சனி, 16 ஜூலை, 2011

2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா?


அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.
தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]
மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy)
இந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா.
அணுமின் எரிசக்தி போல் விலை மிகுந்த வேறோர் எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is as costly as Nuclear Energy)
கட்டுரை ஆசிரியர்
“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் புகுஷிமாவில் ஆய்வு செய்ய ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”
நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)
“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”
பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)
நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.
அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்ற வையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.
லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)
“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.
விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)
கடற்கரையில் நிறுவியுள்ள கூடங்குள அணு உலைகளில் புகுஷிமா விபத்துக்கள் போல் நேருமா ?
ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது மேற்தளங்கள் வெடிப்பதைத் தொலைக் காட்சியில் நேராகக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்களுக்குத் தமிழகத்தின் தென்கோடிக் கரையில் கட்டப் பட்டு இயங்கப் போகும் கூடங்குள ரஷ்ய அணு உலைகளின் அபாயப் பாதுகாப்பு பற்றிப் பல ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.  இந்திய அணுமின் நிலையங்களைக் கட்டி வரும் நிறுவகத் தலைமையகம் (Nuclear Power Corporation India Ltd – NPCIL) புகுஷிமாவில் சுனாமிப் பேரலைகள் விளைவித்த அணு உலைப் பேராபத்துகள் போல் கூடங்குளத்தில் நேரா என்று அழுத்தமாய் உறுதி அளித்துள்ளது.  இரு நாட்டு அணுமின் நிலையத் தளங்கள் வெகு தூரத்தில் அமைக்கப் பட்டிருந்தாலும் கடற்கரையைச் சுனாமி தாக்கக் கூடிய அபாயத் தளங்களாக அவை இரண்டும் கருதப் படுகின்றன.  அத்தகைய கோரப் பேரலை விபத்துகள் கூடங்குள அணு உலைகளில் நேருமா என்று தனியாகக் கேரளா பொறியியல் குழுவினர் (Kerala State Centre of The Institution of Engineers India) பங்கெடுத்த கருத்தரங்கு மார்ச் 30, 2011 தேதி திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  அந்த கருத்தரங்கின் முக்கிய முடிவுகளைத் தான் இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.
2001 ஆம் ஆண்டில் அடித்தளம் கட்டக் குழி தோண்டி ஆரம்பமான கூடங்குள அணுமின் நிலையம் பல காரணங்களால் பத்தாண்டுகள் வரை நீடித்து இன்னும் ஓரிரு மாதத்தில் (ஆகஸ்டு 2011) இயங்கத் தயாராகி வருகிறது.  முதன்முதல் இரண்டு பெரிய அன்னிய 1000 மெகா வாட் நிலையம் கட்டப் படுவதால் ஈராண்டுகள் தாமதம் ஆகி விட்டது ! அணுமின் உலை இயக்க ஏற்பாடுகள் அனைத்தும் சோதிப்பாகி ‘அணுசக்தி நெறிப்பாடு ஆணைய கத்துக்கு (Atomic Energy Regulatory Board – AERB) விளைவுகள் சமர்ப்பணம் ஆகியுள்ளன.  அது பச்சைக் கொடி காட்டியதும் கூடங்குளம் முதல் யூனிட் இயங்கத் துவங்கும்.  இரண்டாவது யூனிட் 2012 மே மாதத்தில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சென்னை மாநிலத்துக்கு 2011 இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரமும், 2012 இறுதிக்குள் அடுத்து 1000 மெகா வாட் மின்சாரமும் (மொத்தம் 2000 மெகா வாட்) பேரளவில் பரிமாறப்படும் என்று அறியப் படுகிறது.
