வெள்ளி, 7 அக்டோபர், 2011

21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் உலகிக்குத் தேவையான தீங்குகள்!!!!

உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப் பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”
ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.
ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.
“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”
நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)
“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”
பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)
நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.
லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)
“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.
விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)
முன்னுரை:   2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.
உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.
அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்
புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன பொது மக்களின் வெறுப்பும், தீர்ப்பும் வேறு.  அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் ஒருமனதாய் எதிர்த்தாலும் உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.
இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப்பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.
அணுமின் உலைகள் இயக்கம் பற்றி உலக நாடுகள் செய்துள்ள முடிவுகள்  (மே 31, 2011)    
21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணு மின்சக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்த முடிவுகளைக் கீழே காணலாம் :
1. அர்ஜென்டைனா :   தற்போது இயங்கி வரும் இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிக்கப்படும்.  அட்டுச்சாவில் (Atucha) இரண்டாவது யூனிட் கட்டுமானம் நிற்காமல் பூர்த்தியாகும்.  அர்ஜென்டைனாவின் நிதி அமைச்சர் அமாடோ பொவ்டோவ் (Amado Boudov), “அர்ஜென்டைனா இதுவரைத் திட்டமிட்ட அணுமின் நிலையத் தீர்மானங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்று கூறினார்.
2. பிரேசில் :   புதிய அணுமின் நிலையங்கள் கட்டப் போவதை நிறுத்த வில்லை.  செனட்டர் ஜோஸ் ஸர்னி என்பவர் “அணு உலைப் பாதுகாப்பு விதிமுறைகளில் கடுமையான மீளாய்வு இருக்கும்” என்று தெரிவித்தார்.
3. ஆர்மீனியா :   நிலநடுக்க இன்னல்கள் நிரம்பிய ஆர்மீனியா 1988 ஆண்டிலேயே தனது ஒற்றை ‘மெட்ஸ்மார் அணுமின் நிலையத்தை’ (Metsmor) நிறுத்தி விட்டது.  ஆனால் அது 7 ஆண்டுகள் கழித்துத் தேவைப் பட்டதால் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.  மேலும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போவதாகத் திட்டங்கள் உள்ளன என்று ஓர் வதந்தியும் நிலவி வருகிறது.  ஆர்மினியாவின் பிரதம மந்திரியும் புதிய அணுமின் நிலையங்கள் கட்டு வதற்கு ஆதரவு அளிக்கிறார்.
4. கனடா :   கனேடியன் அணுவியல் பாதுகாப்பு ஆணையகம் (Canadian Nuclear Safety Authority – CNSC) கனடாவில் இயங்கும் அணுமின் நிலையங்கள், சாக் ரிவர் அணுவியல் ஆய்வு உலை (AECL Chalk River Research Reactor) ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புகுஷிமா அணு உலை விபத்துகளை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  1970 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்த இரண்டு பழைய அணுமின் நிலையங்கள் முன்பே நிரந்தர நிறுத்தம் ஆயின.  முன்பு நிறுத்தமான இரண்டு கனநீர் முற்போக்கு அணுமின் உலைகள் புதுப்பிக்கப் பட்டு விரைவில் மின்சாரம் மீண்டும் அனுப்பப் போகின்றன.  இயங்கும் 16 அணுமின் உலைகள் தொடர்ந்து மின்சாரம் அளித்து வருகின்றன.  எதிர்காலத் திட்டத்தில் புதிய அணுமின் நிலைய அமைப்புகளும் இடம் பெறும்.
5. சைனா :  அரசாங்கம் அணுமின் சக்தி ஆக்கத்தை வரவேற்கிறது.  சமீபத்தில் நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துகள் கட்டப் போகும் புதிய 7 அணுமின் நிலையங்களைத் தற்காலிய மாக நிறுத்தி வைத்துள்ளது.  இப்போதைய இந்த முடிவு நீண்ட கால அணுமின்சக்தி உற்பத்தியை ஒருபோதும் பாதிக்காது.
6 பின்லாந்து :  பின்லாந்தின் நிதி அமைச்சகம் பின்லாந்து நாட்டில் உள்ள அணுமின் உலைகளில் அபாயப் பாதுகாப்புத் தயாரிப்பு முறைகள் மீளாய்வு செய்ய வேண்டு மென அணுவியல் கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணையகத்துக்கு உத்தரவு இட்டுள்ளது.
