விண்ணோக்கிகள் தேடி வருதப்பா !
இன்னமும்
கண்ணுக்குத் தெரியாமல்
விண்மீன் கோள்கள் கண்டுபிடிக்கக்
காத்துக் கிடக்கும்
நூற்றுக் கணக்கில் ! “சிமிட்டும் விண்கோளின் (Pulsar PSR J1719–1438) அற்புதத் துணைக்கோளாக ஒற்றை வைரக்கோள் காணப்படுவது ஒரு விதிவிலக்கே அல்லாமல் பொதுவிதி என்று கூறுவதற்கில்லை”. பெஞ்சமின் ஸ்டாப்பர் (மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் வானியல் நிபுணர்) “ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”
ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller) “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.” ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007) “பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.” ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory] “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.” டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech's Michelson Science Center] “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.” டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA] “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !” மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007) சிமிட்டும் விண்மீனைச் சுற்றும் ஒரு வைரக்கோள் கண்டுபிடிப்பு 2011 ஆகஸ்டு 26 ஆம் தேதி அகில நாட்டு வானியல் குழுவினர் 4000 ஒளியாண்டு தூரத்தில் வைரத்தைப் போல் மின்னும் ஓர் அற்புதக் கோளைக் கண்டுபிடித்தார். அந்த வைரக்கோள் நமது பூமியைப் போல் 5 மடங்கு பெரியது. அதன் விட்டம் : 60,000 கி.மீ. (36,000 மைல்). பூதக்கோள் வியாழனை விடச் சற்று நிறை மிகுந்தது. வைரக்கோளின் அடர்த்தி வியாழக் கோள் திணிவை விட 20 மடங்கு மிகையானது. வைரக்கோளில் பெரும்பான்மையாக ஆக்ஸிஜன், கார்பன் இருப்பதாக அறியப் படுகிறது. அதன் அடர்த்தி அதிகமாக இருப்பதற்குக் காரணம் வைரக்கோள் பளிங்குபோல் (Crystalline Structure) அமைப்புள்ளது. வைரக்கோளைக் கண்டுபிடித்தவர் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர். இந்தக் குழுவின் தலைவர் ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பெர்ன் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் : மாத்யு பைல்ஸ் (Matthew Bailes). அதைக் கண்டுபிடிக்கப் பயன்பட்ட வானலை நோக்கிகள் : ஆஸ்திரேலியாவில் உள்ள சிஸிரோ வானலைத் தொலைநோக்கி (CSIRO Parkes Radio Telescope) பிரிட்டனில் உள்ள வோவல் வானலைத் தொலைநோக்கி, ஹவாயியிலுள்ள கெக்கி தொலைநோக்கிகளில் (Hawaii Keck Telescopes) ஒன்று. அவை மூன்றும் விண்வெளியில் ஓர் அதிசய சிமிட்டும் விண்மீனைக் (Pulsar PSR J1719–1438) கண்டுபிடித்தன. நமது பால்வீதி ஒளிமந்தையில் ஸெர்பன்ஸ் விண்மீன் தொகுப்பில் (Serpens Constellation) இருக்கிறது. பல்ஸர்கள் அல்லது சிமிட்டும் விண்மீன்கள் என்பவை திணிவு மிக்க, சுழலும் சிறு விண்மீன்கள். அவை இறுதி நிலையில் முறிந்துபோகும் நியூட்ரான் விண்மீன்கள் (Neutron Stars). அவற்றின் விட்டம் சுமார் 20 கி.மீ (12 மைல்) மட்டுமே ! அவை உமிழ்வது ரேடியோ வானலைக் கதிர்கள். அவை வெகு வேகமாய்ச் சுழலும் போது (10,000 rpm) விட்டு விட்டு வெளியேறும் வானலைக் கதிர்கள் பூமி மீது பட்டு புவித்தளத்தில் உள்ள வானலை நோக்கிகளால் அத்துடிப்புகள் (Pulses) பதிவு செய்யப்படும்.
