ஞாயிறு, 23 ஜனவரி, 2011

பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்



கடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தார் என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப் படைப்புக் கடவுளின் உள்ளக் கருத்துக்களைத் தேட விழைகிறேன்; மற்றவை எல்லாம் அதன் விளக்கங்கள்தான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (காலவெளிக்கு அப்பால் பிரபஞ்சங்கள்)

(காலம் என்னும்) நான்காவது பரிமாணம் 1910 ஆண்டுகளில் பெரும்பாலும் புழங்கும் ஒரு வீட்டுச் சொல்லாக ஆகிவிட்டது. பிளாடோ, கந்தின் பூரண மெய்ப்பாடு (An Ideal Platonic or Kantian Reality) முதல் துவங்கி வானுலகும் உட்படத் தற்காலப் புதிரான விஞ்ஞானப் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடையாக எல்லாராலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.


பேராசியை டாக்டர் லிண்டர் ஹென்டர்ஸன் (கலையியல் விஞ்ஞானம்)

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பி யுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து "ஒற்றை முடத்துவ" (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)


நியூட்டன், ஐன்ஸ்டைனுக்கு நிகரான தற்கால விஞ்ஞானி

1974 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் ஒரு நாள் காலை வேளை! லண்டனில் கோட்டும், சூட்டும் அணிந்த ஓர் இளைஞரைப் புனிதர் ஜேம்ஸ் பூங்காவின் எதிரே நிற்கும் வெள்ளை மாளிகைப் படிகளில் தூக்கிக் கொண்டு சென்றார்கள்! உள்ளே இருந்த உருளை நாற்காலியில் [Wheelchair] அமர வைத்துக், கார்ல்டன் மாளிகையின் திறந்த மாடியில் [Carlton House Terrace] இருந்த ஒரு பெரும் அறைக்கு அவர் கொண்டு செல்லப் பட்டார்! அங்கே பிரிட்டனின் மிகச் சிறந்த விஞ்ஞான மேதைகளின் பேரவையான ராஜீயக் குழுவின் [Fellow of Royal Society] சிறப்புநராக ஒரு மாபெரும் கெளரவத்தைப் பெறுவதற்கு வந்தார்! 32 வயதில் அந்த மதிப்பைக் கோட்பாடு பெளதிகத்திற்கு [Theoretical Physics] அடைந்த ஸ்டீஃபன் ஹாக்கிங்தான் [Stephen Hawking] இதுவரை சிறப்புநராக இருக்கும் எல்லோருக்கும் மிக இளையவர்!


இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளின் ஒப்பற்ற பெளதிக மேதையாகத் தற்போது கடுமையான நோயில் காலந் தள்ளி வரும், 2010 இல் அறுபத்தெட்டு வயதான ஸ்டீஃபன் ஹாக்கிங் ஞான ஆற்றலில் காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோருக்கு இணையாகக் கருதப்படும் ஓர் பிரிட்டிஷ் விஞ்ஞானி! விரிந்து செல்லும் பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு [The Origin & Fate of the Universe], ஈர்ப்பியல்பின் கதிர்த்துகள் நியதி [Quantum Theory of Gravity], நிச்சயமற்ற கோட்பாடு [The Uncertainty Principle], அடிப்படைத் துகள்கள், இயற்கையின் உந்தி [Elementary Particles, the Force of Nature], பிரபஞ்சத்தின் கருந்துளைகள் [Black Holes], கால அம்பு [The Arrow of Time (காலத்தின் ஒருபோக்கு)], பெளதிகத்தின் ஐக்கியப்பாடு [The Unification of Physics] ஆகியவற்றில் தனது ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக, எளிதாக எடுத்துக் கூறியவர். பிரம்மாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் இயக்க ஒழுக்கங்களையும், கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத் துகள்களின் [Fundamental Particles] அமைப்பையும் ஒன்றாக விளக்கக் கூடிய 'மகா ஐக்கிய நியதி' [Grand Unified Theory, GUT] ஒன்றை விஞ்ஞானிகள் என்றாவது ஒருநாள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்பவர், ஹாக்கிங்!

இப்போது இங்கிலாந்தில் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணி யாற்றி வருகிறார். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதே பதவியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர், ஈர்ப்பியலைக் [Gravitation] கண்டுபிடித்த கணிதப் பெளதிக மேதை, ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1726)! நோபெல் பரிசு பெற்றக் கணித மேதை பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரும் அதே இடத்தில் பின்னால் பதவி வகித்தவர்!


