புதன், 18 ஜனவரி, 2012

பிரபஞ்சத்தின் தோற்றம் - பகுதி 1


அல்பேர்ட் ஐன்ஸ்டீன்

நமது கண்ணுக்கு தெரியும் பிரதான வான் பொருட்களான சூரியன் மற்றும் கிரகங்கள் என்பனவற்றின் மையம் பூமி அல்ல சூரியனே என்ற முடிவுக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.


இதன் பிண்ணனியில் சென்ற தொடரில் நவீன வானவியல் எவ்வாறு தோற்றம் பெற்றது என வரலாற்றுக் குறிப்புக்களுடன் ஆராய்ந்தோம். இத்தொடரில் பிரபஞ்சம் எவ்வாறு தோற்றம் பெற்றது? என்பதைப் பற்றி அலசுவோம். பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது என்ற கருத்துக்கள் முன்பு நிலவி வந்தன. ஆயினும் 21ம் நூற்றாண்டில் அறிஞர்களால் விவாதிக்கப் பட்டு வரும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கருதுகோள்களில் ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த "பெரு வெடிப்புக் கோட்பாடு" (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகள் மிக எளிமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார். பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் முக்கியமான கொள்கைகள் இரண்டு.


    அதில் முதலாவது ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை.
    அடுத்தது குவாண்டம் கொள்கை.

இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியினை வளைக்கும் தன்மை கொண்டது என்பதே ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவம். அதே போல் இயற்கையின் அடிப்படைக் கூறுகளான ஒளி,இடம்,காலம் போன்றவை தொடர்ந்து பிரிக்கக் கூடியவை அல்ல என்பதே குவாண்டம் கொள்கை.


இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெருவெடிப்புக் கொள்கை சொல்வது என்னவென்றால் இப்பிரபஞ்சத்தில் உள்ள பொருள் மற்றும் சக்தி இரண்டும் இணைந்து இறுகி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியாத அளவு அடர்த்தியுடன் சில மில்லி மீட்டர்கள் விட்டமே உடைய ஒரு பந்தாக சூரியனை விட பல பில்லியன் மடங்கு வெப்பத்துடன் ஆதியில் இருந்தது என்பதாகும். சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்னமும் கண்டறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் இப்பந்து வெடித்துச் சிதறியதில் முதல் அணுக்களான ஐதரசன்,ஹீலியம் உட்பட இன்றுள்ள காலக்ஸிகள்,கருந்துளைகள், குவாசர்கள்,நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் தோற்றம் பெற்றன. மேலும் இத்தொகுதிகள் யாவும் அழிந்தும் சிதைந்தும் வேறொன்றாக மாறியும் எல்லையற்ற காலப் பெருவெளியில் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருள்,சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும்பொருளும், 4 வீதம் காலக்ஸிகளுக்கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன்,ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம் நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும்,0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன.


பிரபஞ்சத்தின் கட்டமைப்பு சடப்பொருள் மற்றும் சக்தி வீதங்கள்
இதில் கரும்பொருள் என்பது அது வெளியிடும் கதிரியக்கத்தின் மூலம் வானியல் உபகரணங்களால் அவதானிக்க முடியாத ஆனால் அண்டவெளியிலுள்ள விண் பொருட்களைத் தள்ளும் ஈர்ப்பு விசையால் இணங்காணப்படும் சடப்பொருளாகும். கரும் சக்தி என்பது பிரபஞ்சத்தின் விரிவை ஒவ்வொரு கணமும் துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்புக் கொள்ள முடியாத சக்தியாகும்.


இவற்றுடன் பிரபஞ்சத்தில் உள்ள காலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் யாவும் பெருவெடிப்பின் பின்னர் படிப்படியாக எப்படித் தோற்றம் பெற்றன என்பதை இப்போது பார்ப்போம்.பெருவெடிப்பு ஏற்பட்ட முதலாவது செக்கனில் ஏற்பட்ட மூலக்கூற்று நிலையிலான மாற்றங்களை பிரபஞ்சவியலாளர்கள் ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளனர். இதில் முதலாவது ப்ளாங் இப்போ எனப்படுகிறது. இது பெரு வெடிப்பு ஏற்பட்டு 10 இன் -43ம் அடுக்கு செக்கனின் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களைக் குறிப்பது. இதன்போதே  விண்வெளியிலுள்ள நான்கு அடிப்படை விசைகளான  மின்காந்தவிசை, நுண்ணிய அணு விசை, கடின அணு விசை,ஈர்ப்பு விசை என்பன தோற்றம் பெற்றன.


அடுத்தது கிராண்ட் யுனிfபிக்கேஷன் இப்போவாகும். பெருவெடிப்பு நிகழ்ந்து 10 இன் -43 ம் அடுக்கிற்கும் 10 இன் -36 ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட செக்கனில் நிகழ்ந்த மாற்றத்தை இது குறிக்கிறது. இக்காலப் பகுதியிலிருந்தே  விரியத் தொடங்கிய பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது. மேலும் கடின அணு விசையும் நுண்ணிய அணு விசையும் இணைந்து ஹிக்ஸ் போசொன் எனப்படும் நிறையுடைய அடிப்படைத் துணிக்கையை இந்த குறுகிய காலத்திலேயே உருவாக்கியது. கடவுள் துணிக்கை என்று கருதப்படும் அணுக்கருவின் உள்ளே இருக்கும் ஆறு மூலத் துணிக்கைகளில் ஒன்றான ஹிக்ஸ் போசொன் பிக்பாங் கொள்கையை நிரூபிப்பதற்காக தற்போது ஜெனீவாவிலுள்ள சேர்ன் அணுவாராய்ச்சி நிலையத்தில் பரிசோதிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.


அடுத்த கட்டமான 10 இன் -36ம் அடுக்கிற்கும் 10 இன் -32ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை இன்fப்ளேசனரி இப்போ எனவும் 10 இன் -12ம் அடுக்கு செக்கன் வரையான பகுதியை எலெக்ட்ரோ வீக் இப்போ எனவும் அழைப்பர். இன்fப்ளேசனரி இப்போவின் போதே இன்று விண்வெளியியலாளர்கள் தலையைச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கும் டார்க் எனெர்ஜி எனப்படும் கரும் சக்தி பிரபஞ்ச விரிவாக்கத்தைத் துரிதப்படுத்த தொடங்கியது. மேலும்  எலெக்ட்ரோ வீக் இப்போவின் போது  வெப்பநிலை 10 இன் 28ம் அடுக்கு கெல்வின் வரை குறைவடைந்ததால் கதிரியக்கம் ஆரம்பமாகி அணுக்களின் அடிப்படைத் துணிக்கைகளான குவார்க்குகள்,எலெக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரினோக்கள் உருவாகத் தொடங்கின.


மேலும் தற்போது பிரபஞ்சம் முழுதும் பரவியிருக்கும் பின்புலக் கதிர்வீச்சு இதன் போதே உருவானது. இக் கதிர் வீச்சே பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குக் காரணமாக பெரு வெடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்கலாம் என இன்று விஞ்ஞானிகள் கருதக் காரணமாகும்.இறுதியாக கருதப்படும் இரு பகுதிகள் குவார்க் இப்போ மற்றும் ஹட்ரொன் இப்போ என்பவை ஆகும். பெருவெடிப்பின் பின்னர் நாம் பார்த்த பகுதிகளில் இன்னமும் சடப்பொருளான அணுக்கருக்கள் உருவாகவில்லை. 10 இன் -12ம் அடுக்கிற்கும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட குவார்க் இப்போவின் போதே நான்கு அடிப்படை விசைகளும் பிரிக்கப்பட்டு தனியாக்கப்படுகின்றன.


இதனால் குவார்க்குகள் வலுப்பெற்று புரோட்டன் எனும் அணுக்கருவை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. ஆனால் வெப்பநிலை மிக மிக அதிகமாக இருந்ததால் இக்கருத்தாக்கம் சாத்தியமாகவில்லை. அடுத்து வரும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் 1 செக்கனுக்கும் இடைப்பட்ட ஹெட்ரோன் இப்போ காலப்பகுதியிலேயே நிறையுடைய சடப்பொருள் உருவாகிறது.அதாவது குவார்க்-குளுவோன் பிளாஸ்மா மூலம் வெப்பநிலை வீழ்ச்சியடைந்த பின்னர் ஹட்ரோன்கள் என அழைக்கப்படும் அணுக்கருவை ஆக்கும் நேர்த் துணிக்கையான புரோட்டன்களும், நடுநிலைத் துணிக்கையான நியூட்ரோன்களும் தோற்றம் பெறுகின்றன. இதன்மூலம் பல மில்லியன் நட்சத்திரங்களின் தொகுதியான காலக்ஸிகள் அதாவது அண்டங்கள் முதல் நாம் வாழும் பூமி போன்ற கிரகங்கள் வரை உருவாக வழி ஏற்பட்டது.




சனி, 14 ஜனவரி, 2012

கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2


அகலாது அணுகாது தீக்காய்வார் போல
நுகராது மின்சாரம் ஆக்கு.


அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது! அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்! பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்! நாம் உட்பட வாழும் எல்லா உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன!


விக்டர் கில்லிமின் [Victor Guillemin]

Fig. 1
Radiation Exposure
கதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க முடியுமா?


