முன்னுரை: யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் உலகெங்கும் விபத்துக்கள் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும், விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
விபத்து நேர்ந்த காஷிவசாக்கி அணு உலைகளை நிறுத்த வேண்டுகோள்
2008 பிப்ரவரி 24 ஆம் தேதி ஜப்பானின் விஞ்ஞானப் பொறியியல் எரிசக்தி கண்காணிப்புக் குழு (Group of Concerned Scientists & Engineers for Energy) உலகப் பெரும் காஷிவசாக்கி அணுமின் நிலையத்தை நிறுத்தி நிரந்தமாய் மூட வேண்டும் என்றோர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அணுமின் உலை எதிர்ப்பு அறிக்கையில் “அடுத்தோர் நிலநடுக்க அபாயம் வரும் தருணம் உள்ளது” (“The Dangers of another Earthquake Remains”) என்று அழுத்தமாய்த் தெரிவிக்கப் பட்டது. ஜப்பான் நிபுணர்கள் அறிவித்தபடி 2011 மார்ச் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பம் உண்டாகி, 30 அடி உயரச் சுனாமி அடித்து யுத்தக் களம் போல் நாடு நகரம், வீடுகள் அழிந்து 14600 பேர் மடிந்து (2011 ஏப்ரல் 29 வரை) இன்னும் 10,000 பேர் காணப் படாமல் இருக்கிறார். மேலும் எழுந்த சுனாமியால் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளில் மூன்று ஹைடிரஜன் வாயுச் சேமிப்பால் வெடித்து, சுயமாக நிறுத்தம் அடைந்த அணு உலைகளில் சூடேறிய எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி ஓரளவு உருகிக் கசிந்த நீரின் வழியாகவும் நீராவி & வாயுக்கள் மூலமாகவும் கதிரியக்க ஐயோடின்-131 & சீஸியம்-137 போன்ற நச்சுப் பொருட்கள் வெளியேறின. புகுஷிமா அணுமின் உலைகள் இரண்டு நாற்பது ஆண்டுக் காலம் இயங்கி ஓய்வெடுக்க வேண்டியவை. 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்டவை. எதிர்பாராத பெரிய நிலநடுக்கம் 9 ரிக்டர் அளவுக்கும் 30 அடி உயரச் சுனாமிப் பேரலைக்கும் அணுமின் நிலையங்கள் டிசைன் செய்யப் படாதவை. பழைய 1978 விதிப்பாடுகளுக்கு உடன்பட்டு 7 – 7.5 ரிக்டர் அளவுக்கும் 20 அடிச் சுனாமிப் பேரலைக்கும் டிசைன் செய்யப்பட்டுச் சில அணுமின் நிலையங்கள் புகுஷிமாவில் கட்டப் பட்டவை.
இயங்கும் அணு உலைகளில் ஏற்படக் கூடிய அபாயங்கள்
அணு உலைகளில், அணுமின் உலைகளில், அணுக்கழிவு சுத்தீகரிப்புச் சாலைகளில் ஏற்படக் கூடிய மாபெரும் விபத்துக்கள் என்ன ? அணு உலை இயங்கும் போது மீறும் தொடரியக்கத்தில் [Super Critical Reaction] வெடிப்பது ! அடுத்து கதிரியக்கப் பிளவுத் துணுக்குகளும், [Fission Fragments] திரவக் கழிவுகளும், வாயுக் கழிவுகளும் கோட்டை அரணிலிருந்து [Containment Structure] எப்படியோ கசிந்து சூழ்வெளியில் பரவிக் கதிரியக்கத்தை மக்கள் மீதும், தளங்கள் மீதும் பொழிவது.
இதுவரையில் கோர விளைவுகளை இரண்டு அணுமின் உலைகள் நிகழ்த்தி இருக்கின்றன. முதலில் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்து (1979). அடுத்தது சோவித் ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலைய விபத்து (1986). அமெரிக்க அணுமின் உலையில் வெப்பத் தணிப்பு நீரிழப்பு விபத்து [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்து அணு உலை எரிக்கோல்கள் உருகின. ஆனால் கதிரியக்கத் துணுக்குகளும், திரவ, வாயுக் கழிவுகளும் கோட்டை அரணில் சேமிப்பாகி வெளியே கசியவில்லை. ஆனால் செர்நோபில் அணு உலையில் வெப்ப ஆற்றல் மிகையாகி இருமுறை வெடிப்புக்கள் விளைந்து கோட்டை அரண் இல்லாததால் கதிரியக்கத் துணுக்குகள், திரவ, வாயுக் கசிவுகள் சூழ்வெளியில் பரவின. உலகெங்கும் பல நாடுகளில் மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அணு உலைகளில் சிறிய, சிறிய விபத்துக்களும் நேர்ந்துள்ளன.
