திங்கள், 18 அக்டோபர், 2010

ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த அரும்பெரும் சாதனைகள் !

நாசாவின் முதல் விண்ணோக்கி
ஹப்பிள் தொலைநோக்கி !
இருபது ஆண்டுகளாய்
முப்பதி னாயிரம் பிம்பங்கள்
நோக்கி வரும் !
அகிலக் கோள்கள் எழுபதின்
நகர்ச்சியைக் கண்டது !
பிரபஞ்ச விரிவை நிகழ்த்தும்
விலக்கு விசையான
கருஞ் சக்தியின்
விளைவைக் கண்டது !
விரிவு வீதத்தைக் கணித்திடத்
திரிந்திடும் பருந்து !
காலக்ஸிகளின்
ஒளிமந்தை தோற்றத்தின்
வளர்ச்சியைத்
தெளிவாகக் காட்டும் !
ஒளியற்று ஈர்ப்பாற்றல் கொண்ட
கரும்பிண்டத்தின்
இருப்பை மெய்ப்பிக்கும் !
ஹப்பிள் தொலை நோக்கியை
இப்போது மிஞ்சிடும்
கெப்ளர் விண்ணோக்கி !
புதிய சூரிய மண்டலக்
கோள்களைக் காண
உதவி செய்யும் !
"ஹப்பிள் தொலைநோக்கி ஐயமின்றி வரலாற்றில் எல்லோருக்கும் தெரிந்த, மகத்தான வெற்றி பெற்ற திட்டங்களில் ஒன்று. சென்ற ஆண்டு (2009) விண்வெளி மீள்கப்பல் குறிப்பணி (Space Shuttle Service Mission) மூலம் நோக்ககத்தை மேம்படுத்தியதில் அது சீராகி உன்னத முறையில் நமது சமூகத்துக்குப் புதிய விஞ்ஞானச் சாதனைகள் புரியத் துவங்கியுள்ளது."
எட்வேர்டு வெய்லர் (Science Mission, NASA Headquarters, Washington D.C.)
"பேராற்றல் உள்ள இந்த அகற்சிக் கோணக் காமிராவால், ஹப்பிள் தொலைநோக்கி புத்துயிர் பெற்று மிக்க சூடான, குளிர்ந்த அண்டக் கோள்களை உளவிக் கூர்ந்து நோக்கும் திறமை பெற்றுள்ளது. அதில் அகிலத் தோற்ற மூலத்தை ஆராயும் ஒளிப்பட்டை வரைக் கருவியும் (Cosmic Origin Spectrograph) இணைக்கப் பட்டுள்ளது ! அந்தக் கருவி பிரபஞ்சத்தில் 99% சதவீதம் உள்ள காலக்ஸிகளின் இடைவெளியை ஆய்வு செய்யும்."

பேராசிரியர் மைக்கேல் டிஸ்னி (Emeritus Professor Astrophysics Cardiff University)


"நமது பால்வீதி காலக்ஸி விளிம்பில் நாம் எல்லை அறியாத வேலிகளைக் கெப்ளர் விண்ணோக்கித் தள்ளி வைக்கும் ! கெப்ளர் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் மனிதன் தன்னைப் பற்றி அறிந்த அடிப்படைக் கருத்துக்களை முற்றிலும் மாற்றிவிடலாம்."

ஜான் மோர்ஸ் (Jon Morse, Director NASA's Astrophysics Division) (Feb 19 2009)

"திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள கோள்களின் சுற்றுவீதியில் "உயிரினத் தகுதி அரங்கம்" (The Habitable Zone) என அழைக்கப்படும் பகுதியில் விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற அண்டக்கோள்கள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடிப்பது எமது குறிக்கோள். அப்படி யானால் அந்த அரங்கில் உயிரினம் விருத்தி பெறப் பற்பல பகுதிகள் உள்ளன என்று அர்த்தமாகிறது ! கெப்ளர் ஒளிக்கருவி அப்படி நூற்றுக் கணக்கில் இருக்கும் அண்டக் கோள்கள் சுற்றுவதைக் கண்டுபிடிக்க டிசைன் செய்யப் பட்டுள்ளது."


வில்லியம் பொரூக்கி (Bill Borucki, Kepler Pricipal Scientist) (March 6, 2009)

"இது ஓர் வரலாற்று முக்கிய குறிப்பணியாகும் ! வெறும் விஞ்ஞானக் குறிப்பணி மட்டுமில்லை ! நமது "பிறப்புக் குறியீடுக்கு" (Genetic Code) அடிப்படையாக மனிதரை அசைத்து விடும் கேள்வி : முதல் ஆணோ அல்லது முதல் மாதோ வானத்தை நோக்கி நாங்கள் தனிப்பட்டவரா என்று கேட்கும் வினா !

டாக்டர் எட்வெர்டு வெய்லர் (Dr. Edward Weiler Associate Administrator NASA Science Mission Directorate) (March 7, 2009)


"இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்."

ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)


பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி ! அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas)

"அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்."


டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech's Michelson Science Center]

"பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்."

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]


"தற்போது ஒரு சில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !"

மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)


ஹப்பிள் விண்ணோக்கி ஐம்பெரும் சாதனைகள்

இருபது ஆண்டுகளாக ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் அகிலப் பிம்பங்களைப் படமெடுத்து அரிய விஞ்ஞான விளைவுகளை தெளிவாகக் காட்டி வந்து அண்டவெளிப் பயணங்களுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. 350 ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ முதன்முதல் தனது சிறு தொலைநோக்கியில் விண்ணோக்கி பூதக்கோள் வியாழனையும், சனிக் கோளையும் அவற்றின் துணைக்கோளையும், சூரிய வடுக்களையும் கண்டு அவற்றின் பண்பாடுகளைக் குறிப்பிட்டார். தற்போது அந்த வானியல் ஆராய்ச்சியை 20 -21 நூற்றாண்டுகளில் விண்வெளியில் பன்மடங்கு ஆழத்தில் ஆய்வு செய்து வருகிறது ஹப்பில் தொலைநோக்கி. பூமிக்கு மேல் 350 மைல் உயரத்தில் சுற்றிவரும் ஹப்பில் தொலைநோக்கி பலமுறை பழுதாகி விண்வெளி மீள்கப்பல் விமானிகள் பழுதுகளைச் செம்மைப் படுத்தியுள்ளார். 1977 இல் அமெரிக்க அரசு அங்கீகரித்து 1979 இல் 2.4 மீடர் (8 அடி) பிரதமக் குவியாடி தயாரிப்பு ஆரம்பமாகி 1985 இல் விண்ணோக்கி முடிந்து எட்வின் ஹப்பிள் பெயரைப் பெற்றது. 1986 இல் சாலஞ்சர் விண்வெளி மீள்கப்பல் வானில் வெடித்து விமானிகள் அனைவரும் மாண்டதால் ஹப்பிள் தொலைநோக்கி ஏவல் தாமதமானது. பிறகு 1990 ஏப்ரல் 24 இல் விண்வெளி மீள்கப்பல் மூலம் ஏவப்பட்டது. இதுவரை ஹப்பிள் தொலைநோக்கி நமது பால்வீதி ஒளிமந்தை மையத்தில் 180,000 விண்மீன்களை நோக்கியுள்ளது !
1991 இல் ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதல் சனிக் கோளில் நேர்ந்த ஒரு பெரும் புயலைப் பதிவு செய்தது. 1992 இல் காலக்ஸ் ஒன்றில் (Galaxy : NGC 4261) தட்டு பேரளவு நிறையுள்ள கருந்துளைக்குத் தீனி ஊட்டிக் கொண்டிருந்தது ! 1993 விண்வெளி மீள்கப்பல் செப்பணிடும் பயணத்தில்தான் பழுதான பிரதமக் குவியாடி மாற்றப் பட்டது. 1994 இல் வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழன் மீது விழுந்ததைப் (Comet Shoemaker-Levy 9 falling on Jupitar) படமெடுத்தது. கழுகு நிபுளாவை (Eagle Nebula) 1995 இல் கண்டது. 1996 இல் குவேசார் உள்ள காலக்ஸிகளைத் தீர்வு செய்தது (Resolves Quasar Host Galaxies). 1997 இல் விண்வெளியின் ஆழத்தில் வெகு தொலைவில் உள்ள காலாக்ஸியைக் கண்டுபிடித்தது ! 1998 இல் முதன்முதலாக விரைந்து விரியும் பிரபஞ்சத்தைக் கண்டு விலக்கு விசை கருஞ்சக்தி இருப்பது நிரூபிக்கப் பட்டது. 1999 இல் விண்வெளி மீள்கப்பல் செம்மைப் பணியில் ஹப்பிள் தொலைநோக்கியின் 6 நேர்மைப் படுத்தும் மிதப்பிகள் (Six Gyros) மாற்றப் பட்டன. 2000 இல் வால்மீன் லீனியர் (Comet Linear) சிதைவதைப் படமெடுத்தது !
2001 இல் ஹப்பிள் வெகு தூரத்தில் உள்ள சூப்பர்நோவாவைக் கண்டது. 2003 இல் செவ்வாய்க் கோள் பூமிக்கு நேர் எதிராய் நெருங்கும் போது படமெடுத்தது. 2005 இல் புளுடோ கோளின் இதுவரை அறியாத இரண்டு சந்திரன்களைக் கண்டுபிடித்தது. 2006 இல் ஹப்பிள் மூலம் கரும்பிண்டத்தைப் பற்றிய விளக்கம் கிடைத்தது. 2007 இல் கரும்பிண்டக் குவியலின் முப்புறப் படங்கள் ஹப்பிள் மூலம் கிடைத்தன. ஹப்பிள் தொலைநோக்கி தனது 100,000 முறை புவிச் சுற்றை முடித்தது ! 2009 இல் பேராற்றல் படைத்த காமிரா (Camera WFPC2) பழைய காமிராவின் இடத்தில் அமைக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி 100 மடங்கு கூர்மை பெற்றது. அப்போது அது பூதக்கோள் வியாழனில் நிகழ்ந்த ஒரு தாக்குதலைப் படமெடுத்தது. 2010 இல் புளுடோவின் வியக்கத் தக்க மேற்தள மாறுதலைப் பட மெடுத்தது காலக்ஸிகளின் செந்நிற நகர்ச்சி எட்டுக்கு மேற்பட்டது (Redshifts of Galaxies Out Higher than 8) என்று காட்டியது. ஹப்பில் தொலைநோக்கியின் 20 ஆம் ஆண்டுப் பூர்த்தி விழா 2010 ஏப்ரல் 25 ஆம் தேதி கொண்டாடப் பட்டது.
ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்த பத்து வியப்பான பதிப்பீடுகள்

இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளில் வானியல் ஆராய்ச்சிகளுக்குப் பேரளவு உதவிய ஒரு விஞ்ஞானச் சாதனம் ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கியே. 2010 மார்ச் மாதம் வரை ஹப்பிள் தொலைநோக்கி 30,000 மேற்பட்ட தனித்துவக் குறியிலக்குகளைக் (Unique Space Targets) விண்வெளியில் கண்டு படமெடுத்துள்ளது. அவற்றின் கண்டுபிடிப்புகளால் இதுவரை 8700 மேற்பட்ட வெளியீடுகள் வெளிவந்துள்ளன.


1. 1994 இல் வால்மீன் சூமேக்கர்-லெவி 9 வியாழக் கோள் மீது விழுந்ததைத் தெளிவாகப் படமெடுத்துள்ளது. அடுத்து 2009 ஜூலையில் வியாழக் கோளில் விழுந்த ஓர் அண்டத்தின் கரும்புகை மூட்டத்தைக் காட்டியது.

2. புளுடோவின் இரண்?டு சந்திரன்களைக் கண்டுபிடித்து புளுடோவின் மிகத் தெளிவான மேற்தளத்தின் படங்களை பூமிக்கு அனுப்பியது.

3. சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ள கியூப்பர் வளையத்தில் (Kuiper Belt) ஒரு கிலோ மீடர் அகலமுள்ள ஓர் அண்டத்தைக் கண்டுபிடித்தது.

4. இளைய விண்மீன்கள் அனைத்திலும் பூர்வக் கோள் தட்டுகள் (Protoplanetary Disks) சுற்றி இருப்பது பொது நிகழ்ச்சி என்பதை ஹப்பிள் தெளிவுபடுத்தியது.

5. இளைய விண்மீன்களிலிருந்து பாய்ந்தெழும் ஒளிக்கதிர்கள் சுற்றுத் தட்டின் மையத்தை விட்டு வெளியேறுபவை என்று ஹப்பிள் எடுத்துக் காட்டியது.

6. ஹப்பிள் தொலைநோக்கி விண்மீன்களின் மரணத்தைத் தெளிவான படங்களில் காட்டியது. அவற்றுள் ஒன்று முப்பெரும் வளையம் சூழ்ந்த சூப்பர்நோவா (1987A). அடுத்து பல்வேறு நிபுளாக்களைச் சுற்றியுள்ள, யாராலும் விளக்கப்படாத ஒருமையத்து வளையங்கள் (Unexplained Concentric Rings around Nibula).

7. காலக்ஸிகளின் அருகே உள்ள விண்மீன் ஒளிமந்தைகளை வகைப்படுத்தி, உருவாகும் வரலாற்றை எடுத்துக் காட்டல், அவற்றின் மூலம் காலாக்ஸிகள் கட்டமைக்கப் படுவதை விளக்க உதவுதல்.

8. பக்கத்துப் பிரபஞ்சத்திலிருந்து அகிலப் பின்னல் காலக்ஸிகளாய் உருவாக்கும் வாயு முகில் நகர்ச்சியையும், பரவுதலையும் வரைதல்.

9. காலாக்ஸிகள் சிலவற்றிலிருந்து எழும் காமாக் கதிர் வெடிப்புகளைப் (Gamma Ray Bursts) படமெடுத்துள்ளது. அந்தக் கதிர் வெடிப்புகள் உலோகம் குன்றிய காலாக்ஸிகளில் திணிவு நிறை மிகுந்த விண்மீன்கள் நிரம்பிய பகுதிகளிலிருந்து எழுபவை. இக்கருத்து நீண்ட காலக் காமாக் கதிர் வெடிப்புகள் திணிவு நிறைந்த விண்மீன்களிலிருந்து வருகின்றன என்னும் கோட்பாட்டை மெய்ப்படுத்துகிறது. அத்தகைய விண்மீன்களே பிறகு கருந்துளைகளாக முறிந்து சுருங்குகின்றன.

10. குவசார் விருந்தாளிகள் (Quasar Hosts) காலக்ஸிகள்தான் என்பதை உறுதிப் படுத்தல். அந்த காலாக்ஸிகள் பொதுவாகப் பேரொளியுள்ள நீள்வட்ட வடிவில் தோன்றுகின்றன. அல்லது அடுத்த காலாக்ஸியுடன் பிணையும் ஈடுபாடு கொண்டவை.



தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe - National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe - How Many Planets Surround Other Star Systems ? & Are There Other Planets Like Earth ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope - Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)