உலகில் கதிரியக்கமே படாத, கதிர்ப் பொழிவுகளை இதுவரை நுகராத, மருத்துவச் சாலைகளில் கதிர்வீச்சில் உடல்நலம் ஆராயப் படாத, புற்று நோயிக்குக் கதிரூட்டிக் குணப்படுத்தப் படாத, இயற்கைக் கதிரியக்கத்தில் என்றுமே தாக்கப்படாத மாந்தர்கள் எங்கேயாவது வாழ்ந்து வருகிறார்களா ? நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக் வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம்! கதிரியக்கத்தின் கைவசப் படாமலே காலம் தள்ளி விடலாம் என்று கனவு காண்பவர், அதற்கு அஞ்சி ஒளிபவர் கண்களைத் திறந்து மெய்யுலகுக்கு வாருங்கள் !


கதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது! மூக்கால் நுகர முடியாது! உடம்புத் தோலால் உணரவும் முடியாது! அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்! கற்கால மனிதன் முதன் முதலில் தீயின் கோரக் குணங்களை அறிந்து கொண்டது போல், நமக்கு உதவும் கதிரிக்கத்தின் தீவிரப் பண்புகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் !

Fig. 1A
Radiation Control in
Indian Reactors
இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்! அது போல் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம் !


பலனும், பாதகமும் ஒருங்கே கொண்ட கதிரியக்க ஏகமூலங்கள் கடந்த 50 ஆண்டுகளாக உலகெங்கும் மருத்துவச் சாலைகள், தொழிற் கூடங்கள், விஞ்ஞானப் பொறியியல் ஆய்வுத் துறைகள், மின்கலன்கள் [Batteries] உற்பத்தி, வேளாண்மை ஆய்வுச் சாலைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன் பட்டு வருகின்றன! கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை! “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”, கவசங்களை அணிந்து கொண்டு, நமக்குப் பயன் அளிக்கும் கதிரியகத்தைக் கட்டுப் படுத்திக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை !

Fig. 1B
What is Radioactivity ?
கதிரியக்கம் தாக்கும் உலோகத் தனிமங்கள் எங்குள்ளன ?


இயற்கையாகவே நம்மைச் சுற்றி வாழும் இடத்திற்கு ஏற்றபடி, எல்லாத் திசைகளிலும் உலவி உள்ள “பின்புலக் கதிரியக்கம்” [Background Radiation] ஓரளவு எப்போதும் நம்மைத் தாக்கி வருகிறது! விண்வெளியி லிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன! நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், உல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது! பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், ரேடியம், போலோனியம் போன்ற நிலையற்ற மூலகங்கள் [Unstable Elements], அணு உலைகளில், விரைவாக்கி யந்திரங்களில் ஆக்கப்படும் புளுடோனியம்-239, யுரேனியம்-233 போன்ற செயற்கை மூலகங்கள், ஏகமூலங்கள் கதிரியக்கம் எழுப்புபவை. பொது நபர்கள் வாங்கும் கதிர்வீச்சில் 80% பின்புலக் கதிரியக்கமே மிகுதிப் பங்கு பெறுகிறது! வீட்டின் கீழ்த்தளப் பிளவு களிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது! ரேடான் வாயுவைக் காண முடியாது! அதை உணர முடியாது ! நுகரவும் முடியாது!


Fig. 1C
Natural & Man-made Radiation
வட அமெரிக்க வீடுகள் எல்லாம் குளிரைத் தடுக்கக் காற்றடைப்பு இல்லங்களாய்க் கட்டப் படுவதால், கசியும் ரேடான் வாயு வெளியேறாமல் வீட்டுக் குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறது! ரேடான் தேய்வில் வெளிவிடும் ஆல்ஃபா துகள்கள், அதைச் சுவாசித்து உட்கொள்ளும் வீட்டு நபர்கள் செல்களைச் சிதைத்துப் புப்புசங்களில் புற்று நோயை உண்டாக்கும் !


இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதிய கதிர்வீச்சு சுரப்பிகள் [Radiation Sources] தோன்றின! எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன! மனிதன் செயற்கையாக உண்டாக்கும் கதிர்வீச்சால் 18% பங்கு கதிரியக்கத்தை உயிரினங்கள் பெறுகின்றன!

Fig. 1D
Natural & Man-made Radiation
Percentage Quantity
கதிர்வீச்சு, கதிரியக்கம் என்றால் என்ன?
ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ராஞ்சன் 1895 ஆம் ஆண்டு ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டு பிடித்தார்! அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ஃபிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார். அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர்! அணுவியல் விஞ்ஞானத்தில் புரட்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள்! 1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார்! அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார்! ஐரீன் கியூரியும், ஜேம்ஸ் சாட்விக்கும் அவரது அரிய சாதனைகளுக்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டனர்!

Fig. 1E
Medical Doses for Diagnosis & Treatment
இயற்கையில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட மூலகங்கள், அவற்றின் ஏகமூலங்கள் [Elements & Isotopes] கதிர்வீசிப் பளு குறைந்து, குறைந்து தேய்வடைகின்றன. அத்துடன் அணு உலைகளிலும், விரைவாக்கி யந்திரங்களிலும் [Accelerators] செயற்கையாக 200 மேற்பட்ட மூலகங்களும், ஏகமூலங்களும் உண்டாக்கப் பட்டு, அவ்விதமே அவையும் தேய்ந்து கதிர் வீசுகின்றன. கதிர் மூலகங்களும், ஏகமூலங்களும் உமிழும் கதிர்வீச்சில் ஆல்ஃபாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] என்பவைச் சேர்ந்தோ, அன்றித் தனித்தோ எழுகின்றன! அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை! அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன. ஆல்ஃபா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles]. இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யாவும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations]. மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை. சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம்! முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் ! வாழும் மாந்தருக்கும், உயிரினங்களுக்கும் தீங்குகளை விளைவிப்பது கதிரியக்கம்!

Fig. 1F
Radioactive Particles &
Rays
கதிர்வீச்சுகளின் போக்கும், தடுப்புக் கவசங்களும்


நேர் மின்கொடை யுள்ள [Positive Charge] ஆல்ஃபா அணுக்கரு இரு புரோட்டான், இரு நியூட்ரான் கொண்டு, மிகையான பளுக் கொண்டதால், மனிதத் தோலைக் கடக்க முடியாது. ஒரு தாள் காகிதம் அதைத் தடுத்து நிறுத்தி விடும்! ஆனால் மூக்கின் வழியாகவோ, வாய் மூலமாகவோ ஆல்ஃபாத் துகள், மனித உடம்புக்குள் நுழைந்து விட்டால், அது பெருந் தீங்கிழைக்கும் !


வேகமாய்ப் பாய்ந்து செல்லும் பீட்டாத் துகள், அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர் மின்கொடை யுள்ள [Negative Charge] ஓர் எலக்டிரான்! அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை! தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் ! பீட்டாத் துகள்கள் வாய், மூக்கு வழியாக மனித உடம்பை அண்டி விட்டால், தீங்குகள் உண்டாக்கும் !

Fig. 2
World Uranium Availability
ஊடுறுவும் சக்தி மிகுந்த காமாக் கதிர்களைத் தடுக்க ஈயத் தகடோ அல்லது தடித்த காங்கிரீட் சுவரோ தேவைப் படுகிறது! எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவிரத் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத் துக்கும் விளைவிக்கின்றன! கதிர்வீச்சுத் துணுக்குகள் மூக்கு, வாய் வழியாகச் சென்று உடம்பினுள் ஒட்டிக் கொண்டால், செல்கள் சிதைக்கப் பட்டு புற்று நோய் உண்டாகக் காரண மாகிறது !


எக்ஸ்ரே கதிர்கள், மருத்துவச் சாலைகளில் செயற்கை முறையில் உண்டாக்க படும் மின்காந்த அலைகள். பொதுவாக அவற்றை நிபுணர்கள் அளவாகக் கையாளுவதால், தவறுகள் ஏற்பட்டு உடம்பில் அளவு மீறிச் செலுத்துதல் என்பது குறைந்த எண்ணிக்கைச் சம்பவங்களே !


நியூட்ரான்கள் அணு உலைகளிலும், அணுப்பிளவு விளைவுகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளியேறும் துகள்கள். நியூட்ரான் மின்கொடை யில்லாத [Neutral Charge] பரமாணு ! அவை உடம்பை ஊடுறுவும் போது, உடம்பிலுள்ள ரசாயனப் பொருட்கள் தாக்கப் பட்டுக் கதிரியக்கத்தை எழுப்பி, அடுத்துக் கேடுகள் விளையலாம் !

Fig. 3
Radiation Shielding
பாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடியால் விளையும் தீங்குகள்:


முதன் முதல் இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்! நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம்!


அண்டவெளிக் கதிர்கள், பொட்டாஸியம்40, ரேடான் வாயு ஆகியவற்றால் இயற்கையாகப் பெறும் கதிரியக்கம்: 200-300 m.rem. [milli rem. 100 rem = 1 sievert].


அணு ஆயுதச் சோதனை கதிர்ப் பொழிவுகள்: 1.0 m.rem.


உடல் நல மருத்துவ ஆய்வுகள்: 50 m.rem.


வீட்டுச் சாதனங்கள் [புகை உளவிகள், ஒளிக் கடிகாரங்கள்]: 2.0 m.rem.


அணு உலைத் தொழிலாளி: ஆண்டுக்கு 200-300 m.rem.

Fig. 4
Nuclear Fuel & its Fabrication
பொதுவான இயற்கைப் பின்புலக் கதிர்வீச்சால் பெறும் 200-300 m.rem கதிரடியால், 10,000 பேரில் ஒரு நபருக்குப் புற்று நோய் வரலாம்!


ஒரு நபரை 10 rem கதிரடி ஒரே சமயம் தாக்கினால், 1000 இல் 1 நபருக்குப் புற்று நோய் வரலாம்! [மற்ற நச்சுப் பொருள்களால் புற்று நோயில் தாக்கப் படுபவர், 1000 இல் 160-200 பேர்கள்].