ஸ்டீஃபன் ஹாக்கிங் இளமை வாழ்க்கை வரலாறு

காலிலியோ இறந்து துள்ளியமாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங் 1942 ஜனவரி 8 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்தார். மருத்துவ டாக்டரான தந்தை பிராங்க் ஹாக்கிங், தேசிய மருத்துவ ஆய்வுக் கூடத்தில் [National Institute for Medical Research] வேனில் நாட்டு நோய்களில் [Tropical Diseases] சிறப்பாக ஆராய்ச்சி செய்து வந்த உயிரியல் விஞ்ஞானி [Research Biologist]. தாயார் இஸபெல் ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வேதாந்தம், அரசியல், நிதித்துறை பற்றிப் படித்தவர். அவர்களது நான்கு குழந்தைகளில் ஸ்டீஃபன்தான் மூத்த பையன். அவன் பிறந்த சமயம்தான் இரண்டாம் உலகப் போர் துவங்கி, ஜெர்மன் கட்டளை ராக்கெட்டுகள் அடிக்கடி ஏவப்பட்டுக் குண்டுகள் விழுந்து, பிரிட்டனில் பல நகரங்கள் தகர்க்கப் பட்டன!

சிறுவனாக உள்ள போதே ஸ்டீஃபன் பெளதிகத்திலும், கணிதத்திலும் மித மிஞ்சிய சாமர்த்தசாலியாக இருந்தான்! ஹைகேட் [Highgate] ஆரம்பப் பள்ளியில் படித்தபின், ஸ்டீஃபன் பிறகு புனித ஆல்பன்ஸ் [St. Albans] உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தான். 1958 இல் மேற்படிப்பிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தந்தையார் மருத்துவம் எடுக்கத் தூண்டியும் கேளாது, ஸ்டீஃபன் கணிதம், பெளதிகம் இரண்டையும் விரும்பி எடுத்துக் கொண்டார்!


அங்கே அவர் வெப்பயியக்கவியல், ஒப்பியல் நியதி, கதிர்த்துகள் யந்திரவியல் [Thermodynamics, Relativity Theory, Quantum Mechanics] ஆகிய பகுதிகளைச் சிறப்பாகப் படித்தார். 1961 இல் ராஜீய விண்ணோக்கிக் கூடத்தில் [Royal Observatory] சேர்ந்து, தன் சிறப்புப் பாடங்களின் வேட்கையில் சில மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1962 இல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் B.A. பெளதிகப் பட்டதாரி ஆகி, அடுத்துக் கேம்பிரிட்ஜ் சென்று பொது ஒப்பியல், அகிலவியல் துறைகளில் [General Relativity, Cosmology] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார்.

கேம்பிரிட்ஜில் முதற் காலவரைப் படிப்பு [First Term] முடிந்த பின் மிகவும் சோர்ந்து நொய்ந்து போன ஸ்டீஃபனைக் கண்ட தாய், டாக்டரைப் பார்க்கும்படி மகனை வற்புறுத்தினார். இரண்டு வார உடம்பு சோதனைக்குப் பின், அவருக்கு ALS என்னும் [Amyotropic Lateral Disease] ஒருவித நரம்புத் தசை நோய் [Neuro-muscular Disease (Motor Neurone Disease)] உள்ளதாக, டாக்டர்கள் கண்டு பிடித்தார்கள்! அமெரிக்காவில் அந்நோயை 'லோ கேரிக் நோய்' [Lou Gehrig 's Disease] என்று குறிப்பிடுகிறார்கள்! அந்நோய் மூளை, முதுகுத் தண்டு [Spinal Cord] ஆகியவற்றில் சுயத்தசை இயக்கத்தை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் [Nerve Cells] சிதைத்து விடும்!


ஆனால் மூளையின் அறிவாற்றலைப் பாதிக்காது! அடுத்து நோயாளிக்குச் சுவாசிக்கும் தசைகள் சீர்கேடாகி மூச்சடைத்தோ அல்லது நிமோனியா தாக்கியோ சீக்கிரம் மரணம் உண்டாகும்! திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, டாக்டர்கள் அவர் Ph.D. பட்டம் வாங்குவது வரை கூட வாழ மாட்டார் என்று முன்னறி வித்தார்கள்! அதைக் கேட்ட ஸ்டீஃபன் ஹாக்கிங் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாலும், பெளதிக ஆராய்ச்சி செய்யும் போது மன உறுதியும், வலிவும் பெற்று ஆய்வுகளில் முன்னேறிக் கொண்டு வந்தார்!