சிமிட்டும் விண்மீன் வெளியேற்றும் கதிரலைகள் சீராக மாறுபாடு (Systematically Modulated) (Modulation : Variation in Frequency or Amplitude) அடைவதை வானியல் விஞ்ஞானிகள் கண்டனர். அந்த மாறுபாடுக்குக் காரணம் பல்ஸர் இரட்டை ஏற்பாட்டில் (Binary System Pulsar) அதைச் சுற்றும் ஒரு துணைக்கோளின் ஈர்ப்பியல் இழுப்பென்று (Gravitational Pull of a Companion Planet) என்றும் அறிந்தனர். கணித்த வானைலை மாறுபாடுகள் (Modulations of Radiowaves) துணைக்கோள் பல்ஸரை ஒருதரம் சுற்ற 2 மணிநேரம் 10 விநாடிகள் எடுக்கிறது என்று கணக்கிட்டார். பல்ஸருக்கும் துணைகோளுக்கும் இடைவெளி 60,000 கி.மீ. (36000 மைல்) என்று அறிய வருகிறது. துணைக்கோளின் விட்டம் 60,000 கி,மீ. (36000 மைல்) என்றும் அறிய முடிந்தது. துணைக்கோள் தற்போதைய அளவை விடப் பெரிதாய் இருந்தி ருந்தால் பல்ஸரின் ஈர்ப்புச் சக்தியே அதை இரண்டாய் பிளந்திருக்கும் என்று பேராசிரியர் மாத்யு பைல்ஸ் கூறுகிறார். சிமிட்டும் விண்மீனைச் சுற்றும் வைரக்கோளின் சிறப்பியல் என்ன ? வானியல் ஆய்வாளர்கள் வைரக்கோள் நிறைமிக்க ஒரு விண்மீனின் மிச்சம் என்று நம்புகிறார். பெரும்பானமை நிறையை பல்ஸர் (Pulsar PSR J1719–1438) விழுங்கிக் கொண்டது என்று கருதுகிறார். நியூட்ரான் விண்மீன் என்று சொல்லப்படும் பல்ஸர் (Pulsar PSR J1719–1438) வெகு வேகமாய்ச் சுழல்கிறது ! அதன் சுழற்சி நிமிடத்துக்கு 10,000 சுற்றுகளுக்கு மேற்பட்டது என்று தெரிகிறது ! அதனுடைய நிறை நமது பரிதியின் நிறையை போல் 1.4 மடங்கு ! எனினும் பல்ஸரின் விட்டம் சுமார் 20 கி.மீடரே (12 மைல்) ! வைரக்கோள் பேரளவு கார்பன், ஆக்ஸ்ஜன் மூலகங்களைக் கொண்டது. விண்மீன்கள் ஹைடிரஜன், ஹீலியம் போன்ற எளிய மூலங்களைக் கொண்டி ருப்பதால், வைரக்கோளில் கார்பன், ஆக்ஸிஜன் போன்ற எளிய மூலகங்கள் தென்படுகின்றன. வைரக்கோளின் திணிவு (Density : 21.45 g/cm3) பிளாடினத்தைப் போல் மிகையானது. “சிமிட்டும் விண்கோளின் (Pulsar PSR J1719–1438) அற்புதத் துணைக் கோளாக வைரக்கோள் காணப்படுவது ஒரு விதிவிலக்கே அல்லாமல் பொதுவிதி என்று கூறுவதற்கில்லை” என்று மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் வானியல் நிபுணர் பெஞ்சமின் ஸ்டாப்பர் கூறினார் ! பூமிக்கருகில் நியூட்ரான் விண்மீன் கண்டுபிடிப்பு 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் ரூத்லெட்ஜ் & டிரெக் பாக்ஸ் (Robert Rutledge & Derek Fox) இருவரும் தொலைநோக்கிகள் மூலமாகவும், ஜெர்மன்-அமெரிக்க “ரோஸாட்” விண்ணுளவி (ROSAT Space Probe) மூலமாகவும் உளவு செய்ததில் பூமிக்கு மிக்க நெருக்கத்தில் இருக்கும் ஒரு நியூட்ரான் விண்மீனைக் கண்டு பிடித்தார்கள் ! அந்தக் கதிர்ப்பிண்டம் உர்ஸா மைனர் (Ursa Minor Constellation) என்னும் விண்மீன் மந்தைக்கு அருகில் காணப்பட்டது. 1990-1999 ஆண்டுகளில் ரோஸாட் இதுவரை விண்வெளியை உளவி 18,000 எக்ஸ்-ரே வீசும் முடத்துவ விண்மீன்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் அந்த விண்ணுளவி ஒளி வீசி வெளிப்புறம் புலப்பட்டு உட்புறச் செவ்வொளி, ரேடியோ அலைகளை (Objects with Visible Light, Infrared Light & Radio Waves) எழுப்பும் விண்வெளிப் பிண்டங்களின் பட்டியலையும் ஆக்க உதவியிருக்கிறது. அந்த நியூட்ரான் விண்மீனை எட்டாவது எண்ணிக்கையாகக் கொண்டு “கல்வேரா” (Calvera) என்று பெயர் வைத்துள்ளார். இதுவரை ஏழு தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நியூட்ரான் விண்மீன்களில் எதுவும் சிதைவு பெற்ற சூப்பநோவா மிச்சத்துடன் (Supernova Remnant) ஒட்டியதில்லை ! அதனுடைய இரட்டைத் துணைப்பகுதியும் (Binary Companion) இல்லை ! மேலும் அதனுடைய கதிரலைத் துடிப்பு மில்லை (Radio Pulsations) ! கால்ரா நியூட்ரான் விண்மீன் கண்டுபிடிக்கப் பட்டதும், ஹவாயியின் 8.1 மீடர் தொலைநோக்கியில் துருவி ஆராய்ந்து அது ஓர் விந்தையான