100 rem கதிரடி வாங்கும் நபர்கள் வாந்தி மயக்கம் அடைவர். அவர்கள் 1000 பேரில் 10 பேர் அடுத்த ஆண்டே புற்று நோயில் தாக்கப் படுவார்!
300-600 rem கதிரடி பெறுவோர் சில மணி நேரத்திலே வாந்தி மயக்க மடைந்து, இரத்த செல்கள் பாதிப்பை அடைவர்! ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர்! மருத்துவச் சிகிட்சை மரண எண்ணிக்கையைக் குறைக்கலாம். 450 rem கதிரடி பெற்றவர்களில் 50% நபர்கள் இறந்து போவார்!


1000 rem வாங்கிய நபர்கள் உடனே நோய்வாய்ப் பட்டு, மருத்துவச் சிகிட்சை அளிப்பினும் சில வாரங்களில் இறந்து போவார்!


5000-10,000 rem கதிரடி வாங்குவோர் உடனே மாண்டு போவார்!

Fig. 5
Effects of Radiation
கதிரியக்க தாக்குதலால் மனிதருக்கு விளையும் தீங்குகள்!
கதிர்வீச்சுகளால் நேரும் தீங்குகளை இரு வகையாகப் பிரிக்கலாம்! ஒன்று உடல் விளைவு [Somatic Effect]; மற்றொன்று சந்ததி மூலவிகள் விளைவு [Genetic Effect]. உடல் விளைவுகளில் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை மயிர் உதிர்தல், புற்று நோய், அல்லது மரணம் ஆகியவை 1000 rem கதிரடி வாங்கிய மாந்தருக்கு நேர்ந்திடலாம்!


கதிர்வீச்சுத் துணுக்குகள் மனித உடலுக்குள் நுழைந்து செல்களை மின்னிகளாக்கி [Ionizing Body Cells] பாதிக் கின்றன. சில சமயம் உடம்பே பழுதைச் சரிப்படுத்துகிறது! பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும்! கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளைவிக்கலாம்! அல்லது குன்றிய காலம் வரைத் துன்புறுத்தலாம்!


அணு உலைகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளிவரும் ஐயோடின்-131 ஏகமூலத்தின் [Isotopes] அரை ஆயுள்: 8 நாட்கள்! ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள்! சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள்! இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு அதைச் சிதைக்கிறது! ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது! சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது! இவற்றை உடம்பிலிருந்து அகற்றுவது மிகவும் கடினமான செயல்!

Fig. 6
Radiation Doses from Natural Sources
ஆனால் இதற்கு முரணாகக் கதிர்களால் மூலவிகள் துண்டிக்கப்படும் [Genes Mutations] போது, தாக்கப் பட்டோருக்குப் பிறக்கும் சந்ததிகள் பாதகம் அடைகின்றன! ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை! ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன! புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே! கதிரடி அளவுகள் அதிக மாகும் போது, அவ்விளைவுகளின் எண்ணிக்கையும் மிகைப்படுகிறது!


செர்நோபிள் அணு உலை விபத்தில் பரவிய கதிரியக்கப் பொழிவுகள்


1986 ஏப்ரல் 26 ஆம் தேதி சோதனையின் போது விபத்தில் வெடித்த செர்நோபிள் ரஷ்ய அணு உலை வெளியாக்கிய கதிர்ப் பொழிவுகள் நார்வே, சுவீடன், பிரிட்டன் நாடுகளில் பரவி, மற்றும் பல்லாயிரம் மைல் கடல் கடந்து, கனடா விலும் அதன் கதிரியக்கம் உளவின் போது அறியப்பட்டது! நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது! அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது! மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது! 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள் ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது! ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர்! அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள்! அவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறு குழந்தைகள்!

Fig. 7
Dose Limits to Personnel &
Effects
கதிர்வீச்சுக் குறைப்பு! கதிர்வீச்சுப் பாதுகாப்பு!


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், மனித இனங்கள் இயற்கையில் பரவிய கதிர்வீச்சுக் கடலில் வாழையடி வாழையாய் நீந்தி வந்து, இன்னும் அவற்றின் சந்ததிகள் தொடர்கின்றன! கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக் கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை நிகழ்ச்சி யாகும்! மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது! ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதியாகப் பாதுகாக்கப் பட வேண்டும்! அவை நுகரும் காற்றில் கதிர்வீச்சுத் துணுக்குகள் கலக்காமல் தூயதாக அமைந்திட யாவரும் ஒருங்கே பாடுபட வேண்டும்!


அதற்குக் கட்டுப்பாடுகள், வழி முறைகள் உண்டா? ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன! அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன! ஆனால் அவை போதா! கதிர்வீச்சுக் கழிவுகளைக் காங்கிரீட் சமாதிகளில் புதைக்கலாம்! கதிர்வீச்சு உயிரினங்களைச் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம்! சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம்! “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது! மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும் !

Fig. 8
Woman Handling Nuclear Fuel


(தொடரும்)


***********************

வெள்ளி, 13 ஜனவரி, 2012

அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1

 
நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒரு சிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக் கொண்டால், சூழ்வெளிக்கு என்ன என்ன தீங்கெல்லாம் நாம் விளைவிக்கிறோமோ, அவை யாவும் நம்மீதே மீண்டும் விழுகின்றன என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது ! ஏனென்றால் நாம் சூழ்மண்டலத்தின் இறுகிய பிடியிலிருந்து நம்மை என்றும் பிரித்துக் கொள்ளவே முடியாது ! கலியுகத்தில் உலக நாடுகள், தமது தொழிற்துறை உற்பத்திக் கழிவுகளைத் தம் குடிமக்கள் மீதே தெளித்துக் கொண்டு வருகின்றன.
டாக்டர் டேவிட் சுஸூக்கி (Dr. David Suzuki, Scientist & Environmentalist May 2005)
இருபதாம் நூற்றாண்டில் கதிரியக்கக் கழிவுகளுக்குப் புதைப்பிடம் அமைக்கும் முறைகள் ஒருவித விஞ்ஞான உளவு ஆய்வில் கண்டு முடிவு செய்யும் நெறிகளாய் ஆகிவிட்டன. பூமியில் வாழும் உயிரினங்களை விருத்தி செய்யும் நீர்வள, நிலவள, வாயுச் சூழ்வெளிக்கு இப்போதும் அல்லது எப்போதும் கேடு விளையக் கூடாது என்பதை விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலமாக முதலில் உறுதிப்படுத்திக் கொள்வது ஒரு முக்கியக் குறிக்கோளாகி விட்டது !
கனேடிய டிசைன் குழுவினர் (Atomic Energy of Canada Ltd)

முன்னுரை: கடவுளால் படைக்கப்பட்ட மனித இனங்களும், உயிரினங்களும், பயிரினங்களும் எத்தனை, எத்தனை விதமான கழிவுகளைத் தினமும் உற்பத்தி செய்து வருகின்றன! மனிதர் படைக்கும் தொழிற்துறைகள் மூலமாக எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்தாலும், எவ்வித முறையில் மின்சக்தி படைத்துப் பரிமாறி வந்தாலும் ஓரளவு அல்லது பேரளவுக் கழிவுகள் எச்சமாவதை யாவரும் தவிர்க்க முடியாது! இருபதாம் நூற்றாண்டில் யந்திர, இராசயன, மின்சாரத் தொழிற் சாலைகள் உலகில் பலமடங்கு பெருகி, இரண்டாம் தொழிற்புரட்சி பூத வடிவெடுத்தது ! இரண்டாம் உலகப் போருக்குப் பின், அணு ஆயுதப் பந்தயப் போட்டி உலகெங்கும் மறைவாக நிகழ்ந்து, அணு ஆயுத வெடிப்புகளால் கதிரியக்கப் பொழிவுகளைப் பூகோள மெங்கும் பரப்பி விட்டன ! ஆனால் இனிவரும் எதிர்பாராத போரில் அபாயகரமான அணு ஆயுதங்களைக் கொண்டு போரிடும் இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று வீசி விளையாடலாம் ! அல்லது மறைவாக உதவி புரியும் வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை விலைக்குக் கொடுத்து, வீசவிட்டு வேடிக்கை பார்க்கலாம் ! விடுதலையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வல்லரசுகள், தமது புதிய ஆயுதங்களைப் பிறர்மேல் சோதிக்கப் போர் தொடுத்துத், தாமே தமது வலையில் சிக்கிக் கொள்ளலாம் !