மாதர் குல மாணிக்கம் மனைவி ஜேன் ஹாக்கிங்!

வாழ்க்கையில் நொந்து போன ஹாக்கிங், 1965 இல் ஜேன் ஒயில்டு [Jane Wilde] என்னும் மாதைத் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜேன் ஹாக்கிங் மாதருள் ஒரு மாணிக்கம்! மில்லியனில் ஒருத்தி அவள்! அவரது கடும் நோயைப் பற்றி அறிந்த பின்னும், அவர் நீண்ட காலம் உயிர் வாழமாட்டார் என்று தெரிந்த பின்னும், மன உறுதியோடு ஸ்டீஃபனை மணந்து கொண்டது, ஓர் வியக்கத் தக்க தீரச் செயலே! ஹாக்கிங் கசந்த போன வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றி, மாபெரும் விஞ்ஞானச் சாதனைகள் புரிய வசதி செய்த வனிதாமணி, ஜேன் ஹாக்கிங்! 1962 இல் லோ கேரிக் நோய் [Lou Gehrig 's Disease] வாய்ப்பட்டதும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டீஃபன் ஆயுள் முடிந்துவிடும் என்று டாக்டர்கள் கணக்கிட்டார்கள்! ஆனால் நாற்பத்தெட்டு ஆண்டுகள் தாண்டியும் [2010] அவரது ஆயுள் இன்னும் நீண்டு கொண்டே போகிறது! அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் உள்ளார்கள்!

துரதிர்ஷ்ட வசமாக நகர்ச்சி நரம்பு நோயில் [Motor Neurone Disease] துன்புறும் ஸ்டீஃபன், முழுவதும் நடக்க முடியாது முடமாகிப் போய், பேச்சுத் தடுமாறி உருளை நாற்காலியில் நகர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது! மற்றும் சில முறைகளில் அவருக்கு யோகமும் இருந்தது! அவரது மனைவி ஜேன், ஹாக்கிங் [Jane Hawking] புதல்வர், புதல்வி அளிக்கும் உதவி, ஆதரவு ஸ்டீஃபனுக்கு விஞ்ஞானப் பணிகளில் வெற்றியும், சுமுகமான வாழ்க்கையும் பெற ஏதுவாக இருந்தது! அவரது விஞ்ஞானக் கூட்டாளிகளான ராஜர் பென்ரோஸ் [Roger Penrose], ராபர்ட் ஜெரோச் [Robert Geroch], பிரான்டன் கார்டர் [Brandon Carter], ஜார்ஜ் எல்லிஸ் [George Ellis] ஆகியோர் ஆராய்ச்சியிலும், பெளதிகப் பணியிலும் அவருக்குப் பேராதரவாகவும், பெருந்துணைவராகவும் அருகே இருந்தனர்!


1985 இல் 'காலத்தின் ஒரு சுருக்க வரலாறு' [A Brief History of Time] என்னும் அவரது நூலின் முதற்படி எழுத்தாக்கம் [Draft] முடிந்தது. ஜெனிவாவுக்குச் சென்று செர்ன் பரமாணு விரைவாக்கியில் [CERN Particle Accelerator] ஆராய்ச்சிக்காகத் தங்கிய போது, நிமோனியா நோய் வாய்ப்பட்டு மருத்துவக் கூடத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டார். உயிர்த்துணைச் சாதனத்தை [Life Support System] அவருக்கு இணைத்திருப்பதில் எதுவும் பயனில்லை என்று டாக்டர்கள் கூற, மனைவி ஜேன் ஹாக்கிங் கேளாமல், அவரைக் கேம்பிரிட்ஜ் மருத்துவக் கூடத்திற்கு விமானத்தில் கொண்டு வந்தார்! அங்கே தொண்டைக் குழாய் அறுவை [Tracheostomy Operation] அவருக்குச் செய்ய நேரிட்டது. என்ன ஆச்சரியம்! அறுவை வெற்றி யாகி ஸ்டீஃபன் உயிர் பிழைத்தார்! ஆனால் அவரது குரல் முழுவதும் போய் விட்டது! அதன் பின் அவர் எந்த விதத் தொடர்பும் பிறரிடம் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது!

