திங்கள், 2 ஜனவரி, 2012

வியப்பூட்டும் விண்வெளி ஆய்வுகள்!

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் கணக்கிலடங்காத அறிவியல் ரகசியங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் நாமறிந்த, அறிவியலர்களால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் மிகக் குறைவே. 


சுருங்கக் கூறின் அறிந்த உண்மைகளைவிட அறியாத ரகசியங்களே அதிகம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியலர் களின் பல்வேறு கண்டு பிடிப்புகளும், வெளிப்படுத்துதல்களும் அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்ள வழிவகை செய்துள்ளது. மனித அறிவினைப் பெருக்கிட தூண்டுகோலாக அமைந்துள்ளது.வானியல் சரித்திரத்தின் ஆரம்ப ஏடுகளை புரட்டும்போது, ""தட்டையான பூமி, நட்சத்திரங்கள் பொருத்தப்பட்ட வான் போர்வை'' என்பவைதான் வானியலைப் பற்றிய மனிதனின் எண்ணமாக இருந்திருக்கிறது. இந்த எண்ணத்தை மாற்றி சற்று வித்தியாசமாக சிந்திக்க துவங்கியவர்கள் கிரேக்கர்களே.


கி.மு. 500-இல் ஹெக்காடியஸ் என்ற கிரேக்கர் பூமி ஒரு வட்டம் என்ற கருத்தை முன்வைத்தார். இக்கருத்தினின்று சற்றே மாறுபட்டு கி.மு. 550-இல் அனாக்ஸிமாண்டர் முரண்பாடான பூமி உருளை வடிவமானது என்று கூறினார். இது சற்று முரண்பாடான கருத்தாக தோன்றியது. காரணம் கிரகணத்தின் போது சந்திரன்மீது விழும் வட்டவடிவ நிழல் பூமியின் நிழலோ என்ற சந்தேகம்தான். பூமி உருண்டை என்று முதன் முதலாக கூறியவர் ஃபைலோலாஸ் என்பவர்தான். கி.மு. 450-இல் அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இக் கருத்தினை ஆமோதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் இக்கருத்து இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மையாகவே இருந்து வருகிறது.


பூமி உருண்டையின் அளவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரட்டோஸ்தனிஸ் எளிய முறையில் கண்டுபிடித்தார். ஒரு இடத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக இருக்கும்போது அவ்விடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் ஒரு குச்சியின் மீது விழும் சூரியக்கதிர்கள் உண்டாக்கும் நிழல் விழும் சாய்வை கணக்கிட்டு பூமியின் சுற்றளவு 2500 மைல். அதன் விட்டம் 8000 மைல் என்றார். இது சற்று ஆச்சர்யமூட்டும் கணக்குதான். இன்றைய கணக்கு பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு 24902.4 மைல். விட்டம் 7917.48 மைல்.


தன் இருப்பிடத்தை அறிந்துகொண்ட பண்டைய கிரேக்க அறிவியலர்களுக்கு வானில் நட்சத்திர அழகைப் பார்த்து இருப்பு கொள்ளவில்லை. இரவில் தெரிந்த நட்சத்திரங்கள் பகலில் மறைந்து கண்ணாமூச்சி காட்டியது. அவர்களின் மூளையை கிளறியது. வானில் நட்சத்திரங்கள் இடம் பெயரவில்லை. ஆனால் பெரிய நட்சத்திரமாக தெரிந்த கோள்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன என்பது புரியத்துவங்கியது. 


நமக்கு அருகில் உள்ள கோள் சந்திரன் தான். எனவே சந்திரனை சுற்றி கிரேக்கர்களின் சிந்தனை சுழலத் துவங்கியது. அரிஸ்டார்க்கஸ் (கி.மு. 320-250) முதன் முறையாக சந்திரனின் தூரத்தை அளக்க முயற்சி மேற் கொண்டார். கிரகணத்தின் போது சந்திரன் மேல் விழும் பூமியின் நிழல் இவ்வளவு சிறிய தாக இருப்பின் அது எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டும் என்று அதிசயித்தார் அரிஸ்டார்க்கஸ். அவருக்குபின் வந்த ஹிப்பார்க்கஸ் (கி.மு. 190- 120) என்ற மிகச் சிறந்த கிரேக்க வானியலர் சந்திரனின் தூரத்தை நுட்பமாக கணக்கிட்டு பூமியின் விட்டத்தைப்போல் முப்பது மடங்கு இருக்கலாம் என்றார். சுமார் 24000 மைல் இருக்கலாம் என்று கணக்கிட்டார். (தற்போதைய கணிப்பு 238, 854.7 மைல்). பிறகு சந்திரனின் விட்டமும் தெரிய வந்தது. சுமார் 2160 மைல்.