பயனீந்த எரிக்கோல் தடாகம்
(Spent Fuel bay)
தொழிற்துறை கழிவுகளை முற்றிலும் நீக்கச் சபதம் பூண்டு மனித சமுதாயம் முன்வந்தால், அணுமின்சக்தி நிலையங்கள் நிரந்தரமாய் மூடப்பட வேண்டும் ! நிலக்கரி மின்சார நிலையங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும். அநேக தொழிற் சாலைகளின் கதவுகளில் பூட்டுப் போட வேண்டும் ! ஆனால் அணு ஆயுத வல்லரசுகள் அவற்றின் பெருக்கத்தையும், சோதனைகளையும் உலகத்தில் முற்றிலும் நிறுத்தலாம் ! கைவசம் பதுக்கப் பட்டிருக்கும் அணு ஆயுதங்களின் தூண்டு விசையைத் துண்டித்துக் குண்டுகளை முடமாக்கலாம் ! மேலும் தொழிற்சாலைகளின் எச்சக் கழிவுகளைக் குறைக்கவும், கட்டுப் படுத்தவும், வீரியத்தை வடிகட்டவும் நாம் முயலலாம் !  புகை போக்கிகள் மூலம் வெளியேறும் விஷ வாயுக்களை வடிகட்டிச் சுத்தீகரிப்பு செய்யலாம் ! ஆற்றிலும், அணைகளிலும், கால்வாய்களிலும், ஏரிகளிலும், தடாகங்களிலும் கழிவுத் துணுக்குகள் புகாவண்ணம் நாம் கண்காணித்து வர முடியும் ! இவை அனைத்தையும் யார் தொடர்ந்து செய்ய வேண்டும் ? ஒவ்வொரு நாடும், நகரமும், ஊரும், கிராமமும், வாழும் குடிமக்களும் பொறுப்புடன், பொறுமையுடன் புரிய வேண்டிய அற்ப்போர் இது ! அப்பணிகளைக் கடைப்பிடிக்க அரசாங்கம் குடிமக்களுக்கு அறிவித்து, பயிற்சி அளித்து,  கண்காணித்து,  சட்ட மிட்டு, நெறியுடன் கண்டித்து வருவதைத் தவிர, மனித இனங்கள் தொழில் யுகத்தில் முன்னேறுவதற்கு வேறு வழியே யில்லை!

அணுமின்சக்தி உற்பத்தி விலை மலிவானதன்று !


அணுமின்சக்திபோல் விலை மிக்க மின்சக்தி எதுவும் இல்லை (No Power is as costly as Nuclear Power) என்றோர் புதுமொழி பழக்கத்தில் வந்திருக்கிறது ! அந்த கூற்றில் உண்மை இருப்பினும் அணுசக்தி உற்பத்தி செய்து பரிமாறி வருவதில் கிடைக்கும் பலாபலன்களும் ஒப்புநோக்கப்பட வேண்டும். முதலில் பேரளவு மின்சக்தியை அதன்மூலம் ஏராளமாக உற்பத்தி செய்ய முடிகிறது. இரண்டாவது ஹிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றம் அணுமின் நிலையங்களில் முற்றிலும் கிடையாது. அணுசக்தி உற்பத்தியும், பராமரிப்பும் செய்யும் போது, பணி புரிவோ ருக்கும், அண்டையில் வாழும் குடிமக்களுக்கும் கதிரடி படாது கதிரியக்கக் கண்காணிப்பும், பாதுகாப்பும் செய்ய நிதிச் செலவு மற்ற மின்சக்தி நிலையங்களை விட மிகையானது. மேலும் 40 அல்லது 50 ஆண்டுகள் அணுமின் நிலையங்கள் இயங்கிய பிறகு அவை நிரந்தர நிறுத்தமாகி அடக்கமாகும் போதும் (Decommissioning Stage), அணுக்கழிவுகள் நிரந்தரமாகப் புதைக்கப்படும் போதும் அதிகப் பணம் செலவாகிறது !

ஆயினும் அணுமின் நிலையங்களால் ஏற்படும் பிற தொழில்வள விருத்திகள், மனிதருக்கு வேலை வாய்ப்புகள் ஆகியவை ஒப்புநோக்க சிந்திக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்சக்தி நிலையங்கள் 4000 மெகாவாட் மின்சாரம் பரிமாறும். கனடா டிரென்ட் பல்கலைக் கழகத்தின் பொருளாதரப் பேராசிரியர் டாக்டர் ஹாரி கிட்சென் 2007 ஆம் ஆண்டில் அமைக்கப் போகும் 4000 மெகாவாட் அணுமின் நிலையத்தின் பலன்களை எடுத்துக் காட்டுகிறார்:


1.  19,000 மானிட ஆண்டுகள் (person years) அணுமின் நிலையக் கட்டுமான வேலைகள். அதாவது 2000 நபர்கள் எட்டரை ஆண்டுகள் கட்டுமான வேலையில் ஈடுபடுவார்.


2.  116,000 மானிட ஆண்டுகள் அணுமின் நிலைய இயக்க வேலைகள். அதாவது சுமார் 3000 நபருக்கு 40 ஆண்டுகள் இயக்க வேலைகள் அமையும்.


3.  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் பிராந்திய நிதிவள விருத்தி உண்டாகும். அணுமின் நிலையத்தின் ஆயுள் நீடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் வரை இயங்கலாம்.


4.  சொத்துக்கள் மூலம் முனிசிபல் வருமானம் ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர்.


5.  அணுமின் நிலையச் சாதனங்கள் உற்பத்தி, உபரிகள் தயாரிப்புட் தொழிற்துறைகள் விருத்தி, வேலை வாய்ப்புகள்.

இங்கிலாந்தில் அனுமானிக்கப்படும் கதிரியக்கக் கழிவுகள் (2007)


அணு உலைகளில் உண்டாகும் கழிவுகளின் மதிப்பீடை ஒப்பிடக் கீழ்க்காணும் மாதிரி அளவுகள் பிரிட்டன் அணுசக்தி நிறுவகங்களிலிருந்து எடுக்கப்பட்டது:


1. மேல்நிலைக் கழிவுகள் : 2000 கி.மீடர்.


2. இடைநிலைக் கழிவுகள் : 350,000 கி.மீடர்.


3. தணிவுநிலைக் கழிவுகள் : 30,000 கி.மீடர்.


4. தீய்ந்த எரிக்கோல்கள் : 10,000 கி.மீடர்.


5. புளுடோனியம் : 4,300 கி.மீடர்.


6. யுரேனியம் : 75,000 கி.மீடர்.

கனடாவில் உண்டாகும் அணுவியல் கதிரியக்கக் கழிவுகள்


கனடாவில் இயக்கத் தகுதி பெற்ற 22 வணிகத்துறை அணுமின் நிலயங்கள் கடந்த 30 ஆண்டுகளாக 2003 ஆண்டு முடிவு வரை 1.7 மில்லியன் தீய்ந்த எருக் கட்டுகளை [Spent Fuel Bundles] வெளியாக்கி யுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் அந்த அணுமின் உலைகள் சுமார் 85,000 தீய்ந்த எருக்கட்டுகளை உற்பத்தி செய்யும். இயக்க ஆயுள் எல்லை கடந்து அவை யாவும் காலாவதியாகும் போது, மொத்தம் 3.6 மில்லியன் எரிக்கழிவுக் கட்டுகள் சேரும் என்று மதிப்பிடப் படுகிறது. அணுமின் உலைத் தளங்களில் கதிரியக்கக் கழிவுகளைப் பாதுகாப்பாய்ச் சேர்த்து வைக்க, நீர்த் தடாகங்கள் எனப்படும் ‘நீர்நிலைச் சேமிப்பு’ [Wet Storage], காங்கீரிட் இரும்புக்கலன் எனப்படும் ‘வரண்ட சேமிப்பு ‘ [Dry Storage] ஆகியவை தற்காலிகச் சேமிப்புக்கு அமைக்கப் பட்டுள்ளன. முதல் சேமிப்புத் தடாகத்தில் [Primary Storage Bay] தீய்ந்த எருக்கட்டுகள் 6 அல்லது 9 மாதங்கள் தங்கியும், அதற்குப் பிறகு இரண்டாம் சேமிப்புத் தடாகத்தில் [Secondary Storage Bay] 2 அல்லது 3 வருடங்கள் தங்கியும், தொடர்ந்து நீரோட்டத்தால் வெப்பசக்தி நீக்கப்பட்டு கண்காணிக்கப்படும். நீண்ட கால வரண்ட சேமிப்புக்கு 50 முதல்-100 ஆண்டுகள் வரை காங்கிரீட் கலன்களில் சேமிக்கப்பட வேண்டும். 2002 ஆண்டு கனடாவில் நிறைவேறிய அணுவியல் கழிவு புதைப்புச் சட்டப்படி [Nuclear Fuel Waste Act], அணுவியல் கழிவு மேற்பார்வை துறையகம் [Nuclear Waste Management Organization (NWMO)] தோன்றி பணி செய்ய ஆரம்பித்தது.

வெளிவரும் தீய்ந்த கழிவுகளை நீர்த் தடாகத்தில் சேமித்து வைக்க, இரண்டு நீக்க முறைகளில் அவை பாதுகாக்கப் பட வேண்டும். முதலாவது: வெப்ப நீக்கம் [Heat Removal]. இரண்டாவது: கதிர்வீச்சு குறைப்பு [Radiation Reduction]. கழிவுகள் முதலில் சேமிக்கப்படும் நீர்த் தடாகம் அவ்விரு தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. அணு உலையி லிருந்து  உடனே நீக்கப்படும் சூடான எருக்கட்டு சுமார் 10% வெப்பசக்தி உண்டாக்குகிறது. அந்த வெப்பத்தைத் தணிப்பது நீர்த் தடாகத்தில் இயங்கிவரும் நீரோட்டமாகும். அவ்விதச் சுற்று நீரோட்டம் வெப்பக் கடத்தி [Heat Exchangers] மூலமாக அனுப்பப்பட்டு, வடிகட்டுச் சாதனங்கள் [Filter Equipment] வழியாக ஓடி, பிளவுக் கழிவுகளின் வெப்பத்தையும் [Fission Product Delay Heat], கதிரிக்க வீரியத்தையும், துணுக்குகளையும் குறைக்கிறது. ஒரே நாள் தேக்கத்தில் 10% வெப்பசக்தி, 1% வெப்பசக்தியாக எருக்கட்டுகளில் தணிகிறது. ஓராண்டில் 0.1% ஆக வெப்பசக்தி குன்றுகிறது. அதாவது சராசரி 100 W வெப்பத்தை தீய்ந்த ஒரு காண்டு எருக்கட்டு [One CANDU Spent Fuel Bundle] ஓராண்டுக்குப் பிறகு வெளியாக்குகிறது! கழிவுகளின் கதிர்வீச்சுக்குப் போதிய கவசம் அளித்துக் கதிரியக்கத்தைத் தணிக்க, குறைந்தது 10 அடி [3 மீடர்] ஆழமுள்ள நீர்த்தடாகம் தேவைப்படும். நீர்க் கவச மில்லாத கதிரியக்கக் கழிவு முதலில் வீசும் கதிரடி [5000-6000 Rem/Hr (50-60 Sv/Hr)], சில நிமிடத் தாக்குதலில் ஒருவருக்கு மரண அளவு [Lethal Dose] தருகிறது! 50 ஆண்டுக்குப் பிறகு 1 Sv/Hr ஆகவும், 100 ஆண்டுக்குப் பிறகு 0.3 Sv/Hr ஆகவும், 500 ஆண்டுக்குப் பிறகு 0.001 Sv/Hr (100 mRem/Hr) ஆகவும் மிக மெதுவாகக் குறைகிறது!
[Sv means Sievert Radiation Dose, 1 Sv=100 Rem]

