சனி, 11 பிப்ரவரி, 2012

பிரபஞ்சத்தின் தோற்றம் - பகுதி 2


பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி - 2 (பெருவெடிப்பின் ஒரு செக்கனுக்கு பின்)


முந்தைய தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அலசுகையில் பிக் பாங் எனும் பெரு வெடிப்பு நிகழ்ந்த முதலாவது செக்கனில் நிகழ்ந்த மாற்றங்களை கருக்கள் மற்றும் துணிக்கை ரீதியாக ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டிருந்தோம். இந்த அடிப்படையில் இறுதியாக பெரு வெடிப்பின் முதல் செக்கனின் பின் குவார்க் குளுவோன் சக்தி திடர் குளுமையடைவதன் மூலம் கருவின் உள்ளே உள்ள புரோட்டன் மற்றும் நியூட்ரோன் துணிக்கைகளை உள்ளடக்கிய ஹெட்ரோன் கூட்டு  உருவாகி பிரபஞ்ச வெளியில் நியூட்ரினோக்கள் சுதந்திரமாக நடமாட வழி ஏற்பட்டது.


இதை அடுத்து பெரு வெடிப்பின் 1-10 செக்கனுக்கு இடையில் லெப்டோன் இப்போ நிகழ்கின்றது. பிரபஞ்சத்தில் அதிக பட்சமாக காணப்படும் ஹெட்ரோன்களும், இதன்  எதிர்த் துணிக்கையான ஆண்டிஹெட்ரோன்களும் தமக்கிடையே தாக்கமுற்று ஒன்றை இன்னொன்று அழித்த பின்னர் லெப்டோன்கள் உருவாகின்றன. இவை பிரபஞ்சத்தின் அதிக பட்ச நிறையை தமதாக்கி விடும். அடுத்த கட்டமாக லெப்டோன்களும் அண்டிலெப்டோன்களும் தாக்கமுற்று ஒன்றையொன்று அழித்த பின் மிகச்சிறிய லெப்டோன்களே எஞ்சி நிற்கும்.இக்கட்டத்தின் பின்னர் அதாவது 10 செக்கனுக்கும் 380 000 வருடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே மிக நீண்ட தாக்கம் நடைபெறுகிறது. இக் காலப்பகுதி போட்டோன் இப்போ எனப்படுகின்றது. அதாவது துணிக்கை என்று கருதமுடியாத எனினும் துணிக்கையின் இயல்பும்,மின்காந்த அலைகளின் இயல்பும் சேர்ந்த போட்டோன் எனும் நிறையற்ற ஒளிக்கற்றை போன்ற பொருள் அணுக்கருவுடனும் புரோட்டன் மற்றும் எலெக்ட்ரோனுடனும் தாக்கமுற்று பிரபஞ்ச உற்பத்தியை நிகழ்த்துகின்றன.


முதல் 10 செக்கனுக்கு பின்னர் நிகழும் போட்டோன் இப்போவின் போதே பிரபஞ்சத்தின் வெப்ப நிலை நன்கு வீழ்ச்சியடைந்து நியூக்ளி எனப்படும் அணுக்கருக்கள் உற்பத்தியாகின்றன.  பெருவெடிப்பின் 3-20 இடைப்பட்ட நிமிடங்களில் நிகழும் இந்த கருத்தாக்கம், பிரபஞ்ச வெளியில் உள்ள சடப்பொருளின் அடர்த்தி,வெப்பநிலை என்பன மேலும் வீழ்ச்சியடையும் வரை நிகழும். இது 17 நிமிடங்களில் நிறைவுறும். அதன் பின் பிரபஞ்ச வெளியில் ஹீலியம்4 அணுக்களும் அதை விட 3 மடங்கு அதிகமாக ஐதரசன் அணுக்களுமே அதிக பட்சமாக நிரம்பியிருக்கும்.

