புதன், 22 செப்டம்பர், 2010

செவ்வாய்க் கோளைச் சுற்றித் துணைக்கோள் போபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்து பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி

சந்திரனில் தடம் வைத்தார்
விண்வெளித் தீரர் !
வால்மீன் வயிற்றில் அடித்தார் !
வால்மீன் தள்ளும்
தூளான நீர்மைத் தூசிகளை
வடிகட்டியில்
பிடித்து வந்தார் பூமிக்கு !
முரண்கோள் மாதிரியை
ஜப்பான்
எடுத்து வந்தது !
இப்போது புத்துயிர் பெற்ற
ரஷ்யா
மீண்டும் விண்வெளி
வித்தைகள் புரிய வருகிறது !
முந்திக் கொண்டு
முதன் முதலாய் ரஷ்யா
செந்நிறக் கோளைச் சுற்றித்
தளவுளவி
வக்கிரத் துணைக்கோள்
•போபாஸில் இறங்கி
மாதிரி மண் எடுத்துப்
புவிக்கு மீளும் !
ரஷ்யக் கரடி
ஒரு கல்லில் அடிக்கும்
இரு மாங்காய் !
"நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது".
ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]
"மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள். அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது. உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள •போபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது. மக்கள் •போபாஸைக் காணும் போது 'யார் அதை அங்கு வைத்தவர்' என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்."
அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)
“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

"1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது. ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம். ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் "பிரிப்பான்களைத்" (Oxidants) துண்டித்துவிடும். செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம். ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்."
வில்லியம் பாயின்டன், [William Boynton] •பீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

21 ஆம் நூற்றாண்டில் ரஷ்யா மீண்டும் விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது.

1957 இல் முதன்முதல் ஸ்புட்னிக் -1 பூமியைச் சுற்றிவர அனுப்பி விண்வெளிப் புரட்சியை
ஆரம்பித்துப் பந்தயத்தைத் துவக்கிய ரஷ்யா 1984 ஆண்டு வரை வெற்றிகரமாக ஆழ் வெளியை ஆராய்ந்து சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு முடங்கிப் போனது. இப்போது 1974 இல் ஒத்திப் போட்ட செவ்வாய்க் கோள் தளவுளவித் திட்டத்தைப் புதுப்பித்து ரஷ்யா மீண்டும் விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து சோதனைகளை இப்போது நடத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின்படி ரஷ்யா செவ்வாயிக்கு விண்வெளிக் கப்பலை அனுப்பி அத்துடன் துணைக்கோள் •போபோஸில் இறங்கும் தளவுளவி ஒன்றையும் அனுப்பி 2011 நவம்பரில் செய்து காட்ட முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் தனித்துவச் சிறப்பு என்ன வென்றால் இரண்டு தளவுளவிகளும் இறங்கி மாதிரி மண்ணை எடுத்து முதன்முதலாகப் புவிக்கு மீளும். இந்தச் செவ்வாய்க் கோள், துணைக்கோள் ஆய்வுகள் 2011 நவம்பரில் ஆரம்பித்துச் சுமார் 330 நாட்கள் நீடிக்கும்.

2011 இல் ரஷ்யா செவ்வாய்த் துணைக்கோளில் இறங்கி மாதிரி எடுத்து மீளும்

2011 ஆண்டு இறுதியில் மனிதரற்ற ஓர் விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றிவந்து, அதன் பெரிய துணைக்கோளான •போபாஸில் (Phobos) இறங்கி மாதிரி மண்ணை அள்ளிக் கொண்டு முதன்முதலாய்ப் பூமிக்கு மீளும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார். அந்த ரஷ்ய விண்ணுளவியின் பெயர் •போபாஸ்-கிரண்ட் (Phobos-Grunt) என்பது. செவ்வாய்க் கோளைச் சுற்றும் கோள் சுற்றி (Mars Orbiter) செவ்வாயின் சூழ்வெளியையும், தூசிப்புயல் அடிப்பையும், சூரிய ஒளிப்பிழம்பு, கதிர்வீச்சுகளை (Mars Atmosphere, Dust Storms, Plasma & Radiation) ஆராயும். இந்த ரஷ்ய ஏவுகணைத் திட்டத்தில் சைனாவின் செவ்வாய்க் கோள் சுற்றி "இங்குவோ-1" (Chinese Mars Orbiter Yinghuo-1) ஒன்றும் ஏற்றிச் செல்லப்படும். இந்தப் பயணம் வெற்றி பெற்றால் நிலவைப் போல் செவ்வாய்த் துணைக்கோள் மாதிரியை முதலில் பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்று முதன்மை அடையும் ரஷ்யா !