7. பிரான்ஸ் :   பிரென்ச் நாட்டின் 70% பங்கு மின்சக்தியைப் பரிமாறி வரும் 58 அணுமின் நிலையங்களின் இயக்கத்தில் எந்தத் தடையும் மாற்றமும் இல்லை.  பிரென்ச் தொழிற்துறை எரிசக்தி அமைச்சர் எரிக் பெஸ்ஸன் கூறியது : “எனக்குப் பாதுகாப்பான எதிர்கால அணுமின்சக்தி உற்பத்தியில் முழு நம்பிக்கை உள்ளது. அதாவது புகுஷிமா விபத்துகள் போல் நேர்ந்தாலும் இந்த நூற்றாண்டில் அந்த உறுதிப்பாடு எனக்கு எழுந்துள்ளது.  ஆயினும் அவற்றை மேலும் செம்மைப் படுத்த இன்னும் ஒரு வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.
8. ஜெர்மனி :   2011 மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் பழைய டிசைன் மாடல் 1980 & அதற்கு முந்திய அணுமின் உலைகளை மூன்று மாத நிறுத்தம் செய்ய உத்தரவு இட்டார்.  1984 இல் இயங்க ஆரம்பித்த அடுத்தோர் அணுமின் நிலையமும் நிறுத்தமானது.  வேலும் சமீபத்தில் ஆயுள் நீடிப்புக்கு அனுமதி பெற்ற சில அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிப்பு பாதுகாப்புச் சோதனைகளின் முடிவு தீர்ப்பாவது வரை நிறுத்தப் பட்டுள்ளது.  புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 250,000 அணுசக்தி நிலைய எதிர்ப்பாளர் நாடு முழுவதும் திரண்டு இயங்கும் அணுமின் நிலையங்களை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்தார்.  மார்ச்சு மாதம் 30 ஆம் தேதி அதிபர் ஆஞ்சலா மெர்கெல் 2022 ஆண்டுக்குள் இயங்கும் எல்லா அணுமின் நிலையங்களும் நிறுத்தப்பட்டு விடும் என்று அறிவித்தார்.
9. இந்தியா :   புகுஷிமா அணு உலை விபத்துக்கள் இயங்கும் அல்லது எதிர்கால இந்திய அணுமின் நிலையத் திட்டங்களைப் பாதிக்கவில்லை.  இந்திய அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் (Atomic Energy Regulatory Board – AERB) இயங்கும் அல்லது திட்டமிட்ட அணு உலைகளின் டிசைன் அடிப்படை விபத்துகளோ அல்லது அதற்கு அப்பாற் பட்ட இயற்கை தூண்டும் விபத்துகளோ நேர்ந்தால் விளையும் அபாயப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.
10 ஜப்பான் :   ஜப்பானின் அணுமின் & தொழிற்துறைப் பாதுகாப்பு ஆணையகம் (NISA) அணுமின் உலைகள் அனைத்தும் தற்போதுள்ள அபாய விபத்துக் கையாளும் முறைப்பாடுகளை மீளாய்வு செய்து அனுப்பும்படிக் கட்டளை இட்டுள்ளது.  மேலும் அந்த அணுமின் உலைகள் தற்போது அமைக்கப் பட்டிருப்பதைத் தவிர அடுத்தோர் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆணையிட்டது.  2011 மே 6 ஆம் தேதி கடற் கரையில் அமைக்கப் பட்டுள்ள ஹமோகா (Hamaoaka) அணுமின் உலையில் அசுரச் சுனாமிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதிதாய் அமைப்பது வரை நிலையத்தைப் பிரதம மந்திரி நிறுத்தம் செய்தார்.  மே 10 ஆம் தேதி பிரதம மந்திரி ஜப்பான் எதிர்கால எரிசக்தி ‘அரசியல் நியதி’ (Govt Policy) திசைமாறப் போவதாகக் கூறினார்.  2030 ஆண்டுக்குள் ஜப்பானின் 50% பங்கு மின்சாரத் தேவையை புதிய அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என்னும் அரசியல் நியதி நீக்கப்படுவது பற்றிப் பேசினார்.  அவற்றுக்குப் பதிலாக ‘புதுப்பித்து மீளும் எரிசக்தி, சிக்கனச் சேமிப்பு எரிசக்தி (Renewable Energy & Conservation) ஏற்பாடுகள் வரவேற்கப்படும் என்றும் கூறினார்.  புகுஷிமா அணு உலைகள் விபத்தாலும், நிறுத்தம் அடைந்த சில அணுமின் நிலைய முடக்கத்தாலும் ஜப்பான் 3473 MWe மின்சார உற்பத்தியை இப்போது இழக்க நேரிடுகிறது.  அது உடனே நிரப்பப்பட வில்லையாயின் பல தொழிற்சாலைகள் மூடப்படும்,  மேலும் பல்லாயிரம் ஊழியர் தமது வேலை இழப்பார்.
முடிவுரை:   உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலை யத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.
(தொடரும்)