பிரபஞ்ச தோற்றத்தின் காலகட்டங்கள்
பெருவெடிப்பின் 70 000 வருடங்களுக்குப் பின்னர் அணுக் கருக்களின் அடர்த்தியும்,போட்டோன் கதிரியக்கமும் சமப்படும். இந்நிலையில் ஈர்ப்பு விசை மற்றும் சடப்பொருளின் அழுத்தம் என்பவற்றின் போட்டி காரணமாக நிகழும் மிகச்சிறிய அணுக் கட்டமைப்புக்களின் உற்பத்தி வீழ்ச்சியடையும். இது ஜீன்ஸ் லெந்த் எனப்படுகின்றது. அடுத்ததாக பெருவெடிப்பின் 377 000 வருடங்களுக்கு பின்னர் பிரபஞ்சத்தின் அடர்த்தி வீழ்ச்சியடைவதால் ஐதரசன் அணுக்களும் ஹீலியம் அணுக்களும் உருவாகின்றன. மேலும் பிரபஞ்சம் குளிர்வடைந்து எலெக்ரோன்கள் யாவும் கருவுடன் இணைந்து நடுநிலையான அணுக்கள் உண்டாகின்றன.ஆரம்பத்தில் ஐதரசன்,மற்றும் ஹீலியம்4 அணுக்கள் உண்டாக எடுத்த நேரத்தை விட இது வேகமாக நிகழ்வதுடன் மறு இணைப்பு அல்லது ரீகம்பினேசன் எனவும் இது அழைக்கப்படுகின்றது.


அணுக் கருக்கள் நடு நிலையாக்கப் பட்டதால் போட்டோன்கள் சுதந்திரமாக வெளியில் பயணஞ் செய்யும் வாய்ப்பும் உருவாகின்றது. இதனால் சடப்பொருளுக்கும் அலைகளுக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி பிரபஞ்சம் வெளி,ஊடகம்,பொருள் மற்றும் அலை என்பன இணைந்த ஒன்றாக மாற்றமடைகின்றது.இன்னும் எஞ்சியிருக்கும் கட்டங்களாக, பிரபஞ்சத்தின் இருண்ட யுகம், கட்டமைப்பின் தோற்றம், மறு அயனாக்கம், நட்சத்திரங்களின் தோற்றம்,அண்டங்களின் தோற்றம்,அண்டங்களின் கூட்டு,கிளஷ்டர்ஸ்,சுப்பர் கிளஷ்டர்ஸ் என்பவற்றின் தோற்றம்,சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் 13.7 பில்லியன் வருடம் கழித்து இன்றைய நிலை என்பன பற்றி அடுத்த தொடரில் ஆராயப்படும்.

நவீன வானவியலின் பிறப்பு!


உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்பயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே.இன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.


பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் பற்றி விரிவாக அறிவதற்கு ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒரு காலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை?முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.

சில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாக சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது.சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.


கி.பி இன் 1473ம் ஆண்டு முதன்முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழியும் வரை புவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.
கோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளையும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கிவைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.

ஆயினும் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கனின் கத்தோலிக்க தேவாலயத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோவின் இறுதிக்காலத்தில் அவரது கண்கள் குருடாகி விட்டன. அறிவியல் வளர்ச்சி உன்னத இடத்திலிருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டிலேயே அதாவது 1992 ம் வருடம் கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து அவரைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் நூற்றாண்டில் வானவியல்!


சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?


இன்றைக்கு ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முன்னர் எழுந்த கோட்பாடு இது. ஆரம்ப காலத்தில் எந்தவித நவீன தொலைநோக்கிகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் எந்தவித செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படாத நிலையிலும், பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்? எத்தனை கிரகங்கள் இருக்கும் என்ற ஊகங்கள் பரவலாக கிளம்பலாயின.உலகத்தின் மிகப்பிரசித்தமான தத்துவவியலாளரான அரிஸ்ட்டோட்டில் வாழ்ந்த காலம் அது.  அவரது கொள்கைகளும், கண்டுபிடிப்புக்களும் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் கணித சூத்திரங்களாக இருந்தன.


,'எப்பிசைக்கில்ஸ்' எனப்படும் வட்ட ஒழுக்களினூடே சுமார் 55 வளையங்களில் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த 6 கிரகங்களும் சூரியனும் வலம் வருவதாக அரிஸ்ட்டோட்டில் கருதினார்.
6 கிரகங்களும் சூரியனும் பூமியை சுற்றி வலம் வரும் ஒழுங்கானது பின்வருமாறு

1. சந்திரன்
2.புதன்
3.வெள்ளி
4.சூரியன்
5.செவ்வாய்
6.வியாழன்
7.சனி
விண்ணில் தெரியும் பொருட்கள் பூமியை சுற்றி வலம் வருகின்றனவா? அல்லது பூமி அவற்றை சுற்றி வலம் வருகிறதா என்பதனை அக்காலத்தில் அறிவது கடினமான காரியமாக இருந்தது.