கூடங்குளத்தில் முதன்முறை இயங்கப் போகும் ரஷ்ய இரட்டை VVER அணுமின் நிலையம் 1986 இல் நேர்ந்த செர்நோபில் விபத்துக்குப் பிறகு ‘மூன்றாம் பிறப்பு முறைப்பாட்டில்’ (Third Generation Design) செம்மைப் படுத்தப் பட்ட முற்போக்கு அணுமின் உலைகள் என்று IAEA அறிவிக்கிறது.  2004 இல் அடித்த இந்து மாக்கடல் சுனாமிப் பேரலை விளைவை ஆய்ந்து அணுமின் உலைச் சாதனங்களும், கட்டடமும் கடல் வெள்ளம் மூழ்க்கி விடாதபடி கடல் மட்டத்துக்கு மேல் 25 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.
1.  அணு உலை எரிக்கோல் உருக்கைத் தாங்கும் கும்பா
அபாய வெப்பத் தணிப்பு நீரின்றிக் கூடங்குளம் அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போனால் அந்த கனல் உலோகத் திரவத்தை ஏந்தி உருக்கை ஏற்றுக் கொள்ள குவளைச் சாதனம் (Core Melt Catcher) ஒன்று அணு உலைக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ளது.  வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்களின் உருக்குத் திரவம் உண்டாவது ரஷ்யன் VVER அணு உலைகளில் எதிர்பார்க்க முடியாத ஓர் அபூர்வ நிகழ்ச்சியாகும்.
ஹைடிரஜன் வாயு பேரளவில் சேமிப்பாகி வெடிப்பைத் தூண்டாதிருக்க கூடங்குள அணுமின் நிலையத்தில் அது ஆக்சிஜனோடு தீவிரமாய்க் கலந்து வெடிக்காது ஹைடிரஜன் இணைப்பிகள் (Hydrogen Recombiners) என்னும் சிறப்புக் சிமிழ்கள் அமைக்கப் பட்டுள்ளன.  அதில் ஹைடிரஜன் மெதுவாய் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீராகும்படி செய்யப் படுகிறது.  இந்தச் சிறப்புச் சாதனங்கள் அணு உலையில் ஹைடிரஜன் வாயு தீவிர வெடிப்பளவாய்ச் (< 4%) சேராதபடித் தடுக்கின்றன.  நிலநடுக்கம், சுனாமிப் பேரலை அடிப்புகள் சாதனங்களைப் பாதிக்காதபடி கூடங்குளம் ரஷ்ய அணுமின் உலைகள் டிசைனில் மேம்பாடு செய்யப் பட்டுக் கட்டப் பட்டுள்ளன.
2.  கூடங்குள அணு உலை இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
கூடங்குள அணுமின் நிலையத் திட்டத்தின் பாதுகாப்பு நெறிப்பாடுகள் (Safety Aspects of Kudungulam Power Project) என்னும் தலைப்பில் அணுமின் நிலைய டைரக்டர் காசிநாத் பாலாஜி தலைமையில் ஒரு தனிக் கருத்தரங்கு நடந்தது.  அந்தக் கருத்தரங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் அணுமின் உலை அரண், கட்டடங்கள், துணைச் சாதனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்சி அறை, டர்பைன் ஜனனி, அவற்றின் துணை ஏற்பாடுகள் ஆகியவற்றின் டிசைன் திட்ட அமைப்பாடுகள் அறிவிக்கப் பட்டன.
கூடங்குள அணுமின் நிலைய தளம் ‘குன்றிய அபாய எதிர்பார்ப்பு அரங்கம் : 2 இல் (Zone : 2 – Low Damage Risk Area) இருந்தாலும் கட்டடங்களும் சாதனங்களும் 25 அடி (7.5 மீடர்) உயரச் சுனாமிப் பேரலைத் தாக்குதலும் பாதிக்காதபடி பாதுகாக்கப் படும்.  2004 ஆண்டு தாக்கிய இந்து மாக்கடல் சுனாமி அலை அடிப்புக்கு ஏற்ப சாதனங்கள், கட்டடங்கள் செம்மைப்பாடு செய்யப் பட்டன.