முக்கோணவியலில் கிரேக்கர்கள் அபாரதிறமை படைத்தவர்கள். அரிஸ்டார்க்கஸ், "சந்திரன் முதல் கால் பாகத்தில் இருக்கும்போது பூமி,சூரியன், சந்திரன் மூன்றும் ஒரு நேர்கோண முக்கோணமாக இருக்கிறது. பூமியிலிருந்து சந்திரனின் தொலைவு தெரிந்த ஒன்று. இவற்றிற் கிடையேயான ஒரேஒரு கோணத்தை கண்டுபிடித்து விட்டால் சூரியனின் தொலைவை கண்டுபிடித்து விட முடியும்' என்று முக்கோணவியல் மூலம் சூரியனின் தொலைவு சுமார் 50 லட்சம் என்று தவறாக கணக்கிட்டார். இவருடைய கணக்கீடு பிழையானதுதான். ஆனால் இவர் உபயோகபடுத்திய முக்கோணவியல் முறை மிகச் சரியான ஒன்று.



இதன்பிறகு சுமார் 1800 வருடங்களுக்கு மேலாக வானியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததற் கான எவ்வித சான்றும் இல்லை. நவீன வானியல் 1543-இல் கோபர்நிக்கஸ் என்னும் போலந்துகாரரின் புத்தகக் குறிப்பிலிருந்தே துவங்குகிறது. விண்வெளியின் மையம் பூமியல்ல சூரியன் என்று எழுதியிருந்தார் கோபர் நிக்கஸ். சூரியனை கிரகங்களும் பூமியும் வட்டமாக சுற்றி வருகின்றன என்று விண்வெளியின் மையத்தை பூமி யிலிருந்து சூரியனுக்கு மாற்றி எழுதினார் நிக்கஸ். இவருக்கு அடுத்து வந்த கெப்ளர் (ஜெர்மனி) 1609-இல் செவ்வாய் கிரகத்தை மாதக் கணக்கில் கவனித்து "கிரகங்கள் சூரியனைச் சுற்றுவது வட்டவடிவில் இல்லை. நீள்வட்ட வடிவில்' என்றார். கெப்ளரின் கோள்களில் இயக்க விதி இன்றும் பயன்படக் கூடியவை. கெப்ளரின் ஆய்வுகள் கோள்கள் ஒன்றுக்கொன்று எத்தனை மடங்கு தூரத்தில் உள்ளன என்பது நுட்பமாக கண்டுபிடிக்க உதவின. ஆனால் சரியான தொலைவை கண்டறிய இயலவில்லை. இந்த தூரங்களை அளக்கத்தான் பின்னாளில் பாரலாக்ஸ்  (Parallax) என்கிற முறையை பயன்படுத்தினார்கள்.


1608-இல் கலிலியோ டெலஸ்கோப் (தொலைநோக்கி) என்னும் மாபெரும் அற்புதத்தை கண்டுபிடித்து நவீன வானியலின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டார். தொலைநோக்கியின் (Telescope) மூலம் விண்வெளியில் நிகழும் சிறுசிறு மாற்றங்களைக்கூட கூர்ந்து கவனிக்க முடிந்தது. வானியலர்களுக்கு மீண்டும் பாரலாக்ஸ் முறையே உதவிக்கு வந்தது. சூரியனின் கதிர்கள் ஏற்படுத்தும் நிழலுக்கு பதிலாக இருவேறு இடத்திலிருந்து கோளின் கோணங்களை பாரலாக்ஸ் முறையில் காணப்பட்டு தூரம் கணக்கிடப்பட்டது. ஜான் ரிஹர் என்ற பிரெஞ்சுக்காரர் கயானாவிலும், காஹினி என்பவர் பாரிஸிலும் ஒரே சமயத்தில் செவ்வாய் கிரகத்தின் கோணத்தை தூர நட்சத்திரத்துடன் ஒப்புநோக்கி கணித்தார்கள். அதிலிருந்து கெப்ளரின் மாடலை வைத்துக்கொண்டு சூரியனின் தூரம் எட்டுகோடியே எழுபது லட்சம் மைல் என்றனர். இது தவறான கணக்கீடு என்றாலும் சூரியனின் சரியான தொலைவினை படிப்படியாக நெருங்கிக் கொண்டிருந்தனர். இதே முறையைப் பயன்படுத்தி புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களின் தொலைவை கண்டுபிடித்தனர்.