பரலக்ஸ் எனப்படும் அசையும் பொருட்களில் ஏற்படும் தடுமாற்றம் பூமியில் இருந்து அவதானிக்கும் போது விளங்கினால், பூமியே விண் பொருட்களை சுற்றி வருவதும்,  தன்னை தானே சுற்றுவதும், தெளிவாக நிரூபிக்கப்படும். ஆனால் விண்ணில் தெரியும் நட்சத்திரங்களின் அசைவில் ஏற்படும் தடுமாற்றம் மிகச்சிறியதாக இருப்பதானால் இதை நிரூபிக்க வழியில்லை. கிரகங்களின் இயக்கத்தை கொள்கையளவில் வரையறுப்பது அக்காலத்தில் கடினமான காரியமாக இருந்தது. வானத்தில் நிலையாக நிற்கும் நட்சத்திரங்களுடன் கிழக்குத்திசையில் பயணிக்கும் கிரகங்களின் இயக்கம், அவற்றின் வேகம் என்பன கேத்திரகணித ரீதியில் சமச்சீரானவையாக (Uniform motion) கணிக்கப்பட்டன.

கிரகம் என்ற சொல், 'வேண்டரர்' (Wanderer)  என்ற கிரேக்க பதத்தில் இருந்து வந்தது. இதற்கு அர்த்தம் அதிசயிக்கத்தக்க பொருள் என்பதாகும்.இக்கிரகங்களின் இயக்கத்தினை நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் வானவியல் கருவிகள் எதன் துணைகொண்டுமல்லாது கணித ரீதியாக மட்டுமே ஆராய்ந்து, இப்படியான தகவல்களை அளித்த அக்காலத்து மாமேதைகளான தொலமியும், அரிஸ்ட்டோட்டிலும் மெச்சத்தக்கவர்கள்தானே.அக்காலத்தில் இந்த வானவியல் கோட்பாடுகளை மையமாக கொண்டு வரையப்பட்ட கணித சூத்திரங்கள்தான், இன்றைய நவீன வானவியலின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது உங்களில் எத்தனை பேருக்கு நம்ப முடிகிறது.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

BBC இன் 'மனித உடலுக்குள்ளே...!


மற்றுமோர் அற்புத அறிவுக் காணொளி விருந்து நண்பர்களே! இந்த விருந்தைப் படைத்த பிபிசி நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அறிவியல் ஆர்வலர்களும் கடமைப்பட்டுள்ளோம் என்றால் அது மிகையாகாது! 


நமதுத் தளத்தில் பலமுறை மனித உடலைப்பற்றிய காணொளிப் பதிவுகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறுக்  கோணங்களில்!நம் உடலில் முகம் மிகமுக்கியமான அங்கமாகும் தாயின் கருவரையில் முகஉரு படைப்பு [Face Creation] எப்படி உருவாகின்றது என்பதை மிக துல்லியமாக படமெடுத்து மனித பிறப்பின் அற்புதத்தை நமக்கு காட்டிஇருக்கிரார்கள்.பிபிசி நிறுவனம்!

புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1


உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை


கட்டுரை ஆசிரியர்


“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”


ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.


ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.


“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”


நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)


“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”


பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.


லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)


“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.


விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத் தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.


உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்


புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன பொது மக்களின் வெறுப்பும், தீர்ப்பும் வேறு.  அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் ஒருமனதாய் எதிர்த்தாலும் உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப்பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

அணுமின் உலைகள் இயக்கம் பற்றி உலக நாடுகள் செய்துள்ள முடிவுகள்  (மே 31, 2011)


21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சி போன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணு மின்சக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்த முடிவுகளைக் கீழே காணலாம் :


1. அர்ஜென்டைனா : தற்போது இயங்கி வரும் இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிக்கப்படும்.  அட்டுச்சாவில் (Atucha) இரண்டாவது யூனிட் கட்டுமானம் நிற்காமல் பூர்த்தியாகும்.  அர்ஜென்டைனாவின் நிதி அமைச்சர் அமாடோ பொவ்டோவ் (Amado Boudov), “அர்ஜென்டைனா இதுவரைத் திட்டமிட்ட அணுமின் நிலையத் தீர்மானங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்று கூறினார்.