அப்போது அவரது மாணவருள் ஒருவரான பிரையன் விட் [Brian Whitt] என்பவர் நூலை எழுதி முடிக்க உதவியதோடுப், பிறரிடம் தொடர்பு கொள்ள 'வாழ்வு மையம் ' [Living Center] என்னும் தொடர்புக் கணனிப் பொறி [Communication Program] ஒன்றை ஸ்டீஃபனுக்கு அமைத்துக் கொடுத்தார். 'வாழ்வு மையம்' சன்னிவேல் கலிஃபோர்னியாவில் உள்ள வால்ட் வால்டாஸ் [Walt Woltosz of Words Plus Inc. & Speech Plus Inc. Sunnyvale, California] அவரின் அன்பளிப்பு!


அதைப் பயன்படுத்தி ஸ்டீஃபன் கட்டுரை எழுதலாம்; புத்தகம் தயாரிக்கலாம்; அதில் உள்ள பேச்சு இணைப்பியின் [Speech Synthecizer] மூலம் ஸ்டீஃபன் பிறருடன் பேசலாம்! டேவிட் மேஸன் [David Meson] என்பவர் பேச்சு இணைப்பி, மின்கணனி இரண்டையும் அவரது உருளை நாற்காலியில் வசதியாகப் பிணைத்து வைத்தார். இப்போது ஸ்டீஃபன் மின்னியல் குரலில் [Electronic Voice], முன்னை விடத் தெளிவாக இவை மூலம் பேச முடிகிறது!

1966 இல் ஸ்டீஃபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக டிரினிடி கல்லூரியில் தனது Ph.D. பட்டத்தைப் பெற்று அங்கேயே பட்ட மேல்நிலை ஆராய்ச்சியையும் [Post-doctoral Research] தொடர்ந்தார். 1973 இல் வானியல் கல்விக் கூடத்தில் [Institute of Astronomy] ஆராய்ச்சியை விட்டுவிட்டு, கேம்பிரிட்ஜில் கணிதப் பெளதிகத் துறையகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். முப்பத்திரண்டாம் வயதில் எல்லாருக்கும் இளைய ஹாக்கிங், ராயல் குழுவின் சிறப்புநராக [Fellow of Royal Society] 1974 இல் ஆக்கப் பட்டார்! டிரினிடி கல்லூரியில் 1977 இல் ஈர்ப்பியல் பெளதிகப் [Gravitational Physics] பேராசிரியராகவும் ஆனார். முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஐஸக் நியூட்டன் ஆட்கொண்ட ஆசனத்தில், 1979 இல் ஸ்டீஃபன் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜில் பதவி மேற்கொண்டார்!

'எது முதலில் வந்தது ? கோழிக்குஞ்சா ? அல்லது முட்டையா ? பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததா ? அப்படி யென்றால் அதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது ? எங்கிருந்து பிரபஞ்சம் வந்தது ? அது எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?' இவ்வாறு வினாக்களை எழுப்பியவர், ஸ்டீஃபன் ஹாக்கிங்! ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி மெய்யென்றால், சென்ற காலத்தில் முடிவில்லாத் திணிவு கொண்ட நிலை [The State of Infinite Density] இருந்திருக்க வேண்டும்! அதுவே பெரு வெடிப்பு ஒற்றை மாறுபாடு [Big Bang Singularity] என்று கூறப்படுவது. பிரபஞ்சத்தின் ஆரம்பம் அதுதான் என்றும் சொல்லலாம். அறியப்பட்ட விஞ்ஞானத்தின் விதிகள் அனைத்தும் ஒற்றை மாறுபாட்டில் அடிபட்டுப் போகின்றன! பொது ஒப்பியல் நியதி மெய்யென்றால், பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விஞ்ஞானம் முன்னறிவிக்க முடியாது!