1978 ஆம் ஆண்டில் கனடா அரசாங்கம், அண்டாரியோ மாநில அரசுக் குழுவினருடன் இணைந்து, நீண்ட கால நிரந்தரப் புதைப்புக்கு, அணுவியல் கழிவுக் கண்காணிப்புத் திட்டத்தைச் [Nuclear Waste Management Program] சீராய் நிறைவேற்றியது. கனடா அணுவியல் துறையகம் [Atomic Energy Canada Ltd (AECL)] அதன் ஆய்வு, விருத்திப் பணிகளின் [Research & Development Tasks] பொறுப்பை ஏற்றுக் கொண்டது. AECL அம்முறையில் டிசைன் செய்து முடிவு செய்த அமைப்பு இதுதான்: 1600 முதல் 3600 அடி [500 முதல் 1000 மீடர்] ஆழமுள்ள கடினப் பாறைச் சுரங்களின் குகைப் பாதைகளில் காங்கீரிட் அரண்கள் அமைக்கப் பட்டு, கதிரியக்கக் கழிவுகள் நிரந்தரமாக நீண்ட காலச் சேமிப்பு செய்யப்படும். அத்திட்டம் 1994 அக்டோபரில் தயாரிக்கப்பட்டு, 1998 மார்ச்சில் கனடாவின் சூழ்வெளிக் காப்பகம் மக்களுடன் உரையாடி 2002 ஆம் ஆண்டில் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அணுவியல் கழிவு அரண் அமைப்புத் துறையகம் [Nuclear Waste Management Organization (NWMO)] அமைப்பாகி இயங்க ஆரம்பித்தது. கனடாவின் நிதி ஒதுக்கமான (8-11) பில்லியன் அமெரிக்கன் டாலர் தொகை (60-90) ஆண்டுகளுக்குப் பகுக்கப்பட்டு அளிக்கப்படும். அப்பணியில் உச்ச வேலை நடக்கும் போது சுமார் 1000 பேர் பணி செய்வார்கள்.

மூன்று விதமான கதிரியக்கக் கழிவுகள்


அணுமின்சக்தி உலைகள் இயங்கிவரும் போது, தொடர்ந்து கதிரியக்கக் கழிவுகள் விளைந்து வருகின்றன. கதிரியக்கத்தால் மனிதருக்கு தீங்குகள் விளைவதால் அவற்றைக் கவனமுடனும், பாதுகாப்புடனும், கண்காணிப் புடனும் கையாள வேண்டும். முதலில் கழிவுகளை வெளிவர வைத்து நீர்த் தடாகத்தில் முடக்கும் பணியாளிகள் பாதுகாக்கப் படவேண்டும். அடுத்து நிலையத்தைச் சுற்றி வாழும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் கதிரியக்க வாயுக்கள் அரணை விட்டு வெளியேறாமல், சூழ்வெளி சுத்தமாக இருக்க பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் அணுவியல் கழிவுகள் அனைத்தும் வெகு கவனமாகக் கட்டுப்பாட்டு நெறி முறைகளில் கையாளப்பட்டு, நிரந்தரச் சுரங்கங்களில் புதைக்கப்பட வேண்டும். அணு உலைகள் மூலமாக வெளியேறும் கதிரியக்கக் கழிவுகள் மூன்று தரத்தில் பிரிக்கப்படுகின்றன. வீரிய நிலை, இடைநிலை, கீழ்நிலை [High Level, Intermediate Level, Low Level] என்று மூன்று வகுப்பில் தனித்திடப்பட்டு சேமிக்கப் படுகின்றன. இக்கட்டுரையில் வீரிய நிலைக் கழிவுகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது. மற்ற இடைநிலை, கீழ்நிலைக் கழிவு சேமிப்பு முறைகளை நான் முன்பு திண்ணையில் எழுதிய கட்டுரைகளில் காணலாம் [கீழ்த் தகவல் குறிப்புகள்: 12, 13].

இருபதாம் நூற்றாண்டில் கதிரியக்கக் கழிவுகளுக்குப் புதைப்பிடம் அமைக்கும் முறைகள் ஒருவித விஞ்ஞான உளவு ஆய்வில் கண்டறியும் நியதிகளாய் ஆகி விட்டன. பூமியில் வாழும் உயிரினங்களுக்கு, செழிப்பான நீர்வள, நிலவளச் சூழ்வெளிக்கு இப்போதும் அல்லது எப்போதும் கேடு விளையக் கூடாது என்பதை விஞ்ஞான ஆராய்ச்சிகள்  மூலமாக முதலில் உறுதிப்படுத்திக் கொள்வது ஒரு முக்கியப் பணியாகி விட்டது! அந்த முயற்சி களில் ஈடுபடும் போது புதைப்பிடத்தில் நீண்ட கால பூதள-இரசாயன, அடித்தள நீரோட்ட இயக்கங்களால் [Geochemical & Hydrologic Behaviour] சூழ்மண்டலம் பாதிக்கப்படுமா என்று ஆழ்ந்து நோக்க வேண்டும். அவற்றைச் சோதனை செய்ய AECL ஓர் அடித்தள ஆய்வுக் கூடத்தை [Underground Research Laboratory] மானிடோபா மாநிலத்தின் தலைநகரான வின்னிபெக்கில் வெகு ஆழத்தில் உள்ள ஒரு சுரங்கக் குகையில் நிறுவகம் செய்துள்ளது..

நிரந்தரப் புதைப்பிடம் தேர்ந்தெடுப்பும், முடிவு அறிவிப்பும்
1998 ஆம் ஆண்டில் அணுவியல் கழிவுப் புதைப்புக் குழுவிற்கு [Nuclear Waste Management Organization] மூன்று வித சேமிப்பு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, மூன்றாண்டுகள் தரப்பட்டன. புதைப்பிட முடிவு 2005 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
1. கனடாவில் மூடப் பட்டிருக்கும் பாதாளச் சுரங்கக் கிடங்குகள் [Deep Underground in the Canadian Mines]


2. அணுமின் உலைத் தளங்களில் மேற்தள அமைப்புகள் [Disposal Sites Above-ground at Reactor Locations]
கனடா நாட்டு நடுவில் அமைக்கப்படும் பொதுவான புதைப்பிடம் [Common Centralized Disposal Area].   AECL  கம்பெனி, மற்றும் அணுமின் சக்தி உற்பத்தியாளர்கள் முதலில் தரவேண்டிய மொத்த பணம்: 424 மில்லியன் அமெரிக்க டாலர். (அண்டாரியோ பவர் கம்பெனி: 400 மில்லியன்; குவெபெக் பவர் கம்பெனி: 16 மில்லியன்; AECL கம்பெனி: 8 மில்லியன்). மேலும் ஒவ்வோர் ஆண்டிலும் அந்தக் கம்பெனிகள் 2-100 மில்லியன் டாலர் தொகையும் அளிக்க வேண்டும்.

புரூஸ் தளத்தில் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளுக்குப் புதைப்பிடம்


அண்டாரியோ பவர் கம்பெனி [Ontario Power Generation (OPG)] புரூஸ் அணுமின்சக்தித் தளத்தில் தற்போது அமைந்துள்ள கழிவுச் சேமிப்புக் கூடத்தின் கீழே 2150 அடி [660 மீடர்] ஆழத்தில் பூதளக் குழிக் குகையில் [Geologic Repository] கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் சேமிக்கத் திட்டமிட்டுச் சுற்றுப்புற நகர மாந்தரிடம் உரையாடி விளக்கம் தந்து வருகிறது.


1. அருகில் ஹ¥ரான் ஏரி [Huron Lake] உள்ளதால், நீரோட்டச் சீர்கேடுகள் நேராதவாறு இருக்க 2150 அடி ஆழத்தைத் தேர்ந்தெடுக்க நேரிட்டது.


2. மேலும் ஹ¥ரான் ஏரியின் நீர் அடித்தள உயரம் குகைக்கு மேல் குறைந்தது 1300 அடி [400 மீடர்] உயரத்தில் இருக்கும்.


3. தேர்ந்தெடுத்த ஆழக் குகை அருகே உள்ள நிலத்து நீரின் உப்பளவு [Ground-water Salinity] கடல் நீரின் உப்பளவை விட மூன்று மடங்காக உளவு செய்யப் பட்டுள்ளது.

அதாவது கடந்த ஒரு மில்லியன் ஆண்டுகளாக ஹ¥ரான் ஏரிச் சுவைநீரும், குகை அடித்தள உப்புநீரும் கலந்திட வில்லை என்று அறியப் பட்டுள்ளது. அதனால் குகையில் புதைபடும் கதிரியக்கக் கழிவுகள் ஹ¥ரான் ஏரியின் சுவைநீரில் கலக்க முடியாது  என்பது உறுதியான சான்றாக கருதப்படுகிறது.