2. பிரேசில் : புதிய அணுமின் நிலையங்கள் கட்டப் போவதை நிறுத்த வில்லை.  செனட்டர் ஜோஸ் ஸர்னி என்பவர் “அணு உலைப் பாதுகாப்பு விதிமுறைகளில் கடுமையான மீளாய்வு இருக்கும்” என்று தெரிவித்தார்.


3. ஆர்மீனியா :   நிலநடுக்க இன்னல்கள் நிரம்பிய ஆர்மீனியா 1988 ஆண்டிலேயே தனது ஒற்றை ‘மெட்ஸ்மார் அணுமின் நிலையத்தை’ (Metsmor) நிறுத்தி விட்டது.  ஆனால் அது 7 ஆண்டுகள் கழித்துத் தேவைப் பட்டதால் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.  மேலும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போவதாகத் திட்டங்கள் உள்ளன என்று ஓர் வதந்தியும் நிலவி வருகிறது.  ஆர்மினியாவின் பிரதம மந்திரியும் புதிய அணுமின் நிலையங்கள் கட்டு வதற்கு ஆதரவு அளிக்கிறார்.

4. கனடா : கனேடியன் அணுவியல் பாதுகாப்பு ஆணையகம் (Canadian Nuclear Safety Authority – CNSC) கனடாவில் இயங்கும் அணுமின் நிலையங்கள், சாக் ரிவர் அணுவியல் ஆய்வு உலை (AECL Chalk River Research Reactor) ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புகுஷிமா அணு உலை விபத்துகளை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  1970 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்த இரண்டு பழைய அணுமின் நிலையங்கள் முன்பே நிரந்தர நிறுத்தம் ஆயின.  முன்பு நிறுத்தமான இரண்டு கனநீர் முற்போக்கு அணுமின் உலைகள் புதுப்பிக்கப் பட்டு விரைவில் மின்சாரம் மீண்டும் அனுப்பப் போகின்றன.  இயங்கும் 16 அணுமின் உலைகள் தொடர்ந்து மின்சாரம் அளித்து வருகின்றன.  எதிர்காலத் திட்டத்தில் புதிய அணுமின் நிலைய அமைப்புகளும் இடம் பெறும்.


5. சைனா : அரசாங்கம் அணுமின் சக்தி ஆக்கத்தை வரவேற்கிறது.  சமீபத்தில் நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துகள் கட்டப் போகும் புதிய 7 அணுமின் நிலையங்களைத் தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளது.  இப்போதைய இந்த முடிவு நீண்ட கால அணுமின்சக்தி உற்பத்தியை ஒருபோதும் பாதிக்காது.

6 பின்லாந்து : பின்லாந்தின் நிதி அமைச்சகம் பின்லாந்து நாட்டில் உள்ள அணுமின் உலைகளில் அபாயப் பாதுகாப்புத் தயாரிப்பு முறைகள் மீளாய்வு செய்ய வேண்டு மென அணுவியல் கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணையகத்துக்கு உத்தரவு இட்டுள்ளது.


7. பிரான்ஸ் : பிரென்ச் நாட்டின் 75% பங்கு மின்சக்தியைப் பரிமாறி வரும் 58 அணுமின் நிலையங்களின் இயக்கத்தில் எந்தத் தடையும் மாற்றமும் இல்லை.  பிரென்ச் தொழிற்துறை எரிசக்தி அமைச்சர் எரிக் பெஸ்ஸன் கூறியது : “எனக்குப் பாதுகாப்பான எதிர்கால அணுமின்சக்தி உற்பத்தியில் முழு நம்பிக்கை உள்ளது. அதாவது புகுஷிமா விபத்துகள் போல் நேர்ந்தாலும் இந்த நூற்றாண்டில் அந்த உறுதிப்பாடு எனக்கு எழுந்துள்ளது.  ஆயினும் அவற்றை மேலும் செம்மைப் படுத்த இன்னும் ஒரு வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.


