வெள்ளி, 14 ஜனவரி, 2011

கணினி மேகம் (cloud computing)



ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகள், இலங்கையில் இருக்கும் தன் தந்தையிடம் பேசும் உரையாடல்:
“அப்பா.. இன்னிக்கு குழந்தையோட பிறந்த நாள் விழா நல்லா நடந்தது”
“நிறைய படங்கள் எடுத்தீங்களா!”
“எடுக்காமலா? அதை இப்பத்தான் பேஸ்புக்கில ஏத்தினேன்”
“அப்ப.. இப்பவே படங்கள பார்த்துடறோம்..”
சில நிமிடங்களுக்குப் பின், மறுபடியும் கால்.
“அப்பா.. படங்களப் பாத்தீங்களா?”
“நானும் அம்மாவும் பார்த்தோம். என்ன தான் வெப் கேம் மூலமா நடந்ததெல்லாத்தையும் பார்த்தாலும், போட்டோவுலே அதைப் பார்க்கறதுங்கறது தனிதான்.. வீடியோவை ஏன் இன்னும் ஏத்தல?”
“இதோ.. இன்னும் அரைமணி நேரத்துல அதுவும் இணையத்துல இருக்கும்..”
“அப்ப சரி.. நான் லண்டனில் இருக்கும் உன் அண்ணனை பார்க்கச் சொல்லி;டறேன்…”
இப்படி ஆஸ்திரேலியாவில் நடந்த பிறந்த நாள் நிகழ்வின் படங்களை, இலங்கையிலும் இன்னும் உலகின் மற்ற நாடுகளிலும் உடனுக்குடன் பார்க்கும் திறன் இன்று கணினி உலகின் மாபெரும் முன்னேற்றத்தின் ஒரு சிறு அங்கமே என்று கூறும் வகையில், கணினி உலகில் பன்மடங்கு முன்னேற்றம் நாளுக்கு நாள் ஏற்பட்டு வருகிறது.
பேனாவிற்குப் பதிலாக சட்டைப் பையில் கைபேசி, புத்தகத்திற்கு பதிலாக ஐ-பேட் என்று மனிதன் பயன்படுத்தும் பொருட்கள் மாறி வருகின்றன. எழுதுவதற்கு பதிலாக, எழுத்துக்களை தட்டுவது என்று பயன்பாடும் மாறிவிட்டது. கணினியில் தட்டுவது சுலபமாகிப் போனதால், பரீட்சையை எழுத வேண்டுமா என்று ஆயாசப்படுகின்றனர் இன்றைய மாணவர்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டி சரி செய்வதால், மைக்ரோசாப்ட் வேர்ட்டில் கட்டுரைகளை அடிப்பது அவர்களுக்கு சுலபம். மனித வாழ்வில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.
ஏகப்பட்ட துகள்கள் ஒன்று சேர்ந்து தூசாகிறது. அந்தத் தூசுகள் ஒன்று சேர்ந்து மேகமாகின்றன. அந்த மேகங்கள் வெள்ளைத் திட்டுகளாய் ஆகாயத்தில் வலம் வருவதை நாம் தினமும் காண்கிறோம். இன்று கணினி உலகிலும் அது போன்று ஒரு மேகம் உருவாகி, உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களையும் ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து, கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதென்ன கணினி உலகில் மேகம்?
2007ஆம் ஆண்டிலிருந்து பல ஆய்விற்கு உட்பட்டு வரும் மேகக் கணிப்பு (கிளவுட் கம்பியூட்டிங்), தற்போது கணினியின் பயனை பல விதங்களில் மாற்றி அமைத்துள்ளது என்றே சொல்லலாம். பயனர்களுக்கு பற்பல வகையில் உதவுகின்றது. கிளவுட் கம்பியூட்டிங்கின் ஒரு கூறே மேற்சொன்ன படங்களை இணையத்தில் ஏற்றுதலும் அதை உலகின் மற்றொரு பகுதியிலிருந்து காண்பதும்.
கிளவுட் கம்பியூட்டிங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறதா?
அதைப் பற்றி நாழும் சற்று தெரிந்து கொள்ளலாமா?