கடந்த 50 ஆண்டுகளாக 32 நாடுகளில் இயங்கி வரும் 435 அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக பராமரித்து வந்த அனுபவங்களை 12,700 அணு-உலை-ஆண்டுகள் [Reactor-years] என்னும் எண்ணிக்கையில் IAEA காட்டுகிறது. யந்திரப் புரட்சி (தொழிற் புரட்சி) ஏற்பட்ட பிறகு எந்த ஒரு தொழிற் துறையும் அணுவியல் துறை உலைகள் போல் உலகெங்கும் தொடர்ந்து கண்காணிக்கப் படவில்லை. அந்த சிறந்த கண்காணிப்பை 1957 இல் முதலில் துவங்கியது அகில நாட்டு அணுசக்திப் பேரவை எனப்படும் IAEA. அடுத்து அணுமின் நிலைய இயக்கங்கள், இயக்கத் திறன்கள், பராமரிப்புகள், திறனாய்வுகள், குழு ஆய்வுகள், அபாய விளைவுகள் போன்றவற்றை அடிக்கடி அணு உலை இயக்க உலகக் கூட்டுறவு [World Association of Nuclear Operations (WANO)] நிறுவகம் மேற்பார்வை செய்கிறது.
மூர்க்கர்கள் தாக்காதபடி மேலை நாடுகளில் அணுமின் உலைப் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக உள்ளன. அப்படிச் சிலர் தாக்கினாலும் விளையும் அபாயங்கள் சிறிதளவுதான் என்று அறியப்படுகிறது. இயற்கை நிகழ்ச்சியில் பேரளவு ஆற்றல் கொண்ட பூகம்பத்தின் போது அணுமின் உலைக் கட்டுமானங்கள், சாதனங்கள் நிலநடுக்க ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தவையாக அமைக்கப் படுகின்றன.
அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் கண்காணிப்பு
1957 இல் ஆஸ்டிரியா வியன்னாவில் தோன்றிய அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் சில விதி முறைகள்,
அணுக்கருவியல் பாதுக்காப்பின் கீழ் அணுக்கருப் பண்டப் பயன்பாடு, அணு ஆயுத எருக் கண்காணிப்பு ஆகிய இரண்டும் சேர்க்கப் பட்டுள்ளன.
அணுக்கருவியல் பாதுகாப்பு [Nuclear Safety]: அனுமதி பெற்ற அணு உலைக் கூடங்களிலிருந்து மனிதர் தூண்டாத விபத்துகளால் விளையும் கதிரியக்க வெளியேற்றத்தையும், அதன் தீங்குகளையும் பற்றியது.
அணுக்கருப் பண்டப் பயன்பாடு [Nuclear Materials Security]: அணுவியல் எரு மற்றும் ஏனைய கதிர்வீசும் பண்டங்களைப் பயன்படுத்துதல் பற்றியது. அன்னியர் அல்லது புறத்தே உள்ளவர் அணுவியல் பொருட்களை களவு செய்வதைக் கண்காணித்தல் பற்றியது.
அணு ஆயுத எருக் கண்காணிப்பு [Nuclear Safeguards]: உலக நாடுகளில் அணு ஆயுத ஆக்கத்தையும் பெருக்கத்தையும் தடுப்பது பற்றியது.
அகில நாட்டு அணுசக்திப் பேரவை உலக நாடுகளில் அணுக்கருப் பண்டங்கள் சேமிப்பு, பாதுகாப்பு, பயன்பாடு, தீய்ந்த எருக்கள் கைவச இருப்பு [Spent Fuel Storage], புதைப்பு பற்றிய வினைகளில் தணிக்கை ஆற்றல் உரிமை [Auditor of World Nuclear Safety] பெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் கண்காணிப்பு செய்ய அகில நாட்டு அணுசக்திப் பேரவைப் பிரதிநிதி ஒருவர் அமைக்கப் படுவார்.