கோள்களின் இயக்கங்கள் அனைத்தும் புரிந்தது. ஆனால், அதற்கு அப்பால் உள்ள நட்சத்திரங்கள் பற்றிய அறிவு அவ்வளவாக விரிவடையவில்லை. கோபர் நிக்கஸின் கற்பனை நட்சத்திரங்கள் அனைத்தும் வானில் நிலையாக இருக்கின்றன என்பதாகவே இருந்தது. 1718-இல் எட்மண்ட் ஹாலே நட்சத்திரங்கள் அனைத்தும் வானில் நிலையாக இல்லை. அது உண்மையில் நகருகின்றன என்று கூறி அறிவியலர்களின் சிந்தனையை கோள்களுக்கு அப்பால் அதிக தொலை விலுள்ள நட்சத்திரங்களுக்கு எடுத்துச் சென்றார்.

சனி கோள் வரை மனிதனின் தொலைநோக்குப் பார்வை சென்றடைந்தது. அதற்கும் அப்பால் விஞ்ஞானப் பார்வையை வீசியவர் சர் வில்லியம் ஹெர்செல் என்பவரே. 18-ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க வானவியலர். விண்வெளியின் ஏழாவது கோளான யுரேனஸ் 1781-ஆம் ஆண்டு இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு முன்னர் 1690-இல் யுரேனஸ் என்பதை ஒரு நட்சத்திர மாகவே கருதி வந்தனர்.


1846-ஆம் ஆண்டு நெப்டியூன் கோள் ஜான் காலே என்பவரால் கண்டறியப்பட்டது. இவருக்கு முன்னர் விண் வெளியில் எட்டாவது கோள் இருக்கிறதென்ற கணிப்புகள் அறிவியலர்களால் கூறப்பட்டு வந்தபோதிலும் அதிகாரப்பூர்வமான கண்டுபிடிப்பு இவருடையதே. விண் வெளியில் சூரியக் குடும்பத்தை பற்றி சுமாரான ஒரு வடிவம் கிடைத்துவிட்டது.


18-ஆம் நூற்றாண்டிலும், 19-ஆம் நூற்றாண்டிலும் கெப்ளர் மற்றும் நியூட்டனின் வானியல் விதிகளே ஆதிக்கம் பெற்று விளங்கின. அதிக தொலைவிலுள்ள நட்சத்திரங்களின் தொலைவை கண்டறிய பாரலாக்ஸ் முறை உதவாது என்று தெரிந்து போனது. தொலை நோக்கிகள் பெரியதாக வடிவமைக்கப்பட்டன. அதன் தொலைநோக்கு எல்லைகள் விரிவாக்கப்பட்டன. அதன் வழியே தொலை தூரநட்சத்திரங்களின் தூரம் மற்றும் இயக்கங்களை அளவிட்டபோதுதான் அவை எண்ணால் எழுத முடியாத அளவிற்கு தூரத்திலிருப்பது புலனாயிற்று.