வெப்ப இயக்கவியலின் இரண்டாம் நியதி [Second Law of Thermodynamics] கூறுகிறது: 'ஓர் தனிப்பட்ட ஏற்பாட்டில் எப்போதும் 'என்றாப்பி' [ஒழுங்கீனம்] மிகுந்து கொண்டே போகிறது [The Entropy or Disorder of an isolated system always increases]'. கீழே விழுந்து நொறுங்கிய முட்டையை மறுபடியும் ஒன்றாய்ச் சேர்த்து முன்பிருந்த வடிவத்திற்குக் கொண்டு வர முடியாது! கருந்துளையின் 'நிகழ்ச்சி விளிம்பு' [Event Horizon] காலம் செல்லச் செல்ல எப்போதும் பெரிதாகிறது! நிகழ்ச்சி விளிம்பின் பரப்பு பெருகிக் கொண்டு போவதால், கருந்துளை 'என்றாப்பி' கொண்டுள்ளது என்பது தெரிகிறது!

அதாவது கருந்துளையில் எவ்வளவு ஒழுங்கீனம் [Entropy or Disorder] நிறைந்துள்ளது என்பதை 'என்றாப்பி' காட்டும். என்றாப்பி இருந்தால் நிச்சயம் கருந்துளையில் உஷ்ணம் இருக்க வேண்டும்! பழுக்கக் காய்ச்சிய இரும்பில் வெப்பக் கதிர் வீசுவது போல், கருந்துளையிலும் வெப்பக் கதிர்கள் [Heat Radiation] வெளியாகிக் கொண்டு இருக்க வேண்டும்!


நிச்சயமற்ற விதிகளும், சூதாட்டம் போல் [Chance & Uncertainty] நிகழ்ச்சிகளும் இருப்பதால், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கதிர்த்துகள் யந்திரவியலை [Quantum Mechanics] ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்! அதைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'கடவுள் பிரபஞ்சத்துடன் பகடை ஆடுவதில்லை' [God does not play dice with the universe] என்று பல தடவைச் சொல்லி யிருக்கிறார்! 'ஐன்ஸ்டைன் அப்படிச் சொல்லியது, முற்றிலும் தவறு! கருந்துளையின் மீது ஒளித்துகள் பாதிப்பு நிகழ்ச்சியை ஆராய்ந்தால், கடவுள் பகடை ஆடுவதோடு மட்டும் நில்லாமல், சில சமயம் அவற்றைக் காண முடியாதபடித் தூக்கி விட்டெறிந்தும் விடுகிறார் ' என்று ஹாக்கிங் மறுதலித்துக் கூறினார்!

பிரபஞ்சத்தின் மெய்க் காலம்! கற்பனைக் காலம்!

'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய் விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை' என்று புன்னகை புரிகிறார், ஸ்டீஃபன் ஹாக்கிங்!

பிரபஞ்சத்தின் பிறப்பை அனுமானிப்பதாய் இருந்தால், அது தோன்றிய காலத்தின் நியதிகளைப் பற்றி ஒருவர் அறிய வேண்டும்! மெய்க் காலத்துக்கு இருவிதக் கோலங்களை எடுத்து விளக்கலாம்! ஒன்று காலக் கடிகாரம் பின்னோக்கி வரையில்லாமல் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும் ஒரு நிலை! அல்லது பெரு வெடிப்பு போல் [Big Bang] ஒற்றை முறைகேட்டில் [Singularity] காலம் ஆரம்பம் ஆகி யிருக்கலாம்! மெய்க் காலம் [Real Time] என்பது பிரபஞ்ச பெரு வெடிப்பில் ஆரம்பம் ஆகிப் பெரு நொறுங்கலில் முடியும் வரை செல்லும் ஒரு மெய்யான கோடு! இன்னும் ஒரு திசையில் வேறொரு காலம் உள்ளது. அதுதான் கற்பனைத் திசையில் செல்லும் காலம் [Imaginary Direction of Time]! அது மெய்க் காலத்திற்கு நேர் செங்குத்தான திசையில் செல்வது! அந்தக் கற்பனைத் திசையில் பெரு வெடிப்போ அல்லது பெரு நொறுங்கலோ போன்று எந்த வித ஒற்றை முறைகேடும் கிடையாது! அம்முறையில் அத்திசையில் பார்த்தால் பிரபஞ்சத்துக்குத் தோற்றமும் இல்லை!


அடுத்து முடிவும் இல்லை! அத்தகைய கற்பனைக் காலத்தில் தற்போதைய விஞ்ஞான நியதிகள் யாவும் தகர்ந்து போய் விடுகின்றன! அதாவது பிரபஞ்சம் படைக்கப் படவும் இல்லை! பிரபஞ்சம் முடியப் போவதும் இல்லை! பிரபஞ்சம் இப்படியே இருக்கும்! இவ்வாறு பிரபஞ்சத்தைப் பற்றி, ஹாக்கிங் தன் புதுக் கருத்தைக் கூறுகிறார்!