4. குகைப் பகுதியில் 450 மில்லியன் ஆண்டு வயதுடைய சுண்ணாம்புக் கல் மாதிரிகள் [Lime-stone Samples] எடுக்கப்பட்டுச் சோதிக்கப்பட்ட போது நிலநடுக்க அமைதிநிலை பெற்றவை [Seismically Stable Condition] என்று காணப்பட்டன.


5. 450 மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட பெருத்த காலநிலை மாறுதல்கள், பனியுகம் தாக்கிப் பரவியது, நில நடுக்கங்கள் போன்ற எவையும் பாறைகளின் ஒருமைப் பாட்டைச் சிதைக்க வில்லை.


6. அங்கிருக்கும் சுண்ணாம்புக் கல் ஆண்டுக்கு ஒரு மில்லி மீடர் நகர்ச்சி அடைந்து ‘தணிந்த நீர்க்கசிவுத் திரட்சி’ [Low Permeability] உள்ளதாக அறியப்பட்டது. அதாவது நீர்க்கசிவு நகர்ச்சி 1000 ஆண்டுகளில் ஒரு மீடர் நீளம் இருக்கும் என்று கணிக்கப்பட்டது! கழிவுகளுக்கு இது ஒரு முக்கிய கவசம். ஏனென்றால் புதைபடும் கழிவுகளின் நகர்ச்சி ஒடுக்கம் இதனால் உறுதிப் படுகின்றது.


7. 200 மீடர் உயரமுள்ள தணிந்த நீர்க்கசிவு திரட்சி உள்ள களிமண் தட்டின் [Shale] மீது சுண்ணாம்புக் கல் மேலடுக்கு இருப்பது, கதிரியக்கக் கழிவுகளுக்கு கூடுமான அரணாக அமைந்திருக்கிறது.

இந்தியாவில் அணுவியல் கழிவுகளின் நீண்ட காலப் புதைப்பு ?
இந்தியாவில் இயங்கிவரும் பல அணுமின் நிலையங்களும், அணுவியல் ஆய்வு உலைகளும், வேகப் பெருக்கி உலைகளும், அணு ஆயுதங்களுக்காகப் பயன்படும் தீய்ந்த எருக்கோல் சுத்தீகரிப்பு இரசாயனத் தொழிற் சாலைகளும் இராப்பகலாய் டன் கணக்கில் கதிரியக்கக் கழிவுகளைப் பெருக்கி வருகின்றன. அவற்றை எல்லாம் பாரதம் பாதுகாப்பாக அடக்கம் செய்ய, நீண்ட காலப் புதைப்பிடத்தை எங்கே, எப்படி, எப்போது நிறுவப் போகிறது என்பதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்காமலே இருக்கிறது. அவற்றின் எண்ணிக்கையை அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இந்தியா கனடாவின் காண்டு கனநீர் அணுமின் உலை டிசைன்களை வாங்கிப் பன்மடங்கு அணுமின்சக்தி உற்பத்தியைப் பெருக்கினாலும், கனடாவின் கதிரியக்கக் கழிவுப் புதைப்பு விதி முறைகளை ஏனோ பின்பற்ற வில்லை ! 2003 நவம்பரில் கனடாவின் அணுவியல் கழிவுப் புதைப்புக் குழுவினர், அனைத்து அணு உலைகளின் தீய்ந்த எருக்கட்டுகளின் மொத்த எண்ணிக் கையை வெளிப்படையாக அறிவித்து எப்போது, எங்கே, எவ்விதம், யார் பொறுப்பில் நிறைவேறப் போகிறது என்று அச்சிட்டு, பதிப்புகளை இலவசமாக அளித்து, ஊர் மக்களிடம் விவாத மன்றங்களில் வாதித்து உடன்பாடைப் பெற்றுக் கொண்டது. ஆனால் உலகப் பெரும் குடியரசான பாரத தேசம், அணுவியல் கழிவுப் புதைப்பு விதி முறைகளில் அவ்விதம் இதுவரை நடந்து கொள்ள வில்லை என்பது வருந்தத் தக்க வரலாறு !

***************

திங்கள், 2 ஜனவரி, 2012

வியப்பூட்டும் விண்வெளி ஆய்வுகள்!

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் கணக்கிலடங்காத அறிவியல் ரகசியங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் நாமறிந்த, அறிவியலர்களால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் மிகக் குறைவே. 


சுருங்கக் கூறின் அறிந்த உண்மைகளைவிட அறியாத ரகசியங்களே அதிகம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியலர் களின் பல்வேறு கண்டு பிடிப்புகளும், வெளிப்படுத்துதல்களும் அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்ள வழிவகை செய்துள்ளது. மனித அறிவினைப் பெருக்கிட தூண்டுகோலாக அமைந்துள்ளது.வானியல் சரித்திரத்தின் ஆரம்ப ஏடுகளை புரட்டும்போது, ""தட்டையான பூமி, நட்சத்திரங்கள் பொருத்தப்பட்ட வான் போர்வை'' என்பவைதான் வானியலைப் பற்றிய மனிதனின் எண்ணமாக இருந்திருக்கிறது. இந்த எண்ணத்தை மாற்றி சற்று வித்தியாசமாக சிந்திக்க துவங்கியவர்கள் கிரேக்கர்களே.


கி.மு. 500-இல் ஹெக்காடியஸ் என்ற கிரேக்கர் பூமி ஒரு வட்டம் என்ற கருத்தை முன்வைத்தார். இக்கருத்தினின்று சற்றே மாறுபட்டு கி.மு. 550-இல் அனாக்ஸிமாண்டர் முரண்பாடான பூமி உருளை வடிவமானது என்று கூறினார். இது சற்று முரண்பாடான கருத்தாக தோன்றியது. காரணம் கிரகணத்தின் போது சந்திரன்மீது விழும் வட்டவடிவ நிழல் பூமியின் நிழலோ என்ற சந்தேகம்தான். பூமி உருண்டை என்று முதன் முதலாக கூறியவர் ஃபைலோலாஸ் என்பவர்தான். கி.மு. 450-இல் அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இக் கருத்தினை ஆமோதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் இக்கருத்து இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மையாகவே இருந்து வருகிறது.


பூமி உருண்டையின் அளவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரட்டோஸ்தனிஸ் எளிய முறையில் கண்டுபிடித்தார். ஒரு இடத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக இருக்கும்போது அவ்விடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் ஒரு குச்சியின் மீது விழும் சூரியக்கதிர்கள் உண்டாக்கும் நிழல் விழும் சாய்வை கணக்கிட்டு பூமியின் சுற்றளவு 2500 மைல். அதன் விட்டம் 8000 மைல் என்றார். இது சற்று ஆச்சர்யமூட்டும் கணக்குதான். இன்றைய கணக்கு பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு 24902.4 மைல். விட்டம் 7917.48 மைல்.


தன் இருப்பிடத்தை அறிந்துகொண்ட பண்டைய கிரேக்க அறிவியலர்களுக்கு வானில் நட்சத்திர அழகைப் பார்த்து இருப்பு கொள்ளவில்லை. இரவில் தெரிந்த நட்சத்திரங்கள் பகலில் மறைந்து கண்ணாமூச்சி காட்டியது. அவர்களின் மூளையை கிளறியது. வானில் நட்சத்திரங்கள் இடம் பெயரவில்லை. ஆனால் பெரிய நட்சத்திரமாக தெரிந்த கோள்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன என்பது புரியத்துவங்கியது. 


நமக்கு அருகில் உள்ள கோள் சந்திரன் தான். எனவே சந்திரனை சுற்றி கிரேக்கர்களின் சிந்தனை சுழலத் துவங்கியது. அரிஸ்டார்க்கஸ் (கி.மு. 320-250) முதன் முறையாக சந்திரனின் தூரத்தை அளக்க முயற்சி மேற் கொண்டார். கிரகணத்தின் போது சந்திரன் மேல் விழும் பூமியின் நிழல் இவ்வளவு சிறிய தாக இருப்பின் அது எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டும் என்று அதிசயித்தார் அரிஸ்டார்க்கஸ். அவருக்குபின் வந்த ஹிப்பார்க்கஸ் (கி.மு. 190- 120) என்ற மிகச் சிறந்த கிரேக்க வானியலர் சந்திரனின் தூரத்தை நுட்பமாக கணக்கிட்டு பூமியின் விட்டத்தைப்போல் முப்பது மடங்கு இருக்கலாம் என்றார். சுமார் 24000 மைல் இருக்கலாம் என்று கணக்கிட்டார். (தற்போதைய கணிப்பு 238, 854.7 மைல்). பிறகு சந்திரனின் விட்டமும் தெரிய வந்தது. சுமார் 2160 மைல்.

முக்கோணவியலில் கிரேக்கர்கள் அபாரதிறமை படைத்தவர்கள். அரிஸ்டார்க்கஸ், "சந்திரன் முதல் கால் பாகத்தில் இருக்கும்போது பூமி,சூரியன், சந்திரன் மூன்றும் ஒரு நேர்கோண முக்கோணமாக இருக்கிறது. பூமியிலிருந்து சந்திரனின் தொலைவு தெரிந்த ஒன்று. இவற்றிற் கிடையேயான ஒரேஒரு கோணத்தை கண்டுபிடித்து விட்டால் சூரியனின் தொலைவை கண்டுபிடித்து விட முடியும்' என்று முக்கோணவியல் மூலம் சூரியனின் தொலைவு சுமார் 50 லட்சம் என்று தவறாக கணக்கிட்டார். இவருடைய கணக்கீடு பிழையானதுதான். ஆனால் இவர் உபயோகபடுத்திய முக்கோணவியல் முறை மிகச் சரியான ஒன்று.