நம் மேசை கணினியில் மென்பொருளை ஓட்டிக் கொடுப்பதற்கு பதிலாக, அனைத்துமே இணையகத்தில் இருக்கும் மேகம் என்னும் பல தரப்பட்ட கணினிகளும், சேவையகங்களும் (servers) கூடிய கூட்டத்தில் இணையத்தின் வழியே ஓட்டிக் கொடுப்பதே இதன் முக்கிய அம்சம். அது உங்களது அனைத்து பயன்பாடுகளையும் (applications) ஆவணங்களையும் (documents) உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயன்படுத்த உதவும்.
இந்தப் புதிய உலகினை புரிந்து கொள்வது அத்தனைக் கடினமாக காரியமல்ல. ஏனென்றால் நீங்கள் அதன் அம்சங்களை உங்கள் பணிகளில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.
இன்று வரையிலும், மேசைக் கணினியில் நாம் மென்பொருளை நிறுவி, அதை ஓடச் செய்து, நம் தரவுகளை ஏற்றி, பிறகு தேவையான அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். இது தனித்துச் செயல்படும் முறை. நாம் உருவாக்கும் கோப்புகளும் ஆவணங்களும் இந்தக் கணினியிலேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அதை நிறுவனத்தின் வலையகத்தின் மூலம் மற்ற கணினிகள் அணுகிப் பெறுவதும் சாத்தியமே. இருந்த போதும், வலையகத்தின் வெளியே அவற்றை அணுக முடியாது. இது முழுக்க முழுக்க தனியார் மையமாக அமைக்கப்பட்டது.
ஆனால், பயன்படுத்தப்படும் மென்பொருளையே இணையத்தின் வழி கிளவுட் கம்பியூட்டிங் மூலம் பெறலாம். நம் கணினியில் நிறுவப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் நம் கணினி செயலிழந்து போனாலும் கூட, மென்பொருள் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதன் காரணமாக, நாம் வேறு கணினியைக் கொண்டு, அதே மென்பொருளைப் பயன்படுத்தி நம் பணியினைச் செய்து வி;டலாம்.
அது போன்றே கோப்புகளும் ஆவணங்கiளும் கூட இணையத்தில் சேமிக்கப்பட்டு இருப்பதால், அவற்றையும் இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய எந்நக் கணினி கொண்டும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அணுகிப் பெற்றுக் கொள்ளலாம். அதைப் பெறுவதோடு மட்டுமில்லாமல், அனுமதி இருந்தால், அதன் உள்ளிருக்கும் விசயத்தை கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் செய்யலாம். அதனால் கிளவுட் கம்பியூட்டிங் தனியார் மையத்தை விட்டு, ஆவணத்தை மையமாகக் கொண்டுச் செயல்படுகிறது.
இது மிகவும் எளிய விளக்கம் மட்டுமே. இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோமா?
கிளவுட் கம்பியூட்டிங் வலையகக் கணிப்பு (network computing) அல்ல. வலையகக் கணிப்பில் பயன்பாடுகளும், ஆவணங்களும் நிறுவனத்தாரின் மையச் சேவையகத்தில் பாதுகாக்கப்பட்டு, நிறுவன வலையகத்தின் மூலமாக, பயனர்கள் பயன்படு:த்த வழி செய்யப்படுகிறது. பயனர்கள் பெரும்பாலும் நிறுவனத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். கிளவுட் கம்பியூட்டிங் அதைவிடவும் மிகப் பெரியது. இது பற்பல நிறுவனங்கள், பற்பல சேவையகங்கள், பற்பல வலையகங்களைக் கொண்டது. மேலும், மேகத்தில் இருக்கும் அனைத்து விசயங்களையும், நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுகலாம். பயனர்கள் உலகில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அனுமதி பெற்று அணுக (access) வேண்டிய மென்பொருட்களும், ஆவணங்களும், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அணுக முடியும்.