அந்தக் கற்பனைக் காலத்தைத்தான் நாமெல்லாம் மெய்க் காலமாய்க் கருதிக் கொண்டு வரலாம்! மெய்க் காலம் என்று நாம் பின்பற்றி வருவது வெறும் கற்பனையே! மெய்க் காலத்தில் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு! முடிவும் உண்டு! கற்பனைக் காலத்துக்கு ஒற்றை முறைகேடு எதுவும் இல்லை! எல்லையும் இல்லை! அதாவது கற்பனைக் காலந்தான் மெய்யான அடிப்படை! நாம் கணித்த மெய்க்காலம் என்பது பிரபஞ்சம் இப்படித்தான் உண்டானது என்று யூகித்து, நம் சிந்தையில் உதயமான ஒரு கருத்தே! இப்படிச் சொல்கிறார், ஹாக்கிங்!


அண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி அறியப் புது கணித முறைகளைக் கையாண்டு, ஸ்டீஃபன் பொது ஒப்பியல் நியதியில் [General Theory of Relativity] ஒற்றை முறைகேடுகளை [Singularities] ஆராய்ந்து வந்தார். அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீஃபன் அண்டவெளிக் கருங்குழிகளைப் [Black Holes] பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவர் கருந்துளைகளின் ஓர் மகத்தான ஒழுக்கப்பாடு குணத்தைக் [Property] கண்டு பிடித்தார்! ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது! ஒளித்துகளை அவை விழுங்கி விடும்! ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது! கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது! ஜெர்மன் விஞ்ஞானி வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை [Radiation] வெளியேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

அந்த வெற்றியின் முடிவில் ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியையும், கதிர்த்துகள் நியதியையும் ஒன்றாக இணைக்க முற்பட்டு, பிரபஞ்ச இயக்கங்களை ஒருங்கே விளக்கக் கூடிய 'மகா ஐக்கிய நியதி ' [Grand Unified Theory, GUT] ஒன்றை உண்டாக்க முடியுமா என்று முயன்றார்! மர்மமான கருந்துளைகளைப் பற்றிய விபரங்களை அறிய முடியாத சமயத்தில், அவற்றைப் பற்றி ஆராய முற்பட்டார். 1971 இல் பிரபஞ்சப் படைப்பை ஆராய்ந்து, பெரு வெடிப்புக்குப் [Big Bang] பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, ஆனால் புரோட்டான் [Proton] அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றி யிருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்!


அவற்றை 'மினிக் கருந்துளைகள்' [Mini Black Holes] என்றார், ஹாக்கிங்! பொது ஒப்பியல் நியதியைப் பின்பற்றும், பிரம்மாண்டமான ஈர்ப்பியல் கவர்ச்சியைக் கொண்ட இந்த மினிக் கருந்துளைகள் சிறியதாய் இருப்பதால், கதிர்த்துகள் யந்திரவியல் நியதியும் [Laws of Quantum Mechanics] இவற்றுக்குப் பொருந்தும் என்று ஹாக்கிங் கூறினார்! கதிர்த்துகள் நியதியின் விதிப்படி, கருந்துளைகள் சேமிப்புத் தீரும் வரைப் பரமாணுக்களை [Subatomic Particles] வெளியேற்றி, முடிவில் வெடித்துச் சிதைகின்றன என்று கண்டறிந்தார்! ஸ்டீஃபன் ஹாக்கிங் கண்ட இந்த அரிய விஞ்ஞான முடிவு, கருந்துளைகளின் ஆயுட் கால வரலாற்றில் பூர்வீக வெப்ப யியக்கவியல் [Classical Thermodynamics], கதிர்த்துகள் யந்திரவியல் [Quantum Mehanics] இரண்டுக்கும் தொடர்புள்ளது என்று எடுத்துக் காட்டும் முக்கியத்துவம் பெற்றது!

மேலும் ஒரு மகத்தான ஹாக்கிங் சாதனை 1983 இல் ஸான்டா பார்பராவைச் சேர்ந்த ஜிம் ஹார்ட்டிலுடன் [Jim Hartle of Santa Barbara] ஆராய்ந்து அறிவித்த 'விளிம்பற்ற கூறுபாடு' [No Boundary Proposal]! விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை [Space & Time are finite]! ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது [They do not have any boundary or edge]!