இதன்பிறகு சுமார் 1800 வருடங்களுக்கு மேலாக வானியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததற் கான எவ்வித சான்றும் இல்லை. நவீன வானியல் 1543-இல் கோபர்நிக்கஸ் என்னும் போலந்துகாரரின் புத்தகக் குறிப்பிலிருந்தே துவங்குகிறது. விண்வெளியின் மையம் பூமியல்ல சூரியன் என்று எழுதியிருந்தார் கோபர் நிக்கஸ். சூரியனை கிரகங்களும் பூமியும் வட்டமாக சுற்றி வருகின்றன என்று விண்வெளியின் மையத்தை பூமி யிலிருந்து சூரியனுக்கு மாற்றி எழுதினார் நிக்கஸ். இவருக்கு அடுத்து வந்த கெப்ளர் (ஜெர்மனி) 1609-இல் செவ்வாய் கிரகத்தை மாதக் கணக்கில் கவனித்து "கிரகங்கள் சூரியனைச் சுற்றுவது வட்டவடிவில் இல்லை. நீள்வட்ட வடிவில்' என்றார். கெப்ளரின் கோள்களில் இயக்க விதி இன்றும் பயன்படக் கூடியவை. கெப்ளரின் ஆய்வுகள் கோள்கள் ஒன்றுக்கொன்று எத்தனை மடங்கு தூரத்தில் உள்ளன என்பது நுட்பமாக கண்டுபிடிக்க உதவின. ஆனால் சரியான தொலைவை கண்டறிய இயலவில்லை. இந்த தூரங்களை அளக்கத்தான் பின்னாளில் பாரலாக்ஸ்  (Parallax) என்கிற முறையை பயன்படுத்தினார்கள்.


1608-இல் கலிலியோ டெலஸ்கோப் (தொலைநோக்கி) என்னும் மாபெரும் அற்புதத்தை கண்டுபிடித்து நவீன வானியலின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டார். தொலைநோக்கியின் (Telescope) மூலம் விண்வெளியில் நிகழும் சிறுசிறு மாற்றங்களைக்கூட கூர்ந்து கவனிக்க முடிந்தது. வானியலர்களுக்கு மீண்டும் பாரலாக்ஸ் முறையே உதவிக்கு வந்தது. சூரியனின் கதிர்கள் ஏற்படுத்தும் நிழலுக்கு பதிலாக இருவேறு இடத்திலிருந்து கோளின் கோணங்களை பாரலாக்ஸ் முறையில் காணப்பட்டு தூரம் கணக்கிடப்பட்டது. ஜான் ரிஹர் என்ற பிரெஞ்சுக்காரர் கயானாவிலும், காஹினி என்பவர் பாரிஸிலும் ஒரே சமயத்தில் செவ்வாய் கிரகத்தின் கோணத்தை தூர நட்சத்திரத்துடன் ஒப்புநோக்கி கணித்தார்கள். அதிலிருந்து கெப்ளரின் மாடலை வைத்துக்கொண்டு சூரியனின் தூரம் எட்டுகோடியே எழுபது லட்சம் மைல் என்றனர். இது தவறான கணக்கீடு என்றாலும் சூரியனின் சரியான தொலைவினை படிப்படியாக நெருங்கிக் கொண்டிருந்தனர். இதே முறையைப் பயன்படுத்தி புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களின் தொலைவை கண்டுபிடித்தனர்.


கோள்களின் இயக்கங்கள் அனைத்தும் புரிந்தது. ஆனால், அதற்கு அப்பால் உள்ள நட்சத்திரங்கள் பற்றிய அறிவு அவ்வளவாக விரிவடையவில்லை. கோபர் நிக்கஸின் கற்பனை நட்சத்திரங்கள் அனைத்தும் வானில் நிலையாக இருக்கின்றன என்பதாகவே இருந்தது. 1718-இல் எட்மண்ட் ஹாலே நட்சத்திரங்கள் அனைத்தும் வானில் நிலையாக இல்லை. அது உண்மையில் நகருகின்றன என்று கூறி அறிவியலர்களின் சிந்தனையை கோள்களுக்கு அப்பால் அதிக தொலை விலுள்ள நட்சத்திரங்களுக்கு எடுத்துச் சென்றார்.

சனி கோள் வரை மனிதனின் தொலைநோக்குப் பார்வை சென்றடைந்தது. அதற்கும் அப்பால் விஞ்ஞானப் பார்வையை வீசியவர் சர் வில்லியம் ஹெர்செல் என்பவரே. 18-ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க வானவியலர். விண்வெளியின் ஏழாவது கோளான யுரேனஸ் 1781-ஆம் ஆண்டு இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு முன்னர் 1690-இல் யுரேனஸ் என்பதை ஒரு நட்சத்திர மாகவே கருதி வந்தனர்.


1846-ஆம் ஆண்டு நெப்டியூன் கோள் ஜான் காலே என்பவரால் கண்டறியப்பட்டது. இவருக்கு முன்னர் விண் வெளியில் எட்டாவது கோள் இருக்கிறதென்ற கணிப்புகள் அறிவியலர்களால் கூறப்பட்டு வந்தபோதிலும் அதிகாரப்பூர்வமான கண்டுபிடிப்பு இவருடையதே. விண் வெளியில் சூரியக் குடும்பத்தை பற்றி சுமாரான ஒரு வடிவம் கிடைத்துவிட்டது.


18-ஆம் நூற்றாண்டிலும், 19-ஆம் நூற்றாண்டிலும் கெப்ளர் மற்றும் நியூட்டனின் வானியல் விதிகளே ஆதிக்கம் பெற்று விளங்கின. அதிக தொலைவிலுள்ள நட்சத்திரங்களின் தொலைவை கண்டறிய பாரலாக்ஸ் முறை உதவாது என்று தெரிந்து போனது. தொலை நோக்கிகள் பெரியதாக வடிவமைக்கப்பட்டன. அதன் தொலைநோக்கு எல்லைகள் விரிவாக்கப்பட்டன. அதன் வழியே தொலை தூரநட்சத்திரங்களின் தூரம் மற்றும் இயக்கங்களை அளவிட்டபோதுதான் அவை எண்ணால் எழுத முடியாத அளவிற்கு தூரத்திலிருப்பது புலனாயிற்று.

அறிவியல் உலகம் கண்டுபிடிப்பு புரட்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த சமயம். 1887-இல் மைக்கேல்சன் என்ற விஞ்ஞானி ஒளியின் வேகத்தை கண்டுபிடித்து விட்டார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல். இந்த வேகம் எந்த இடத்திலும் மாறவில்லை. எந்த திசையில் அளந்துபார்த்தபோதும் ஒரே மாதிரி இருந்தது. சாதாரணமாக, ஓடும் வாகனத்திலிருந்து ஒருவர் 10கி.மீ. வேகத்தில் ஒரு பொருளை எறிகிறார். அவர் அப்பொருளை எறியும் அவ்வினாடியில் வாகனம் 10 கி.மீ. வேகத்தில் நகருகிறது. இந்நிகழ்வை தரையிலிருந்து ஒருவரும், வாகனத்திலிருந்து ஒருவரும் பார்க்கிறார்கள். இப்போது வாகனத்திலிருப்பவருக்கு பொருள் செல்லும் வேகம் 10கி.மீ ஆகவும், தரையிலிருப்பவருக்கு 20கி.மீ. வேகமாகவும் இருக்கும். ஆனால், ஒளியின் வேகத்தில் இவ்வாறு இரண்டு விதமான வேகம் தெரிவதில்லை. 


விந்தையாகத்தானிருந்தது. இந்நிலையில் 1905-இல் ஐன்ஸ்டைன் சிறப்பு ஒப்புமைக்கோட்பாடு (Special Relativity Theory) என்ற புதிய கொள்கையை வெளி யிட்டு உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தினார். அவர் கூறியது இதுதான். ஒளியின் வேகம் எங்கிருந்து அளவிடினும் மாறவில்லை என்பது பரிசோதிக்கப்பட்ட உண்மை. ஏன் மாறவில்லை என்பதற்கு விளக்கம் வேண்டுமானால் முதலில் சில கொள்கைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒளியின் வேகத்தில் செல்லும்போது அளவில் சுருக்கம் ஏற்படும். எடைகூடும். காலம் சுருங்கும் என்ற வினோ தங்கள் நடைபெறும் என்றார். இந்த கொள்கை பைமெசான் என்ற நுண்ணிய துகளை ஒளியின் வேகத்தில் செலுத்தும்போது நிகழத்தான் செய்தது. ஆகவே ஒளியின் வேகம்தான் வேகத்தின் எல்லை.


