திங்கள், 6 ஜூன், 2011

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3


“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”
நிக்கோலை லாவெராவ் (President, Russian Academy of Sciences)
“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”
பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     
“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”
ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.
ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.
அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும்.  பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரிய வில்லை !
இயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]
மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.
தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840--1928]
முன்னுரை:  2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து  நாடு, நகரம், வீடுகள், தொழிற் துறைகள் தகர்ந்ததோடு, புகுஷிமா அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

தற்போது முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகிய வற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  அதாவது 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்தி ருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.
புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின்சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்ப்பு.
1.  1986 செர்நோபில் அணு உலை விபத்தில் பாடங்கள் கற்றக் கொண்ட ரஷ்ய அணுசக்தித் துறை வல்லுநர் சிலரின் அரிய கருத்துக்கள் கீழே எழுதப்பட்டுள்ளன.

1.1  ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தின் அதிபர் நிக்கோலை லாவெராவ் (Nikolai Laverov President, Russian Academy of Sciences) கூறுகிறார் :
“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  ஜப்பான் பூகம்ப விபத்தில் (2011 மார்ச்சு) பெரிய எரிஆயில் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எப்படி எரிந்தததென்று பார்த்தோம். ஜப்பானில் நிதிவள விரையத்தோடு சூழ்வெளி, கடல் நீர் தூய்மைக்குக் கேடு விளைந்ததையும் கண்டோம்.  நாம் அம்மாதிரி ஒரே தவறுகளை ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறோம் ?”
1.2 விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author) கூறுகிறார்
“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.  அது முதல் பிரச்சனை.  இரண்டாவது செர்நோபில் விபத்தின் போது ரஷ்யாவில் தலைமை அரங்கை உடனே ஏற்படுத்தி அரசாங்க அமைச்சகங்கள் அத்தனையும் ஒத்துழைத்தன.  ஜப்பானில் அப்படிக் கூட்டுறவு நிகழவில்லை.  புகுஷிமா அணுமின் உலைகளின் உரிமையாளர் (Tokyo Electric Power Company -Tepco) ஒரு தனியார் நிறுவகம்.  டெப்கோ தனியாகப் பல்வேறு பாதுகாப்புப் பணிகளை உடனே செய்ய முடியவில்லை.  இதற்கு ஓர் உதாரணம் : புகுஷிமா தளத்தில் மின்சக்திப் பரிமாற்றம் அறுபட்ட பிறகு, உதவிக்கு அடுத்த தனியார் மின்சார வாரியத்திலிருந்து கொண்டு வர டெப்கோவுக்குப் பல நாட்கள் ஆயின !”

1.3 செர்கி நோவிகோவ் (Sergei Novikov, Head of Communication at Rosatom) கூறுகிறார்
ரஷ்யாவின் ரோஸாட்டம் குழு (Rosatom Group) ஜப்பான் நாடு அழைத்தால் முடங்கிப் போன அணு உலைகளுக்கு உதவி செய்யத் தயாராய் இருந்தது.  எந்த எந்தத் துறைகளில் உதவி தேவை என்று ஜப்பான் கேட்டால் அந்தத் துறைகளில் உடனே உதவிட நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.  (ஆனால் மெய்யாக அழைப்பு வரவில்லை).  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வெதேவ் (President Dimitri Medvedev) & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் (Prime Minister Vladimir Putin) இருவரும் (புகுஷிமா விபத்துக்குப் பின்) ஒருங்கே அழுத்தமாக இப்படி அறிவித்தார்:  ரஷ்யாவில் எரிசக்தியும் ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறை இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை..”