அறிவியல் உலகம் கண்டுபிடிப்பு புரட்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த சமயம். 1887-இல் மைக்கேல்சன் என்ற விஞ்ஞானி ஒளியின் வேகத்தை கண்டுபிடித்து விட்டார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல். இந்த வேகம் எந்த இடத்திலும் மாறவில்லை. எந்த திசையில் அளந்துபார்த்தபோதும் ஒரே மாதிரி இருந்தது. சாதாரணமாக, ஓடும் வாகனத்திலிருந்து ஒருவர் 10கி.மீ. வேகத்தில் ஒரு பொருளை எறிகிறார். அவர் அப்பொருளை எறியும் அவ்வினாடியில் வாகனம் 10 கி.மீ. வேகத்தில் நகருகிறது. இந்நிகழ்வை தரையிலிருந்து ஒருவரும், வாகனத்திலிருந்து ஒருவரும் பார்க்கிறார்கள். இப்போது வாகனத்திலிருப்பவருக்கு பொருள் செல்லும் வேகம் 10கி.மீ ஆகவும், தரையிலிருப்பவருக்கு 20கி.மீ. வேகமாகவும் இருக்கும். ஆனால், ஒளியின் வேகத்தில் இவ்வாறு இரண்டு விதமான வேகம் தெரிவதில்லை. 


விந்தையாகத்தானிருந்தது. இந்நிலையில் 1905-இல் ஐன்ஸ்டைன் சிறப்பு ஒப்புமைக்கோட்பாடு (Special Relativity Theory) என்ற புதிய கொள்கையை வெளி யிட்டு உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தினார். அவர் கூறியது இதுதான். ஒளியின் வேகம் எங்கிருந்து அளவிடினும் மாறவில்லை என்பது பரிசோதிக்கப்பட்ட உண்மை. ஏன் மாறவில்லை என்பதற்கு விளக்கம் வேண்டுமானால் முதலில் சில கொள்கைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒளியின் வேகத்தில் செல்லும்போது அளவில் சுருக்கம் ஏற்படும். எடைகூடும். காலம் சுருங்கும் என்ற வினோ தங்கள் நடைபெறும் என்றார். இந்த கொள்கை பைமெசான் என்ற நுண்ணிய துகளை ஒளியின் வேகத்தில் செலுத்தும்போது நிகழத்தான் செய்தது. ஆகவே ஒளியின் வேகம்தான் வேகத்தின் எல்லை.


அதற்கு அப்பால் ஒரு வேகமில்லை என்ற கருத்து வலுப் பட்டது. வேகம் மாறுவதில்லை என்பது நிரூபணமான உண்மையாகிவிட்டது. எனவே  ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தொலைவினை ஒரு ஒளியாண்டு என்று வைத்துக் கொண்டு நட்சத்திரங்களின் தொலைவினை ஒளியாண்டுகளில் அளவிடலானார்கள். 1 ஒளி ஆண்டு = 9.46 ஷ் 1012 கிலோ மீட்டர் இந்த விதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தூரத்தை கண்டுபிடித்தாயிற்று. நட்சத்திரக் கூட்டங்களுக்கு அப்பால் என்ன என்ற கேள்வி எழுந்தபோது அறவியல் உலகம் மறுபடியும் மூளையை கசக்கிக்கொண்டது. நட்சத்திர கூட்டங்களுடன் நம்முடைய பால்வீதி (மில்கிவே கேலக்ஸி) முடிந்துவிட்டால் அதற்கு அப்பால் வேறு ஏதேனும் இருக்க வேண்டுமல்லவா? 1920-இல் தூரத்தில் இயங்கிவரும் நட்சத்திரங்களின் பிறப்பிடமான நெபுலாக்களை கண்காணித்து அவை மற்றொரு பால்வீதிக்கு சொந்தமானது என்றார் எட்வின் ஹப்பிள் என்ற அறிவியலர். 46 புதிய கேக்லக்சிகளை கண்டுபிடித்தார். அவ்வகை கேலக்சிகளில் கோள்கள் நட்சத்திரங்கள், சூரியன் என அனைத்தும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் வானியல் அறிஞர்கள். இதனை உறுதிப்படுத்த தேவையான உபகரணம் விஞ்ஞான உலகில் இல்லை.