அதற்கு அப்பால் ஒரு வேகமில்லை என்ற கருத்து வலுப் பட்டது. வேகம் மாறுவதில்லை என்பது நிரூபணமான உண்மையாகிவிட்டது. எனவே  ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தொலைவினை ஒரு ஒளியாண்டு என்று வைத்துக் கொண்டு நட்சத்திரங்களின் தொலைவினை ஒளியாண்டுகளில் அளவிடலானார்கள். 1 ஒளி ஆண்டு = 9.46 ஷ் 1012 கிலோ மீட்டர் இந்த விதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தூரத்தை கண்டுபிடித்தாயிற்று. நட்சத்திரக் கூட்டங்களுக்கு அப்பால் என்ன என்ற கேள்வி எழுந்தபோது அறவியல் உலகம் மறுபடியும் மூளையை கசக்கிக்கொண்டது. நட்சத்திர கூட்டங்களுடன் நம்முடைய பால்வீதி (மில்கிவே கேலக்ஸி) முடிந்துவிட்டால் அதற்கு அப்பால் வேறு ஏதேனும் இருக்க வேண்டுமல்லவா? 1920-இல் தூரத்தில் இயங்கிவரும் நட்சத்திரங்களின் பிறப்பிடமான நெபுலாக்களை கண்காணித்து அவை மற்றொரு பால்வீதிக்கு சொந்தமானது என்றார் எட்வின் ஹப்பிள் என்ற அறிவியலர். 46 புதிய கேக்லக்சிகளை கண்டுபிடித்தார். அவ்வகை கேலக்சிகளில் கோள்கள் நட்சத்திரங்கள், சூரியன் என அனைத்தும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் வானியல் அறிஞர்கள். இதனை உறுதிப்படுத்த தேவையான உபகரணம் விஞ்ஞான உலகில் இல்லை.

முடிந்த தொலைவு வரை மனித மூளையை செலுத்தி யாகிவிட்டது. எவ்வாறு பூமி மற்றும் கோள்கள் அனைத்தும் விண்வெளியில் கீழே விழாமல் சுற்றி வருகின்றன என்ற கேள்விக்கு நியூட்டனின் ஈர்ப்பு விசையும், ஐன்ஸ்டீனின் ஒப்புமைக் கோட்பாடும் விளக்க மளித்தன. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளும் ஒன்றை ஒன்று கவர்கின்றது. அவற்றின் கவரும் சக்தி அவற்றுக் கிடையேயான நெருக்கத்தைப் பொருத்து அமையும். சூரியனுக்கும் பூமி கோளுக்கும் இடையேயான கவர்ச்சி விசைதான் பூமி விண்வெளியில் வீழாமல் இருக்கக் காரணம். சூரியனுக்கும் பூமிக்குமிடையேயான ஈர்ப்பு விசைக்கு செங்குத்தாக பூமியின் திசைவேகம் இருப்பத னால்தான் பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. இதே பிரபஞ்ச விதிகள் விண்வெளியில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு பொருந்தக்கூடியவை. பௌதிகத்தில் ஈர்ப்புவிசைத்தான் மிகவும் வலுவற்ற விசையாக கருதப்படுகிறது. மின்னியல், காந்த மற்றும் அழுத்த விசைகளை ஒப்பிடும்போது. ஆனால் நட்சத்திரங் களில் ஈர்ப்புவிசை அதிகமாகும்போது அவற்றின் அடர்த்தி அதிகமாகிறது. இதனால் எடை கூடும். அதன் அணுக்களில் இருக்கும் எலக்ட்ரான் புரோட்டான், நியூட்ரான் எல்லாம் கலந்து நியூட்ரான் நட்சத்திரமாக மாறும். மேலும் ஈர்ப்பு விசை அதிகரிப்பத னால் அதனுள் இருக்கும் துகள்களின் வேகம் அதிகரித்து ஒளியின் வேகத்தினை எட்டும். ஐன்ஸ்டைனின் விதிகளின்படி அதன் அடர்த்தி எல்லையற்றதாகி, அதன் அளவு புள்ளி யிலும் புள்ளியாகி, அதன் காலம் நின்று போய், அது கரும்பள்ளம் (Black hole)  என்னும் குழியில் காணாமல் போய்விடும். கரும்பள்ளத்தில் மிக மிக அதிகமான ஈர்ப்பு விசை காணப்படும். அதனால் ஒளி சென்றால் கூட தப்பமுடியாது. எத்தனை பெரிய கோள்களையும் தன்னுள்ளே ஈர்த்து ஒன்று மில்லாமல் செய்துவிடும். இந்த கரும்பள்ளம் பற்றிய எண்ணத்தை முதலில் வெளியிட்டவர்  ஜான்மிசெல் என்ற பிரிட்டிஷ் வானவியலர் (1783). எண்ணற்ற கரும் பள்ளங்கள் விண்வெளியில் இருப்பதாக வானியலர்கள் கணித்துள்ளனர். இத்தகைய கரும்பள்ளங்களின் ஈர்ப்பு எல்லைக்கு அருகில் வரும்போது நட்சத்திரங்கள் ஈர்க்கப்பட்டு, திடீரென காணாமல் போகின்றன. இதனை வானியலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். கரும்பள்ளங்கள் ஒரு அச்சினை மையமாக வைத்து சுழலக்கூடியவை. அவ்வாறு சுழலும்போது அருகில் இருக்கக்கூடிய விண் வெளியை உள்ளிழுத்து ஒரு பிரபஞ்ச சுழலினை உண்டாக்குகிறது. இந்த சுழலினுள்ளே நட்சத்திரங்கள் காணாமல் போகின்றன என்கிறது விஞ்ஞான உலகம்.


கரும்பள்ளத்தில் சிக்கும் அனைத்து பொருள்களும் அதன் சூழல்மையத்தில் ஒரு ஒற்றை புள்ளியில் காணாமல் போகிறது என்ற கொள்கையினை விளக்க வல்லது ஈர்ப்பு விதிகளும் குவாண்டம் மெக்கானிக்ஸ் (பொருட்களின் மிக நுண்ணிய துகள்களின் பண்புகள் பற்றியது) கோட்பாடுகளே. இவ்விரு கோட்பாடுகளை இணைத்து குவாண்ட ஈர்ப்பு என்ற புதிய கோட்பாட்டை அறிவியலர்கள் உருவாக்கிவிட்டனர். ஆனால் இது எந்த அளவு சரியாக இருக்கும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.


ஐன்ஸ்டைனின் பொது ஒப்புமை கோட்பாடு (General relativity) கரும்பள்ளங்களின் விஷயத்தில் ஒரு அசாதாரண முக்கியத்து வத்தை கொடுக்கிறது. கரும் பள்ளங்களின் மையத்தில் உள்ள ஒற்றை புள்ளியானது வேறொரு பிரபஞ்சத்திற்கான பாலமாக செயல்படுகிறது. பாலம் மற்றொரு பள்ளமான வெப்ப பள்ளத்தினை  (Warm hole) இணைக்கிறது. இந்த இணைப்பு வழி அடுத்த பிரபஞ்சத்தில் பிரவேசிக்க முடியும். ஏன் காலம்   (Time)  போலும் இதன் வழி பயணிக்க முடியும் என்கிறது. அறிவியலர்களின் தற்போதைய புது கொள்கை.

நம்முடைய பால்வீதியின் மையத்தில் மிகப்பெரிய கரும்பள்ளம் உள்ளது. இது 4 மில்லியன் சூரியன்களின் எடைக்கு சமமானது. பயப்படத்தேவையில்லை. அதிர்ஷ்ட வசமாக அது 30,000 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது.அண்மையில் ஸ்டீவன் வராக்கிங் என்பவர் ""கரும்பள்ளங்கள் கருமை யானவை அல்ல. அவற்றிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறது. கரும்பள்ளங்கள் கொண்டுள்ள ஆற்றல்தான் அவ்வாறு கதிர்வீசப்படுகிறது. இதனால் கரும்பள்ளங்கள் அதன் எடையை இழக்கின்றது. உண்மையில் கரும்பள்ளத்தில் விழும் பொருட்களை வேகமாக ஆவியாக்கி சுருங்கச் செய்கிறது'' என்ற புதிய சிந்தனையை வெளியிட்டள்ளார்


1954-ஆம் ஆண்டு ஹக் எவரெட்ஒஒ என்ற ஆராய்ச்சி மாணவர் இணைப் பிரபஞ்சத்தினை பற்றி தனது சிந்தனையை வெளியிட்டார். நம்முடைய பிரபஞ்சத்தினை போன்று பல பிரபஞ்சங்கள் நிலவுகிறது. அவை நம்முடைய பிரபஞ்சத்தின்று பிரிந்து சென்றவை. நம்முடைய பிரபஞ்சத்தில் இல்லாத வகை உயிரினங்கள் அங்கு இருக்கலாம். மனித உயிரனம் வேறு மாதிரி இருக்கலாம். 


விண்வெளி துறையில் மனிதர்களின் ஆராய்ச்சி ஒரு எல்லைக்கு அப்பால் செல்ல இயலவில்லை. விண்வெளியினைக் குறித்த எண்ணற்ற கொள்கைகளும் கருத்துக்களும் வானியலர்களின் சிந்தனையில் உதித்தவையே. வேற்றுகிரகங்கள் இருப்பதற்கான நிரூபணமும் இல்லை. அதே சமயம் சாத்தியம் இல்லை என்று கூறிவிடவும் முடியாது. சமீபத்தில் வேற்றுகிரக மனிதர்கள் அனுப்பும் தகவல் விண்வெளியில் கலந்து விடுவதால் அது நம்மை எட்டுவதில்லை என்ற புதிய கருத்தும் வானியலர்களிடையே நிலவுகிறது. விண்வெளித்துறையில் நாம் பயன்படுத்தும் கொள்கைகள் அனைத்தும் பழையவையே. எடுத்துக்காட்டாக ஐன்ஸ்டைனின் ஒளியின் வேகம் இறுதியானது என்ற கருத்தை தற்போது விஞ்ஞானிகள் நியூட்ரினோவின் வேகத்தினைக் கொண்டு மாற்றி எழுதியுள்ளனர். ஐன்ஸ்டைன் கொள்கை மாறுமா மாறாதா என சிறிது காலம் காத்திருந்து பார்க்கலாம். எனவே விண்வெளியினைக் குறித்து மனிதனின் சிந்தனைகள் எதிர் காலத்தில் மாறும் வாய்ப்புள்ளதோடு மட்டுமின்றி விரிவடையவும் செய்யும்.