8. ஜெர்மனி : 2011 மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் பழைய டிசைன் மாடல் 1980 & அதற்கு முந்திய அணுமின் உலைகளை மூன்று மாத நிறுத்தம் செய்ய உத்தரவு இட்டார்.  1984 இல் இயங்க ஆரம்பித்த அடுத்தோர் அணுமின் நிலையமும் நிறுத்தமானது.  வேலும் சமீபத்தில் ஆயுள் நீடிப்புக்கு அனுமதி பெற்ற சில அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிப்பு பாதுகாப்புச் சோதனைகளின் முடிவு தீர்ப்பாவது வரை நிறுத்தப் பட்டுள்ளது.  புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 250,000 அணுசக்தி நிலைய எதிர்ப்பாளர் நாடு முழுவதும் திரண்டு இயங்கும் அணுமின் நிலையங்களை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்தார்.  மார்ச்சு மாதம் 30 ஆம் தேதி அதிபர் ஆஞ்சலா மெர்கெல் 2022 ஆண்டுக்குள் இயங்கும் எல்லா அணுமின் நிலையங்களும் நிறுத்தப்பட்டு விடும் என்று அறிவித்தார்.

9. இந்தியா : புகுஷிமா அணு உலை விபத்துக்கள் இயங்கும் அல்லது எதிர்கால இந்திய அணுமின் நிலையத் திட்டங் களைப் பாதிக்கவில்லை.  இந்திய அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் (Atomic Energy Regulatory Board – AERB) இயங்கும் அல்லது திட்டமிட்ட அணு உலைகளின் டிசைன் அடிப்படை விபத்துகளோ அல்லது அதற்கு அப்பாற் பட்ட இயற்கை தூண்டும் விபத்துகளோ நேர்ந்தால் விளையும் அபாயப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.


10 ஜப்பான் : ஜப்பானின் அணுமின் & தொழிற்துறைப் பாதுகாப்பு ஆணையகம் (NISA) அணுமின் உலைகள் அனைத்தும் தற்போதுள்ள அபாய விபத்துக் கையாளும் முறைப்பாடுகளை மீளாய்வு செய்து அனுப்பும்படிக் கட்டளை இட்டுள்ளது.  மேலும் அந்த அணுமின் உலைகள் தற்போது அமைக்கப் பட்டிருப்பதைத் தவிர அடுத்தோர் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆணையிட்டது.  2011 மே 6 ஆம் தேதி கடற் கரையில் அமைக்கப் பட்டுள்ள ஹமோகா (Hamaoaka) அணுமின் உலையில் அசுரச் சுனாமிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதிதாய் அமைப்பது வரை நிலையத்தைப் பிரதம மந்திரி நிறுத்தம் செய்தார்.  மே 10 ஆம் தேதி பிரதம மந்திரி ஜப்பான் எதிர்கால எரிசக்தி ‘அரசியல் நியதி’ (Govt Policy) திசைமாறப் போவதாகக் கூறினார்.  2030 ஆண்டுக்குள் ஜப்பானின் 50% பங்கு மின்சாரத் தேவையை புதிய அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என்னும் அரசியல் நியதி நீக்கப்படுவது பற்றிப் பேசினார்.  அவற்றுக்குப் பதிலாக ‘புதுப்பித்து மீளும் எரிசக்தி, சிக்கனச் சேமிப்பு எரிசக்தி (Renewable Energy & Conservation) ஏற்பாடுகள் வரவேற்கப்படும் என்றும் கூறினார்.  புகுஷிமா அணு உலைகள் விபத்தாலும், நிறுத்தம் அடைந்த சில அணுமின் நிலைய முடக்கத்தாலும் ஜப்பான் 3473 MWe மின்சார உற்பத்தியை இப்போது இழக்க நேரிடுகிறது.  அது உடனே நிரப்பப்பட வில்லையாயின் பல தொழிற்சாலைகள் மூடப்படும்,  மேலும் பல்லாயிரம் ஊழியர் தமது வேலை இழப்பார்.


முடிவுரை: உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஹிரோஷிமா, நாகசாக்கி, திரிமைல் தீவு, செர்நோபில், புகுஷிமா கதிரியக்க விபத்துக்களுக்குப் பிறகு செம்மைப் படுத்தி 2012 இல் 30 உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலை யத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.


(தொடரும்)


***************