முடத்துவ விண்மீன் என்பது அறியப்பட்டது. நமது பால்மய வீதி காலக்ஸித் தட்டுக்கு மேலாக கால்ரா அமைந்துள்ளது. கால்ரா நியூட்ரான் விண்மீனின் தூரம் 250-1000 ஒளியாண்டுக்குள் இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது ! நியூட்ரான் விண்மீன் என்று விஞ்ஞானிகள் எதைக் குறிப்பிடுகிறார் ? பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். நமது சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் ! பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன ! அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது ! அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.
ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் [2 x 10 to the power of 11 (2 X 10^11)] மடங்கு மிகையானது ! அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது ! சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் ! தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் ! இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் ! அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது ! கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது ! பூமியைப் போன்ற வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிப்பு ! 250 ஆண்டுகளுக்கு முன்பே விண்கோள் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜெர்மன் மேதை இம்மானுவல் கென்ட் 1755 இல் அண்டக் கோள்கள் விண்மீனைச் சுற்றும் வாயுத் தூசித் தட்டிலிருந்து உதிக்கின்றன என்று முதன்முதலில் அறிவித்தார் ! இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை ! தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார். இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார். 1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள். அடுத்து பதினாறு ஆண்டுகளுக்குள் [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன ! புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது. 7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது ! ஆயினும் பூமியைப் போல் நீர்வளம் மிக்க நீர்க்கோள் ஒன்று இதுவரையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை ! 2006 நவம்பர் அமெரிக்க வானியல் இதழில் (American Astronomical Journal) பரிதியைப் போன்ற விண்மீன் எப்ஸிலான் எரிடானியை (Epsilon Eridani Star) பத்தரை ஒளியாண்டு தூரத்தில் விஞ்ஞானிகள் கண்டதாக அறிவிக்கப்பட்டது. சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரிய வாயுத் தூசித் தட்டில் ஒரே சமயத்தில் உருண்டு திரண்டு உதித்தவை. 4.5 பில்லியன் வயதுடைய நமது பரிதி ஒரு நடு வயது விண்மீன் ! அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது ! ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது. அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் ! ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது ! எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது ! அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு ! அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) ! அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன ! ஹப்பிள் தொலைநோக்கி முதலில் அந்த மங்கலான வாயுக் கோளைக் காண முடியா விட்டாலும், 2007 இல் பரிதி ஒளியைப் பிரதிபலித்த போது தெளிவாகப் படமெடுக்க முடிந்தது. தகவல் :
Picture Credit : NASA, ESA 1. Astronomy Today Chaisson & McMillan (1999)
2. Reader’s Digest – The Universe & How We See It By : Giles Sparrow (2001)
3. Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
பூர்வீகத்திலிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது !
அண்ட கோளமே இல்லை !
பிண்டமும் இல்லை !
பரிதி மண்டலமும் இல்லை !
ஒருமுகம் காட்டிச் தன்னச்சில்
உலகினைச் சுற்றும்
கருநிலவு !
பம்பரம் போல் சுழன்று
பரிதியை வலம் வரும்
நீர்க்கோள் பூமி !
சூரியனும் தன்னச்சில்
சுழல்கிறது.
அகக் கோள்களும் புறக் கோள்களும்
தம்தம் அச்சில் சுழன்று
சூரியனைச் சுற்று கின்றன !
கோடான கோடிப்
பரிதி மண்ட லங்கள்
பால்வீதி ஒளிமந்தையில்
மையக் கருந்துளையைச்
சுற்றி வருகின்றன !
ஒளி மந்தைகள் அத்தனையும்
தம்மச்சில் சுழலும் !
நவீனக் கண்டு பிடிப்பு :
பிரமாண்ட மான இந்தப்
பிரபஞ்சமே
ஆரம்பத் திலிருந்து இன்றுவரை
ஓரச்சில் சுழல்கிறதாம் !
காலக்ஸிகள் சுற்றுகின்றன ! விண்மீன்கள் சுழல்கின்றன ! அண்டக் கோள்கள் சுற்றுகின்றன ! அணுவுக்குள் புரோட்டானும், எலக்டிரானும் சுழல்கின்றன ! பிரபஞ்சம் முழுமையும் ஏன் சுற்றக் கூடாது என்பது புதுக் கேள்வி !
நவீனப் பிரபஞ்சவியல் கோட்பாடு
“பெரு வெடிப்பே புரோட்டான், எலெக்டிரான் போல் சுழற்சியோடு உண்டானது என்று என் மனக் காட்சியில் தெரிகிறது. பிரபஞ்சம் விரியத் துவங்கிய போது தோற்றக் காலக் ‘கோண நெம்புமை’ (Angular Momentum) பிண்டத் துணுக்குகளிலும் பரவ ஆரம்பித்துக் காலக்ஸிகளையும் பற்றிக் கொண்டது,”
மைக்கேல் லோங்கோ (மிச்சிகன் பல்கலைக் கழகம்)
“பிரபஞ்சம் சுழல்வதாய்க் கருதுவதற்கு அழுத்தமான சான்று எதுவும் கிடையாது. சுருள் காலாக்ஸிகளின் திசைச் சுழற்சிக்கு உட்தள ஈர்ப்பியல் தாக்குதலே காரணம்.”
நேத்தா பகால் (Neta Bahcall Astrophysicist, Princeton University)
“நமது பிரபஞ்சத்தின் ஆரம்ப ‘கோண நெம்புமையை’ (Angular Momentum) இன்னும் காலக்ஸிகளில் நீடித்து வருகிறது என்று சொல்லப் போனால், நமது பிரபஞ்சம் ஓர் பரந்த விண்வெளிக்குள் உள்ளது என்பதற்கும், மற்ற பிரபஞ்சத்துக்கு ஒப்பாகப் பிறக்கும் போதே நமது பிரபஞ்சம் சுழல்கிறது என்பதற்கும் சான்றாய் அமைகின்றன.”
மைக்கேல் லோங்கோ
“காலக்ஸிகள் ஏதாவது ஒரு திசைநோக்கிச் சுற்ற நேரிட்டால், பிரபஞ்ச முழுமையாக மிகப் பெரும் ‘கோண நெம்புமை’ (Angular Momentum) இருந்தது என்பது அதன் அர்த்தம். கோண நெம்புமை நிலைத்துவம் பெற்றதால் (Conserved) பிறக்கும் போதே பிரபஞ்சம் சுழற்சியில் இருந்திருக்க வேண்டும் என்று தெளிவாய்த் தெரிகிறது.”