முடிந்த தொலைவு வரை மனித மூளையை செலுத்தி யாகிவிட்டது. எவ்வாறு பூமி மற்றும் கோள்கள் அனைத்தும் விண்வெளியில் கீழே விழாமல் சுற்றி வருகின்றன என்ற கேள்விக்கு நியூட்டனின் ஈர்ப்பு விசையும், ஐன்ஸ்டீனின் ஒப்புமைக் கோட்பாடும் விளக்க மளித்தன. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளும் ஒன்றை ஒன்று கவர்கின்றது. அவற்றின் கவரும் சக்தி அவற்றுக் கிடையேயான நெருக்கத்தைப் பொருத்து அமையும். சூரியனுக்கும் பூமி கோளுக்கும் இடையேயான கவர்ச்சி விசைதான் பூமி விண்வெளியில் வீழாமல் இருக்கக் காரணம். சூரியனுக்கும் பூமிக்குமிடையேயான ஈர்ப்பு விசைக்கு செங்குத்தாக பூமியின் திசைவேகம் இருப்பத னால்தான் பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. இதே பிரபஞ்ச விதிகள் விண்வெளியில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு பொருந்தக்கூடியவை. பௌதிகத்தில் ஈர்ப்புவிசைத்தான் மிகவும் வலுவற்ற விசையாக கருதப்படுகிறது. மின்னியல், காந்த மற்றும் அழுத்த விசைகளை ஒப்பிடும்போது. ஆனால் நட்சத்திரங் களில் ஈர்ப்புவிசை அதிகமாகும்போது அவற்றின் அடர்த்தி அதிகமாகிறது. இதனால் எடை கூடும். அதன் அணுக்களில் இருக்கும் எலக்ட்ரான் புரோட்டான், நியூட்ரான் எல்லாம் கலந்து நியூட்ரான் நட்சத்திரமாக மாறும். மேலும் ஈர்ப்பு விசை அதிகரிப்பத னால் அதனுள் இருக்கும் துகள்களின் வேகம் அதிகரித்து ஒளியின் வேகத்தினை எட்டும். ஐன்ஸ்டைனின் விதிகளின்படி அதன் அடர்த்தி எல்லையற்றதாகி, அதன் அளவு புள்ளி யிலும் புள்ளியாகி, அதன் காலம் நின்று போய், அது கரும்பள்ளம் (Black hole)  என்னும் குழியில் காணாமல் போய்விடும். கரும்பள்ளத்தில் மிக மிக அதிகமான ஈர்ப்பு விசை காணப்படும். அதனால் ஒளி சென்றால் கூட தப்பமுடியாது. எத்தனை பெரிய கோள்களையும் தன்னுள்ளே ஈர்த்து ஒன்று மில்லாமல் செய்துவிடும். இந்த கரும்பள்ளம் பற்றிய எண்ணத்தை முதலில் வெளியிட்டவர்  ஜான்மிசெல் என்ற பிரிட்டிஷ் வானவியலர் (1783). எண்ணற்ற கரும் பள்ளங்கள் விண்வெளியில் இருப்பதாக வானியலர்கள் கணித்துள்ளனர். இத்தகைய கரும்பள்ளங்களின் ஈர்ப்பு எல்லைக்கு அருகில் வரும்போது நட்சத்திரங்கள் ஈர்க்கப்பட்டு, திடீரென காணாமல் போகின்றன. இதனை வானியலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். கரும்பள்ளங்கள் ஒரு அச்சினை மையமாக வைத்து சுழலக்கூடியவை. அவ்வாறு சுழலும்போது அருகில் இருக்கக்கூடிய விண் வெளியை உள்ளிழுத்து ஒரு பிரபஞ்ச சுழலினை உண்டாக்குகிறது. இந்த சுழலினுள்ளே நட்சத்திரங்கள் காணாமல் போகின்றன என்கிறது விஞ்ஞான உலகம்.


கரும்பள்ளத்தில் சிக்கும் அனைத்து பொருள்களும் அதன் சூழல்மையத்தில் ஒரு ஒற்றை புள்ளியில் காணாமல் போகிறது என்ற கொள்கையினை விளக்க வல்லது ஈர்ப்பு விதிகளும் குவாண்டம் மெக்கானிக்ஸ் (பொருட்களின் மிக நுண்ணிய துகள்களின் பண்புகள் பற்றியது) கோட்பாடுகளே. இவ்விரு கோட்பாடுகளை இணைத்து குவாண்ட ஈர்ப்பு என்ற புதிய கோட்பாட்டை அறிவியலர்கள் உருவாக்கிவிட்டனர். ஆனால் இது எந்த அளவு சரியாக இருக்கும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.