செர்நோபில் விபத்துக்குப் பிறகு ஆழ்ந்து மீளாய்வு செய்யப்பட்டுக் கூடங்குள அணுமின் நிலையம் ரஷ்ய பொறியியல் விஞ்ஞான நிபுணரால் செம்மைப் படுத்தப்பட்டு மேன்மை செய்யப் பட்டது என்று IAEA அறிவிக்கிறது.  அணு உலை நிறுத்தமாகி, அபாய வெப்பத் தணிப்பு வேளை களில் நீரின்றிப் போனால் மாபெரும் 12 நீர் அழுத்தக் கலனிலிருந்து (Huge Water Accumulators) நியூட்ரான் விழுங்கி போரான் (Neutron Absorber Boron) கலந்த நீர் செலுத்தப் பட்டு எப்போதும் எரிக்கோல்களை நிரப்பிச் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அத்துடன் வெப்ப வேறுபாட்டாலும், ஈர்ப்பு விசையாலும் மேலும் கீழும் சுற்றும் நீரோட்டம்  (Natural Circulation By Heat & Gravity) நிகழும்படி நீராவி மாற்றிகள் அணு உலைக்கு மேல் மட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன.
ஒவ்வோர் அணுமின் உலைக்கும் அபாயத் தேவைக்கு மின்சாரம் அனுப்ப தனிப்பட்ட நான்கு மின்சார டீசல் எஞ்சின் ஜனனிகள் தானாக இயங்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன.  நான்கில் ஒரு டீசல் மின்சார இணைப்பே அபாயத் தணிப்பு நீரனுப்பப் போதுமானது.  டீசல் ஜனனிகள் கடல் மட்டத்திலிருது 30 அடி (9 மீடர்) உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.  டீசல் ஜனனிகள் ஓட்டும் நீரனுப்புப் பம்புகளும் பாதுகாப்பான இடத்தில் நிறுவப் பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் டீசல் எஞ்சின் இயங்க முடியாது போனால், ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems) உடனே இயங்க ஆரம்பிக்கும்.  அவற்றில் முதலில் இயங்கும் 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை அணு உலைக்குள் விரைவாகச் செலுத்தும்.
இரட்டை ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems)
1. 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை விரைவில் அணு உலைக்குள் செலுத்துவது.
2. ஈர்ப்பு விசையால் அணு உலை எரிக்கோள்களுக்குத் தானாய் இயங்கும் வெப்பத் தணிப்புச் சுற்று நீரோட்டம் நிகழ்த்துவது.
அணுமின் நிலையம் இயங்குவதற்கு முன்பு இறுதிச் சோதனையாக அபாயப் பாதுகாப்பு பயிற்சிகள் (Emergency Safety Drills) கூடங்குள நகராண்மை மக்களுக்குக் காவல்துறை உதவியோடு நடத்தப்படும்.
விஞ்ஞானி மிசியா காக்கு புகுஷிமா அணு உலை விபத்து பற்றிப் பேசுகிறார்.
2011 ஜூன் 17 இல் விஞ்ஞானி மிசியோ காக்கு (Michio Kaku) புகுஷிமா அணு உலை விபத்தைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பல வாரங்கள் இரும்புத் திரையிட்டு ஜப்பான் டெப்கோ (Tepco) நிறுவகம் இப்போது முன்வந்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளது என்று கூறுகிறார்.
1.  அமெரிக்க விஞ்ஞானிகள் ஐயுற்றபடி மூன்று அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் அபாய வெப்பத் தணிப்பு நீரின்றி ஏறக்குறைய முற்றிலும் உருகிப் போயிருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  இது நேரடியாக அறியப் படாத செய்தி.  உலக விஞ்ஞானிகள் தமது கணினி மாடல் படைப்பில் உருவாக்கி ஜப்பான் அரசாங்கம் இதுவரை அறிவித்த கதிரியக்க விளைவுகளை விடக் கோரமானது என்று முடிவு செய்கிறார்.