1.4 லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry) கூறுகிறார்
“இப்போது ரஷ்ய அணுமின் நிலையங்களைப் பொருத்த வரையில் பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் முற்றிலும் வேறுபட்டவை.  ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்களில் சில 40 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்ட பழைய மாடல்கள் என்னும் குறைபாடு ஒருபுறம் இருக்கட்டும்.  அதற்குப் பிறகு சில மேம்பாடுகளை அவற்றில் ஜப்பானியர் செய்தனர் என்பது மெய்தான்.  அவற்றின் தகுதிப்பாட்டை நான் எடை போடப் போவதில்லை.  நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்கள் வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் தயார் முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை அபாய நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டை அரணுக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைப்பாகி உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் [(1) Passive Air Heat Exchanger, (2) Long Term Fission Product Filtering System,  (3) Hydrogen Recombiners)] போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

1.5 பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert) கூறுகிறார்
ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் சில காலம் கடந்த பிற்போக்கு முறையில் கட்டப் பட்டிருந்தாலும் அவை 9 ரிக்டர் அசுர அளவு நிலநடுக்கத்தில் கூடப் பழுதாக வில்லை என்பது அழுத்தமாகக் குறிப்பிடத் தக்கது.  40 வருடங்கள் கடந்தும் டிசைன் முறைப்படி அவற்றில் பாதுகாப்பு இயக்கங்கள் சுயமாக நிகழ்ந்தன.  ஆனால் விபத்துக்கள் நேர்ந்ததற்குக் காரணங்கள் டிசைன் எல்லைக்கு அப்பாற் பட்டவை. 30 அடி (10 மீடர்) உயரச் சுனாமித் தாக்கல் இதுவரை எதிர்பாராது.  8 அடி (2.5 மீடர்) உயர அணையைத் தாண்டி அபாயப் பாதுகாப்புச் சாதனங்களைச் சுனாமிப் பேரலை அடிப்பு மூழ்க்கி விட்டு முடமாக்கியது.  எதிர்பாராத சுனாமியால் நேர்ந்த புகுஷிமா விபத்தால் உலக நாடுகளின் அணுசக்தி உற்பத்தித் திட்டங்கள் பாதிக்கப்பட வேண்டிய தில்லை.  ஆனால் ‘அவசியப் பன்முக அமைப்பு’ பற்றி ஒரு விதி (Law of Necessory Diversity) உள்ளது.  இது மர்·பி நியதி (Murphy’s Law) என்றும் அழைக்கப்படுகிறது.  அதாவது “சிந்தனைப்படி ஏதோ ஒரு தவறு நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டால், நிச்சயம் அது நேர்ந்திடும்.”
இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.

1.6  அலெக்ஸாண்டர் பைக்கோவ் (Deputy Director General IAEA) கூறுகிறார்
புகுஷிமாவின் நிறுத்தமான அணு உலைகளின் வெப்பக் கட்டுப்பாட்டை ஜப்பான் நிபுணர் பல நாட்கள் செய்ய முடியாது கதிரியக்கம் வெளியேறித் தீவிர விபத்தானது.  இறுதியாக ஜப்பானிய பொறியியல் வல்லுநர் வெப்பத்தைக் கட்டுப் படுத்த முடிந்தது.  எங்கள் கணிப்பின்படி அணு உலைகளில் ஓரளவு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி சிதைவடைந்தன என்று கூறுகிறோம்.  ஆனால் அவை உஷ்ணம் மீறி அறிவிக்கப்பட்டது போல் உருகிப் போய்விட வில்லை (No Meltdown) என்பது எமது கருத்து.  அப்படி எரிக்கோல்கள் உருகிப் போயிருந்தால் உள்ளே பரவிய / வெளியே சூழ்ந்த கதிரியக்க வெளிவீச்சும் உக்கிரமும் பெரு மடங்காய் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.  அதாவது திரிமைல் தீவு விபத்து போல் எரிக்கோல்கள் புகுஷிமாவில் உருகிப் போகவில்லை !  ஹங்கேரியன் பாக்ஸ் அணுமின்சக்தி நிலைய விபத்து போல் (Hungarian Paks Atomic Power Plant Accident – Level 3) எரிக்கோல்களில் சிதைவுகள் நேர்ந்துள்ளன.
(தொடரும்)
***************