ஐன்ஸ்டைனின் பொது ஒப்புமை கோட்பாடு (General relativity) கரும்பள்ளங்களின் விஷயத்தில் ஒரு அசாதாரண முக்கியத்து வத்தை கொடுக்கிறது. கரும் பள்ளங்களின் மையத்தில் உள்ள ஒற்றை புள்ளியானது வேறொரு பிரபஞ்சத்திற்கான பாலமாக செயல்படுகிறது. பாலம் மற்றொரு பள்ளமான வெப்ப பள்ளத்தினை  (Warm hole) இணைக்கிறது. இந்த இணைப்பு வழி அடுத்த பிரபஞ்சத்தில் பிரவேசிக்க முடியும். ஏன் காலம்   (Time)  போலும் இதன் வழி பயணிக்க முடியும் என்கிறது. அறிவியலர்களின் தற்போதைய புது கொள்கை.

நம்முடைய பால்வீதியின் மையத்தில் மிகப்பெரிய கரும்பள்ளம் உள்ளது. இது 4 மில்லியன் சூரியன்களின் எடைக்கு சமமானது. பயப்படத்தேவையில்லை. அதிர்ஷ்ட வசமாக அது 30,000 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது.அண்மையில் ஸ்டீவன் வராக்கிங் என்பவர் ""கரும்பள்ளங்கள் கருமை யானவை அல்ல. அவற்றிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறது. கரும்பள்ளங்கள் கொண்டுள்ள ஆற்றல்தான் அவ்வாறு கதிர்வீசப்படுகிறது. இதனால் கரும்பள்ளங்கள் அதன் எடையை இழக்கின்றது. உண்மையில் கரும்பள்ளத்தில் விழும் பொருட்களை வேகமாக ஆவியாக்கி சுருங்கச் செய்கிறது'' என்ற புதிய சிந்தனையை வெளியிட்டள்ளார்


1954-ஆம் ஆண்டு ஹக் எவரெட்ஒஒ என்ற ஆராய்ச்சி மாணவர் இணைப் பிரபஞ்சத்தினை பற்றி தனது சிந்தனையை வெளியிட்டார். நம்முடைய பிரபஞ்சத்தினை போன்று பல பிரபஞ்சங்கள் நிலவுகிறது. அவை நம்முடைய பிரபஞ்சத்தின்று பிரிந்து சென்றவை. நம்முடைய பிரபஞ்சத்தில் இல்லாத வகை உயிரினங்கள் அங்கு இருக்கலாம். மனித உயிரனம் வேறு மாதிரி இருக்கலாம். 


விண்வெளி துறையில் மனிதர்களின் ஆராய்ச்சி ஒரு எல்லைக்கு அப்பால் செல்ல இயலவில்லை. விண்வெளியினைக் குறித்த எண்ணற்ற கொள்கைகளும் கருத்துக்களும் வானியலர்களின் சிந்தனையில் உதித்தவையே. வேற்றுகிரகங்கள் இருப்பதற்கான நிரூபணமும் இல்லை. அதே சமயம் சாத்தியம் இல்லை என்று கூறிவிடவும் முடியாது. சமீபத்தில் வேற்றுகிரக மனிதர்கள் அனுப்பும் தகவல் விண்வெளியில் கலந்து விடுவதால் அது நம்மை எட்டுவதில்லை என்ற புதிய கருத்தும் வானியலர்களிடையே நிலவுகிறது. விண்வெளித்துறையில் நாம் பயன்படுத்தும் கொள்கைகள் அனைத்தும் பழையவையே. எடுத்துக்காட்டாக ஐன்ஸ்டைனின் ஒளியின் வேகம் இறுதியானது என்ற கருத்தை தற்போது விஞ்ஞானிகள் நியூட்ரினோவின் வேகத்தினைக் கொண்டு மாற்றி எழுதியுள்ளனர். ஐன்ஸ்டைன் கொள்கை மாறுமா மாறாதா என சிறிது காலம் காத்திருந்து பார்க்கலாம். எனவே விண்வெளியினைக் குறித்து மனிதனின் சிந்தனைகள் எதிர் காலத்தில் மாறும் வாய்ப்புள்ளதோடு மட்டுமின்றி விரிவடையவும் செய்யும்.