ஜப்பானுக்கு அகில நாட்டு அணுசக்திப் பேரவை அனுப்பிய உளவு உரைகள்
2007 ஆகஸ்டு 17 ஆம் தேதி அகில நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) அனுப்பிய உளவு உரைகளும், செம்மைப்பாடுகளும் கீழே உள்ளன :
- 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் டிசைன் அளவை மீறி விட்டாலும் அணுமின் நிலையக் கட்டமைப்பு முறியாமல் பாதுகாப்பாக நிலைத்து நின்றது.
- குறிப்பாக முழு ஆற்றலில் இயங்கிக் கொண்டிருந்த யூனிட்டு: 3, 4, & 7 அணு உலைகள் சுயமாய் நிறுத்தம் அடைந்தன. துவக்க நிலையில் இருந்த யூனிட்: 2 தானாக நிறுத்த மானது.
- அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கட்டமைப்பு, சாதனங்கள், வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் நிலநடுக்கத்தால் சீர்கேடாக வில்லை.
- ஆயினும் பாதுகாப்பு ஏற்பாட்டுக் கட்டமைப்பில் இல்லாத மற்ற மின்சாரச் சாதனங்கள் (மின்சார அழுத்த மாற்றிகள் -Transformers) பாதகங்கள் அடைந்தன.
- நிலநடுக்க எல்லைகள் புதுப்பிக்கப் பட்டுச் சாதனங்கள் கட்டமைப்புகள் செம்மைப் படுத்த வேண்டும்.
அணு உலை இயக்கங்களால் நேர்ந்த சில விபத்துகள், மரணங்கள்
செர்நோபில் கோர உயிரிழப்பு, மற்றும் அதன் கதிரியக்கப் பொழிவால் விளைந்த நோய், மரண விபத்தைத் தவிர உலக நாடுகளில் இயங்கும் வேறு எந்த அணுமின் நிலையங்களில் கதிரியக்கத்தால் மனிதர் யாரும் இறக்க வில்லை. அணு ஆராய்ச்சி உலைகளில் பணி புரியும் விஞ்ஞானிகள் தவறுதலாக யுரேனிய அல்லது புளுடோனிய எருக்களைக் கையாண்டதால் கதிரியக்கம் பெற்று ஒரு சிலர் சில தினங்களில் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. ஜப்பானில் யுரேனியச் செறிவுச் சாலை ஒன்றில் ஏற்பட்ட கதிரியக்க விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் இரண்டு அணுமின் நிலையங்களில் [ஜெர்மனியில் குன்றிமிங்கன் அணுமின் உலை, ஜப்பானில் மிஹாமா அணுமின் உலை] பராமரிப்பு செய்யும் போது கதிரியக்கம் இல்லாத நீராவி பேரளவில் கசிந்து நான்கு பேர் மரித்தார் என்பது அறியப் படுகிறது.
முடிவுரை:
ஜப்பான் நிலநடுக்கத்தினாலும், சுனாமியாலும் நாடு, மக்கள், செல்வ வளம் பன்முறை பாதிக்கப் பட்டுள்ளன. ஆயினும் மின்சக்தி பேரளவில் உற்பத்தி செய்து நாட்டு யந்திரங்களை இயக்கிப் பலருக்கு வேலை, ஊதியம் அளித்து வரும் அணுமின் நிலையங்கள் செம்மையாக்கப் பட்டு இன்னும் பல்லாண்டுகள் இயக்கப்படப் போகின்றன. நேர்ந்திடும் அணு உலை விபத்துக்களால் ஜப்பானிய அணுமின்சக்தி ஆதரவு நிபுணர் பாடங்கள் கற்று அவற்றை மேம்படுத்தித் தொடர்ந்து இயக்கி வருவார் என்பது என் கருத்து. வேறு முறையில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யும் வழியின்றித் திடீரென்று அணுமின் உலைகளை எல்லாம் நிறுத்தி விட்டு ஜப்பானை இருட்டடித்து, யந்திர யுகத்தை முடக்கி, ஊழிய மில்லாத் திண்டாட்டத்தை எதிர்நோக்கப் போகிறார் என்று யாரும் தற்போது முடிவு கட்ட முடியாது !
(தொடரும்)
***********************