மைக்கேல் லோங்கோ
“பிரபஞ்சம் இடது கைப்பாடு (Left-handed) திசைப் போக்கை விட்டுவிட்டு வலது கைப்பாடு (Right-handed) திசைப் போக்கை வரவேற்கிறதா என்று எனக்குத் தெரிந்தவரை யாரும் ஒரு கேள்வி கேட்டதில்லை ! எனது வேலை சுருள் காலக்ஸிகளின் (Spiral Galaxies) சுழற்சியை ஆராய்ந்து பிரபஞ்சம் குறிப்பிட்ட ஒரு திசைப் போக்கைப் பின்பற்றுகிறதா என்பதைச் சோதிப்பதே ! அப்படி யானால் பிரபஞ்சம் அனைத்தும் ஒருவிதக் ‘கோண நெம்புமை’ (Angular Momentum) கொண்டிருக்க வேண்டும்.”
மைக்கேல் லோங்கோ
ஆரம்பத்திலிருந்தே பிரபஞ்சம் ஓரச்சில் சுழல்கிறது !
ஒளிமந்தை காலக்ஸிகள் சுற்றுகின்றன ! விண்மீன்கள் சுழல்கின்றன ! அண்டக் கோள்கள் அத்தனையும் சுற்றுகின்றன ! அணுவின் உட்கருவில் புரோட்டானும், எலக்டிரானும் சுழல்கின்றன ! அப்படியானால் பிரபஞ்சம் ஏன் ஓரச்சில் சுற்றக் கூடாது ? மேலாகப் பார்த்தால் சுழற்சி அச்சு என்பது காப்பர்னிகஸ¤க்கு எதிர்ப்பைத் (Spin Axis Seems to be Anti-Copernican) தெரிவிக்கிறது ! அதாவது பிரபஞ்சத்துக்குக் குறிப்பிட்ட ஓர் சுழல் அச்சு இருப்பது என்பது விண்வெளியில் ஓர் அம்சமான திசை உள்ளது என்று அர்த்தமாகிறது. நவீனப் பிரபஞ்சவியல் கோட்பாடே “பிரபஞ்சம் குறிப்பிட்ட திசை நோக்கின்றி (No Specific Orientation) எல்லாப் புறத்திலும் ஓரமைப்புடன் ஓரினப்பண்பும், ஏகத் தோற்றமும் (Homogeneus & Isotropic) உள்ளது,” என்று கூறுகிறது. பிறப்பிலிருந்தே பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது என்றும் அது அவ்விதம் தொடர்ந்து சுழன்று வரும் என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வெகு அழுத்தமாகச் சமீபத்தில் திடீரென அறிவித்திருக்கிறார் ! அவ்வித முடிவுக்கு வருவதற்கு முன்னால் அவர் 15000 காலக்ஸிகளின் சுழற்சிகளை ஆராய்ந்திருக்கிறார். பெரும் பான்மையான பிரபஞ்சவியல் நியதிகள் பிரபஞ்சம் எல்லாத் திக்கிலும் ஒரே வடிவத்தில் உள்ளது என்று அறிவித்தாலும் சமீபத்திய கண்டுபிடிப்புகள் பிரபஞ்சம் ஆரம்பத்திலிருந்தே ஓர் குறிப்பிட்ட அச்சில் சுழன்று வருகிறது என்று கூறுகின்றன.
அது மெய்யானால் பிரபஞ்சத்துக்கு ‘நேர்பார்வைச் சீர்வடிவம்’ (Mirror Symmetry) இருக்க முடியாது என்பது அறிய முடிகிறது. அதற்குப் பதிலாக வலது கைப்பாடு அல்லது இடது கைப்பாடு (Right-handedness or Left-handedness) என்னும் இருவித முகப்பாடு தெரியவரும்.
மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் லோங்கோ தனது கூட்டாளிகளோடு ஆராய்ச்சி செய்து பிரபஞ்சத்தில் ‘நேர்பார்வைச் சீர்வடிவம்’ (Mirror Symmetry OR Parity). பெரும்பான்மையாக மீறப்பட்டுள்ளதா என்று சோதித்தார். அதற்காக லோங்கோவும் அவரது கூட்டாளிகளும் ‘ஸ்லோன் புள்ளிம விண்வெளிப் பதிவராய்ச்சியில்’ பிரபஞ்சத்தில் சுழலும் 15,158 சுருள் காலாக்ஸிகளை (Spiral Galaxies) (Sloan Digital Sky Survey) ஆழ்ந்து நோக்கினர். அந்த ஆராய்ச்சியில் அனைத்துக் காலக்ஸிகளும் ஒரு குறிப்பிட்ட திசைநோக்கிச் சுழலும் ஓர் ஒருமைப்பாடைக் கண்டார். இடது கைப்புறத் திசையில் சுற்றும் (Left-handed or Counter-Clockwise Direction) காலாக்ஸிகளின் எண்ணிக்கை, வலது கைப்புறச் சுற்றுக் காலக்ஸிகளை விட மிகையாக (7% கூடுதல்) வட பகுதிப் பால்வீதிப் பக்கத்தில் 600 மில்லியன் ஒளியாண்டு தூர நீட்சி வரை பரவி இருந்தது.