மேலும் கிளவுட் கம்பியூட்டிங் வெளியே கொடுத்து செய்யப்படும் பணி (out sourcing) முறையும் கிடையாது. நிறுவனங்கள் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் கருதி, தங்கள் பணிகளை வேறு நிறுவனத்தாரிடம் ஒப்படைத்து, தேவையான மென்பொருளை செய்யச் சொல்லிச் செயல்படுவது வெளியே கொடுத்து செய்யப்படும் பணி. வெளிவேலை நிறுவனத்தாரிடம், (outsourcing) நிறுவனத்தின் பயன்பாட்டு மென்பொருளும் (software) , தரவுகளும் (data) இருந்த போதும், நிறுவனச் சேவையகத்தை வலையகத்தின் மூலம் பயன்படுத்தும் திறன் இருந்த போதும், அதுவும் நிறுவன வலையகத்தின் எல்லைக்கு உட்பட்டே இருக்கும்.
அதனால் மேலோட்டமாகக் காணும் போது, வலையகக் கணிப்பு மற்றும் வெளிவேலை யுத்தி போன்று தோன்றினாலும், கிளவுட் கம்பியூட்டிங் இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்டது.
அப்படியென்றால் உண்மையில் கிளவுட் கம்பியூட்டிங் என்பது என்ன?
உண்மை உரு “கிளவுட்” மேகம் என்ற வார்த்தையில் தான் அடங்கியுள்ளது. மேகம் என்பது பல்லாயிரக்கணக்கான கணினிகள் இணைக்கப்பட்ட மிகப் பெரிய கணினிக் குழு. அதிலிருக்கும் கணினிகள் மிகச் சிறிய தனிநபர் கணினியாக இருக்கலாம். அல்லது வலையகத்தில் இருக்கும் சேவையகமாக இருக்கலாம். அவை தனியாராக இருக்கலாம். பொதுவாகவும் இருக்கலாம். இணையத்துடன் கணினி இணைந்தால் போதும். நாழும் மேகத்தின் ஒரு அங்கமாக மாறிவிடுவோம்.
கணினி உலகில் மேகம் என்பது பல விசயங்களை உள்ளடக்கியது. ஹார்ட்வேர், வலையகம் (network) , சேமிப்புப்கலன் (storage), சேவைகள் (services) மற்றும் இடைமுகப்புகள் (interfaces) ஆகிய அனைத்தையும் இணைத்துக் தரும் சேவை தான் கிளவுட் கம்பியூட்டிங். வலையகத்தில் மென்பொருளைத் தருவது, வேண்டிய அனைத்துக் கட்டமைப்புகைள அமைப்பது, பாதுகாப்புப் பெட்டகத்தை உருவாக்கித் தருவது அனைத்தும் இதன் அங்கம். பயனர்கiளின் தேவைக்கேற்ப அனைத்தையும் தரவல்லது.
உதாரணமாக மிகவும் பிரபலமான கூகுள் நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். நாம் கூகுள் தேடுயந்திரத்தின் மூலமாக பல தகவல்களைப் பெறுகிறோம். ஜி-மெயில் மூலமாக மின்னஞ்சல் அனுப்பலாம், பெறலாம். இது எப்படி சாத்தியமாகிறது. கூகுள் நிறுவனம் ஒரு பெரும் மேகத்தை நிறுவியிருப்பதன் விளைவே இவை. இது மிகச் சிறிய தனிநபர் கணினி முதல் பெரிய சேவையகம் வரை கொண்டது. அது தனியானது. கூகுளுக்குச் சொந்தமானது. ஆனால் பயனர்களுக்கு இது பொதுவானது. யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்தக் கணினி மேகமானது தனி நிறுவனத்திற்கும், குழுவினருக்கும் அப்பாற்பட்டது. பயன்பாட்டு மென்பொருளும், தரவுகளும் இந்த மேகக் கூட்டத்தில் இருக்கும் அனைத்துக் கணினிகளுக்கும் கிடைக்கும். அனுமதி பெற்றோர் அணுகிப் பார்க்கலாம். எந்த ஆவணத்தையும், மென்பொருளையும் பயன்படுத்தலாம். பயனர்களுக்கு அதன் கட்டமைப்பு, தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கூகுள் நிறுவனத்தார் இந்தக் கிளவுட் கம்பியூட்டிங் ஆறு முக்கியக் கூறுகளைக் கொண்டது என்று விளக்குவர்.