செவ்வாய்க் கோள் •போபாஸ்-கிரண்ட் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

1. துணைக்கோள் •போபாஸில் மண் மாதிரியைச் சேமித்துப் புவிக்குக் கொண்டு வந்து ஆராய்வது. செவ்வாய்க் கோளையும், அதன் சூழ்வெளியையும் சோதிப்பது.

2, •போபாஸ் தளத்திலும், அப்பால் பூமியிலும் மாதிரிகளைச் சோதிப்பது.

3. செவ்வாய்க் கோளில் சூழ்வெளியைக் கண்காணிப்பது. தூசிப் புயல் அடிப்புகளையும், அதன் பாதிப்புகளையும் நோக்குவது.

4. சூரியனின் கதிர்வீச்சுக் கடுமை, ஒளிப் பிழம்புப் பிளாஸ்மா, வாயுத் தூசி மண்டலம் போன்ற செவ்வாய்க் கோளின் சுற்றுப் புறத்தை ஆராய்வது.

5. செவ்வாய்க் கோளின் இரண்டு வக்கிரத் துணைக்கோள்களின் (•போபாஸ், டைமாஸ்) பூர்வீகத்தையும், அவை செவ்வாயுடன் கொண்டுள்ள உறவுகளையும் அறிதல்.

6. பூமியை ஒத்த கோள்களை உண்டாக்குவதில் தாக்கிய முரண் கோள்களின் (Asteroids)
பங்கு என்ன ?

7. செவ்வாய்க் கோள், அதன் துணைக்கோள்களின் பூர்வீகத்தையும் எதிர்காலத்தையும் அறிதல்.

8. ஒரு மூடிய அடைப்புச் சிமிழில் மீறிய நிலைகளில் பிழைத்திருக்கும் நுட்பக் கிருமிகளை இட்டு (Extremophile microorganisms) மூன்றாண்டு செவ்வாய்க் கோள் மீள் பயணத்தில் சோதிப்பது.
•போபாஸ்-கிரண்ட் திட்டத்தின் பயண விளக்கம் & கருவிகள்

செவ்வாய்க் கோள் பயணத்துக்குப் 10 மாதங்கள் எடுக்கும். ரஷ்ய விண்ணுளவி •போபாஸில் இறங்குவதற்கு முன்பு செவ்வாய்க் கோளையும் அதன் துணைக்கோளையும் பல மாதங்கள் சுற்றிவர வேண்டியதிருக்கும். •போபாஸ் தளத்தைத் தொட்டதும் தளவுளவி புவிக்கு மீளும் ராக்கெட்டில் மாதிரி மண்ணைச் சேமிக்கும். தொடர்பு இணைப்பில் ஏதாவது பழுது ஏற்படுமாயின், அபாய முறைப்பாடு இயங்கி மாதிரியை மட்டும் எடுத்துக்கொண்டு மீளும் ஏவுகணை பூமிக்குத் திரும்பும். திட்டமிட்ட வழிப்படி மாதிரிச் சேமிப்புக்கு 2 நாட்கள் முதல் 7 நாட்கள் ஆகலாம். துணைக்கோளின் தளத்தில் மண்ணை அள்ளும் சுய இயங்குக் கரம் அரை அங்குலக் கற்கள் வரை எடுத்து ஒரு குழலில் நிரப்ப முடியும். மாதிரியைக் குழலில் திணிப்பதற்கு ஒரு "புகுத்தியும்" (Piston) மாதிரி நிரம்பி விட்டால் நிறுத்த ஓர் "ஒளிநோக்குத் தடுப்புச் சாதனமும் (A Light Sensitive Photo-Diode) தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. சுய இயங்கு கரம் 15 அல்லது 20 அள்ளும் முறைகளில் சுமார் 85 -160 கிராம் மாதிரிகள் சேமிக்க முடியும்.
•போபாஸ் துணைக்கோள் மாதிரியைச் சுமந்து கொண்டு பூமிக்குத் திரும்பும் மீட்சிச் சிமிழை இணைத்து வரும் செவ்வாய் மீள் விண்கப்பல் 8 அடி உயரம், 10 அடி அகலம் கொண்டது. மீளும் ஏவுகணைச் சிமிழ் விண்ணுளவியின் தலைமேல் இணைப்பாகி யுள்ளது. •ப்போபாஸின் ஈர்ப்பு விசை மிகவும் குன்றியது. அதனால்தான் ரஷ்யா மீளும் ஏவு கணைக்கு மெலிந்த ஈர்ப்பு விசையுள்ள •போபாஸ் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. மீளும் ஏவுகணை 35 km/hr (22 mph) வேகத்தில் மேல் எழுந்தால் •போபாஸ் ஈர்ப்பு விசையைத் தாண்டி புவிநோக்கித் திரும்பமுடியும். ஒரு பாதுகாப்பான உயரத்துக்கு மீளும் ஏவுகணை போன பிறகு அதன் ராக்கெட் எஞ்சின்கள் இயங்க ஆரம்பித்து புவி நோக்கி மீளும் பாதைக்குப் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பி நகர்த்தப் படுகிறது. •போபாஸ் தளவுளவி அதன் தளத்தின் மீது ஓராண்டுக்குச் சோதனைகள் செய்யும்.