பிரபஞ்ச சுழற்சியால் பெரு வெடிப்பு நியதிக்கு ஏற்படும் தாக்கம்
பிரபஞ்சச் சுழற்சிக் கோட்பாடு பெரு வெடிப்பு நியதியை எவ்விதம் தாக்குகிறது ? பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது ? பிரபஞ்சச் சுழற்சி இருப்பதாக யாரும் நேரிடையாக அதற்கு அப்பால் நின்று நிரூபித்துக் காட்ட முடியாது ! “ஆனால் நமது பிரபஞ்சத்தின் ஆரம்ப ‘கோண நெம்புமையை’ (Angular Momentum) இன்னும் காலக்ஸிகளில் நீடித்து வருகிறது என்று சொல்லப் போனால், நமது பிரபஞ்சம் ஓர் பரந்த விண்வெளிக்குள் உள்ளது என்பதற்கும், மற்ற பிரபஞ்சத்துக்கு ஒப்பாகப் பிறக்கும் போதே நமது பிரபஞ்சம் சுழல்கிறது என்பதற்கும் சான்றாய் அமைகின்றன.” என்று மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் லோங்கோ கூறுகிறார். “பெரு வெடிப்பே புரோட்டான், எலெக்டிரான் போல் சுழற்சியோடு உண்டானது என்று என் மனக் காட்சியில் தெரிகிறது. பிரபஞ்சம் விரியத் துவங்கிய போது தோற்றக் காலக் ‘கோண நெம்புமை’ (Angular Momentum) பிண்டத் துணுக்குகளிலும் பரவ ஆரம்பித்துக் காலக்ஸிகளையும் பற்றிக் கொண்டது,” என்றும் லோங்கோ விளக்குகிறார்.
லோங்கோ குழுவினர் தாம் கண்ட ‘சீரற்ற வடிவ அச்சு’ (Axis of Asymmetry) ‘அகிலவியல் இயல்பாட்டு உளவியால்’ அறிந்த நேர் தொகுப்பு நோக்குகளின் நுண்ணலைப் பின்புலப் பரவலைச் (Alignment Obsevred in WMAP – Wilkinson Microwave Anistropy Probe) (CMB – Cosmic Microwave Background) சார்ந்தது என்றும் கூறுகிறார்.
ஸ்லோன் தொலைநோக்கி (Sloan Telescope) அமெரிக்காவின் நியூ மெக்ஸ்கோ மாநிலத்தில் உள்ளது. அதனால் லோங்கோ குழுவினர் நோக்கிய சுருள் காலக்ஸிகளின் சுழற்சி வானத்தின் வடபுற அரைக்கோளத்தின் (Northern Hemisphere of the Sky) காட்சிகளே. 1991 இல் லோங்கோ குழுவினர் போல் மேஸனரி ஐயே & ஹாஜிமி சுகை (Masanori Iye & Hajime Sugai) இருவரும் தென்புறக் அரைக்கோளத்தில் கண்டிருக்கிறார். தற்போது தென்புற அரைக்கோளத்தின் வடது கைப்புறச் சுழற்சி சுருள் காலாக்ஸிகளை ஆராய லோங்கோ குழுவினர் முயன்று வருகின்றனர்.
தகவல் :
Picture Credit : NASA, ESA
1. Astronomy Today Chaisson & McMillan (1999)
2. Reader’s Digest – The Universe & How We See It By : Giles Sparrow (2001)
3. Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)
4. Daily Galaxy : Is the Universe Spinning ? New Research Says “Yes” (July 8, 2011)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)