ஸ்டீஃபன் ஹாக்கிங் படைத்த நூல்கள், பெற்ற பாராட்டுகள்

1973 இல் எல்லிஸுடன் [G.R.S Ellis] எழுதிய 'விண்வெளிக் காலத்தின் பேரளவு அமைப்பு' [The Large Scale Structure of Space Time], 1981 இல் எழுதிய 'பிரம்மாண்ட விண்வெளி பெரு ஈர்ப்பியல்' [Superspace & Supergravity], 1983 இல் எழுதிய 'மிக இளைய பிரபஞ்சம்' [The Very Early Universe]. ஸ்டீஃபன் எழுதி 1988 இல் வெளியிட்ட 'காலத்தின் ஒரு சுருக்க வரலாறு ' [A Brief History of Time] சிறப்பு விற்பனை நூலாக பல மில்லியன் பிரதிகள் விற்கப் பட்டன! 1993 இல் எழுதிய 'கருந்துளைகள், குழந்தை அகிலங்கள்' [Black Holes & Baby Universes]. 1992 இல் படாதிபதி எர்ரல் மாரிஸ் [Errol Morris] ஸ்டீஃபன் ஹாக்கிங் 'வாழ்க்கையும் பணியும்' என்னும் தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர் எழுதிய 'காலத்தின் ஒரு சுருக்க வரலாறு' என்னும் நூலுக்கு வடிவம் தந்துள்ளார்! மிக இளைய வாலிப வயதிலே ஸ்டீஃபன் F.R.S [Fellow of Royal Society] பெற்று, 12 கெளரவப் பட்டங்களையும் இதுவரைப் பெற்றுள்ளார். அவர் 1989 இல் 'மதிப்பு மிகு தீரர்' [Champian of Honour], பெயர் எடுத்து, அமெரிக்காவின் தேசிய விஞ்ஞானப் பேரவையில் [National Academy of Sciences] உறுப்பினர் ஆனார்!


1991 மார்ச் 5 ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹாக்கிங் வீடு திரும்பும் போது, உருளை நாற்காலியின் முன்னும் பின்னும் சிவப்பு விளக்குகள் மின்ன, அவர் வீதியைப் பாதி கடந்து செல்கையில், வேகமாய் எதிர்த்து வந்த கார் வாகனம் ஒன்று எதிர்ப்பட பணிப் பெண் [நர்ஸ்] 'அங்கே பாருங்கள்' என்று அலறினாள்! ஆனால் ஸ்டீஃபன் தப்ப முடிய வில்லை! வாகனம் வேகமாய் உருளை நாற்காலியை மோதித் தள்ள, ஹாக்கிங் வீதியில் குப்புற விழுந்தார்! அந்தக் கோர விபத்து உருளை நாற்காலியை சிதைத்து, மின்கணனியை உடைத்து, அவரது இடது கையையும் முறித்து விட்டது! தலையில் பல வெட்டுக் காயங்களுடன் எப்படியோ ஹாக்கிங் உயிர் தப்பினார்! அவருக்குப் பதிமூன்று இடங்களில் தலையில் தையல் போட வேண்டிய தாயிற்று! பலமுறைக் காப்பாற்றி விட்ட கடவுள், இந்த விபத்திலும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பாதுகாத்து விட்டார்! சரியாக இரண்டு நாள் கழித்து, ஹாக்கிங் வேலை செய்ய ஆய்வுக் கூடத்திற்குக் கிளம்பினார்!

2010 ஆம் ஆண்டில் அறுபத்தெட்டு வயதாகும் ஹாக்கிங் கடும் நோயுடன் துன்புற்றாலும், இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து விண்வெளி விஞ்ஞானத்தை விருத்தி செய்யப் போகிறார்! வருங்காலத்தில் அண்டவெளிப் பெளதிக ஆக்கத்திற்கு ஒரு நாள் அவருக்கு நோபெல் பரிசு கிடைக்கப் போவதை, நாமும் உறுதியாக எதிர்நோக்கி இருக்கலாம்!


ஆதாரங்கள்:

1. A Brief History of Time, By: Gene Stone & Stephen Hawking [1992]
2. Scientific Genius, By: Jim Glenn [1996]
3. Stephen Hawking 's Universe, By: John Boslough [1889]
4. A Brief History of Time, By: Stephen Hawking [1988]