•போபாஸ்-கிரண்ட் திட்டத்தில் ரஷ்யப் பயணக் கருவிகள்

1. தளக் கட்டுப்பாடு & வழிநடத்து அரங்கம் (TV System for Navigation & Guidance)

2. காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி (Gamma Ray Spectrometer)

3. நியூட்ரான் ஒளிப்பட்டை மானி (Neutron Spectrometer)

4. ஆல்•பா எக்ஸ் ஒளிப்பட்டை மானி (Alpha X Spectrometer)

5. திணிவு நிறை ஒளிப்பட்டை மானி (Mass Spectrometer)

6. செவ்வாய்க் கோள் தள நடுக்க மானி (Seismometer)

7. நீள் அலை ரேடார் (Long Wave Radar)

8. கண்ணோக்கு நெருக்க உட்சிவப்பு ஒளிப்பட்டை மானி (Visual & Near-Infrared Spectrometer)

9. செவ்வாய்த் தளப்புயல் தூசி அளப்பி (Dust Counter)

10. சூரியக் கதிர்வீச்சு ஒளிப்பட்டை மானி (Ion Spectrometer)

11 சூரிய நோக்கு உளவுக் கருவி (Optical Solar Sensor)

2005 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மீண்டுமோர் விண்கப்பல்

நாசா [NASA -National Aeronautics & Space Admistration] 2003 இல் செவ்வாய்க் கோளுக்கு சர்வேயர் [Surveyor], ஆடிஸ்ஸி [Mars Odyssey] விண்கப்பல்களை ஏவியது. பிறகு ஈரோப்பில் ஈசா [ESA -European Space Agency] செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸை [Mars Express] அதே சமயத்தில் அனுப்பியது. ரோவர் ஊர்திகள் இரண்டும் 2004 ஜனவரியில் அடுத்தடுத்துச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நடமாட ஆரம்பித்தன. அதன் பிறகு நாசா 2005 ஆகஸ்டு 12 இல் செவ்வாய் விண்சுற்றிக் கப்பலைச் [Mars Reconnaisdsance Orbiter] செவ்வாய்க் கோளுக்கு ஏவியது. விண்சுற்றி 2006 மார்ச்சில் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்து, அடுத்து ஆறு ஆண்டு காலங்கள் (2012 வரை) வலம் வரும் ! அப்பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர்! முதலிரண்டு காலம் அது செவ்வாய்க் கோளின் துருவப் பனித் தொப்பியின் [Polar Ice Cap] வரலாற்றை அறிய முனைந்தது.

2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைக்கும் முதல் செவ்வாய்ப் பயணம்

இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் [2025] நாசாவும், ஈசாவும் மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பல்களைத் [Manned Spacecraft] தயாரித்து, செவ்வாய்க் கோளில் தமது தடத்தை வைக்கத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு வருகின்றன! அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது! ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும்! மேலும் செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டிய திருக்கும் ! பரிதியின் தீக்கதிர்கள் தாக்குவதைப் பல மாதங்கள் தாங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும். அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய பிரச்சனைகள், அனுபவச் சிரமங்கள் அநேகம் ! அநேகம் ! பாதுகாப்பாக அப்பயணத்தைத் துவங்கி நிறைவேற்றத் துணியும் விஞ்ஞானிகளின் மன உறுதியை நாம் மிகவும் மெச்ச வேண்டும். நாசா அல்லது ஈசா செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, செவ்வாய்த் தளத்தில் தடமிட்ட பிறகு பாதுகாப்பாகப் பூமிக்கு மீட்சி செய்தால், அது நிச்சயம் 21 ஆம் நூற்றாண்டு விண்வெளி வரலாற்றில் ஓர் மகத்தான விஞ்ஞானச் சாதனையாக முதன்மை பெற்றுப் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.
தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA, Russian Space Exploration & Chinese Websites

1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online - Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA's Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]