2.  மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் முற்றிலும் உருகிப்போயின என்றால் ஏன் மூன்று ‘சைனா பேரழிவு விபத்துகள்’ (China Syndrome*) நேரவில்லை என்ற வினா எழுகிறது !  காரணம் :  நீண்ட நாட்கள் கடல் நீரால் மூன்று அணு உலைகளும் வெப்பத் தணிவு செய்யப் பட்டன.  அதனால் உருகிய யுரேனியும் எஃகு அரணில் துளையிட வில்லை.  ஆயினும் அணுமின் உலை இயக்க மேலதிகாரிகள் வெப்பத் தணிப்புக்குக் கடல் நீர் அனுப்புவதை முற்றிலும் ஆதரிக்க வில்லை.  அப்படிச் செய்வதால் கடல் நீர்த் துருவேற்றும் மிகையாகி அணு உலைச் சாதனங்கள் அனைத்தும் இறுதிச் சமாதி நிலை அடையும்.  மேல்நிலை அதிகாரிகள் அணு உலைக்குள் கடல் நீர் அனுப்புதலைத் தடுத்தும் கீழ்நிலை இயக்குநர் ஆணைக்குக் கீழ்ப்படியாது அதைத் தொடர்ந்து நிறைவேற்றினர்.  மேலதிகாரிகள் ஆணையை மீறிய அவர் யாவரும் மெய்யான தீரர் என்று இப்போது பாராட்டப் படுகிறார்.
3.  வெளியேறிய கதிரியக்கக் கழிவுகளின் மதிப்பளவு 700 டிரில்லியன் பெக்குவரல் என்பதை டெப்கோ நிர்வாகிகள் வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக் கொண்டனர்.  அந்த அளவு செர்நோபில் விபத்தில் வெளியேறிய அளவில் 20% பங்கு மதிப்பாகும் என்று அறியப் படுகிறது.
4.  பொதுநபர் வெளியேற்றப் பட்ட பகுதியில் தீவிர கதிர்வீச்சுள்ள நான்கு தளங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.  ஒரு மாவட்டத்தில் பள்ளித் தளங்களில் கதிரியக்கம் பரவியதால்  8000 பள்ளி மாணவர் பள்ளிக்கூடத்துக்குப் போகையில் கதிர்மானிகள் அணிவிக்கப் பட்டார்.  அதனால் சிறுவரின் பெற்றோர்கள் அரசாங்கத்தின் மீதும், டெப்கோ மீதும் சீறினார்.
5.  புகிஷிமாவின் நான்கு அணுமின் நிலையச் சிதைவுகளைச் சீராக்கிச் செம்மைப் படுத்த 10 ஆண்டுகள் ஆகலாம் என்று டோஷீபா நிறுவகம் (Toshiba Corporation) மதிப்பீடு செய்தது.  ஹிட்டாச்சி நிறுவகம் (Hitachi Corporation) 30 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பீடு செய்தது.
திரீமைல் தீவு அணு உலைச் சிதைப்பைச் சீர்படுத்த 14 ஆண்டுகள் எடுத்தன.  25 ஆண்டுகள் கடந்தும் செர்நோபில் கதிரியக்கத் தீங்குகள் இன்னும் தொல்லைகள் தருகின்றன.
6.  புகிஷிமா அணு உலைகளில் 2011 இறுதிக்குள் ‘பூரணத் தணிப்புலை நிறுத்தம்’ (Cold Shutdown State) செய்ய முடியும் என்று நிலைய அதிகாரிகள் கருதுகிறார்.  அதைச் செய்வது கடினம் என்றும் அடுத்த ஆண்டுவரை நீடிக்கலாம் என்று டெப்கோ நிறுவகம் அறிவித்துள்ளது.
(தொடரும்)
**************
தகவல்:
1. Russia & India Report -  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)
2 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)
3. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)
4. Fukushima & Chernobyl Compared (April 11, 2011)
5.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)