மேகம் பயனர் மையமானது. பயனராக மேகத்துடன் தொடர்பு கொண்டால், அதில் இருக்கும் ஆவணங்கள், தகவல்கள், படங்கள், பயன்பாட்டு மென்பொருட்கள் என்று எதுவானலும், அது பயனருடையதாகிவிடும். அவை சொந்தமானதாக இருக்கும் அதே நேரத்தில், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவும்.
மேகம் பணி மையமானது. மென்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றைக் கொண்டு ஏற்படுத்தும் ஆவணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
மேகம் சக்தி வாய்ந்தது. தனி மேசை கணினி மூலமாக கிடைக்கும் சக்தியை விட, கணக்கிடமுடியாத சக்தியை எண்ணிலடங்கா கணினிகளின் கூட்டமைப்பில் கிடைக்கும் வாய்ப்பு இந்த மேக அமைப்பின் மூலம் கிடைக்கும்.
மேகம் எளிதில் அணுகத்தக்கது (accessible). தரவுகள் மேகத்தில் சேமிக்கப்பட்டிருப்பதால், பயனர்கள் உடனுக்குடன் பற்பல சேவையகங்களிலிருந்து ஆவணங்களை அணுகிப் பெறலாம்.
மேகம் நுண்ணறிவு (intelligence) கொண்டது. அனைத்து விசயங்களும் மேகத்தில் இருப்பதால், பயனர்களுக்குப் பயன்படும் வகையில் தேவையானவற்றைத் தேடிக் கண்டெடுத்துக் கொடுக்க, மேகத்திற்கு நுண்ணறிவு தேவை.
மேகம் நிரலவல்லது (programmable). பல அத்தியாவசியமான பணிகளைச் செய்ய, மேகம் இயக்கப்பட வேண்டும். உதாரணமாக, தரவுகளைப் பத்திரமாகச் சேமிக்க, ஒரு கணினியில் சேமிக்கப்பட்ட தகவல்கள், பல கணினிகளில் சேமிக்கப்பட வேண்டும். அதனால் ஒரு கணினி செயலிழந்து போனாலும், அதிலிருக்கும் தரவுகள் மற்றொரு கணினியிலிருந்து பெற்றுத் தர வேண்டியது மேகத்தின் கடமையாகிறது. அதற்கான மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். அதன் காரணமாக மேகம் நிரலவல்லது.
கிளவுட் கம்பியூட்டிங் பயன்பாட்டு களங்கள், மிகவும் பிரபலமான கூகுள் குடும்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கூகுள் டாக்ஸ் (Google Docs) , கூகுள் ஸ்பிரெட்ஷீட (Google Spreadsheet), கூகுள் காலேண்டர், பிகாசா ஆகிய அனைத்து பயன்பாட்டு களங்களும் கூகுள் சேவையாகத்தில் அமைந்துள்ளன. இணையத் தொடர்பு கிடைக்கும் எந்தப் பகுதியிலிருந்தும் பயனர்கள் இவற்றை அணுகிப் பயன்படுத்தலாம். இவை குழுப்பணிகள் செய்யப் பெரிதும் உதவுகின்றன.
பயனர்களுக்கு இலவசமாகவே 1 ஜிபி வெளி கோப்புகளைச் சேமிக்கத் தரப்படுகிறது.
கணினியிலிருந்து பயனர்களுக்கும், பயன்பாட்டு மென்பொருளிலிருந்து பணிகளுக்கும், தனித்துச் சேமிக்கப்பட்ட தரலிருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகவல்ல தரவுகளுக்கும் இன்று கணிப்பு மாறியிருக்கிறது. அதுவே கிளவுட் கம்பியூட்டிங்.
நம்மிடம் சொந்தமாகக் கணினி இல்லாவிட்டாலும், இணைய மையத்திற்குச் சென்று, நமக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்கி, சேமித்து விடலாம். வேண்டிய போது, அதை அந்த இணைய மையத்திற்கேச் சென்றும் பெறலாம், அல்லது வேறோர் ஊரிலிருந்தும் அதே ஆவணங்களை அணுகியும் பெறலாம். அதே வகையில் நாம் இணையத்தில் ஏற்றும் படங்கள் அனைத்தையும், உலகில் எந்த மூலையிலிருந்தாலும் நம் உறவினர்களால் காண முடியும். அதுவே கிளவுட் கம்பியூட்டிங்கின் மகிமை.