ஞாயிறு, 29 மே, 2011

ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1


“அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் எழுந்துள்ள நிறுவகங்களின் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே இருப்பதை நினைவூட்டுகின்றன.”
மிக்கேயில் கார்பசாவ் [Mikhail Gorbachev (Aug 18, 1986)]
அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும்.  பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரியவில்லை!
இயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]
நகரிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள சிறு அணுமின் நிலையம் ஒன்றில் பெரும் விபத்து நேர்ந்தால், சுமார் 3400 பேர் மரணம் அடையலாம்! கதிரியக்கத்தால் 43,000 நபருக்குத் தீவிரத் தீங்குகள் விளையலாம்! நகரப் புறத்திலும், நிலவளத்திலும் ஏற்படும் பொருட் சேதம் சுமார் 7 பில்லியன் டாலர் நிதி விரையத்தை உண்டாக்கலாம்.
அமெரிக்க அணுசக்திப் பேரவைக் கணிப்பு [US Atomic Energy Commission Brookhaven Report (1957)]
“மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்”
தாமஸ் ஹார்டி [Thomas Hardy]
முன்னுரை:  2011 மார்ச் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குக் கரையில் 9 ரிக்டர் அளவில் அசுரப் பூகம்பம் ஒன்று உண்டாகி, இதுவரை எழாத 9 மீடர் (30 அடி) உயரச் சுனாமிப் பேரலைச் சுவர் தாக்கிப் பேரழிவை உண்டாக்கியது !  அப்போது அந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த 11 அணுமின் உலைகள் பாதுகாப்பாக சுயநிறுத்தம் அடைந்தன !  7.5 ரிக்டர் நிலநடுக்க அளவைத் தாங்கிக் கொள்ள அமைக்கப்பட்ட அணுமின் உலைகள் 9 ரிக்டர் அளவு பூத நடுக்கத்தைப் பொறுத்துக் கொண்டு நிலைகுலையாது நிமிர்ந்து நின்று ஆச்சரியம் விளைவித்தது !  ஆனால் 30 அடி உயர அசுரச் சுனாமி அலையை அணு உலைகள் தாங்கிக் கொள்ள முடியாது அவற்றின் அபாயப் பணி அவசிய மின்சாரச் சாதனங்கள் முடமாக்கப் பட்டு நிறுத்தப் பட்டன.  அணு உலை எருக்கோல்களின் மிச்ச வெப்பத்தைத் (Residual Heat of the Shutdown Fuel Rods) தணிக்க நீரனுப்ப முடியாமல் ஓரளவு உருகிப் போயின.  மேலும் நீரில் மூழ்காத எருக்கோல்களின் உஷ்ணம் மிகையாகி அவற்றின் கவச ஸிர்கோனியம் (Zirconium Fuel Sheath) நீரோடு இணைந்து ஹைடிரஜன் வாயுக் கோளம் வெளியேறி ஆக்ஸிஜனுடன் கலந்து யூனிட் -1, -2, -3 அணு உலைக் கட்டங்களின் மேற்தளங்கள் வெடித்தன !  யூனிட் -1 இன் எஃகு கோட்டைக் கீழ் வளையத்தில் (Torus) நீராவியின் அழுத்தம் மிகையாகிப் பிளவு ஏற்பட்டு கதிரியக்க கசிவு தொடர்ந்தது.  வெப்பத் தணிப்புக்குக் குழாய் நீரனுப்ப வசதியற்று, கடல் நீரைப் பயன் படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது,  அணு உலை வெப்பத் தணிப்பு நீர் போக்குக்குத் தேக்குமிடம் இல்லாமல் டர்பைன் கட்டடத்தில் சேமிப்பாகிக் கதிரியக்கம் கடல் வெள்ளத்தில் கலந்தது !  வெளியேறும் நீராவியில் கதிரியக்கத் தூள்களும் வாயுக்களும் சுற்றுப் புறங்களில் பலமடங்கு வீரியத்தில் பரவின !

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 1979 இல் நேர்ந்த அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்தில் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது பேரளவு எருக்கோல்கள் உருகிப் போயின.  வெப்ப மிகையில் நீரும் எருக்கோல் கவச ஸிர்கோனியமும் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் அணு உலைக்குள் திரண்டு வெடித்து மூடிய கோட்டையைத் தகர்த்து விடும் என்றோர் அச்சத்தை உண்டாக்கியது.  அவ்விதம் எச்சரிக்கை செய்து 30 ஆண்டுகள் கடந்து ஜப்பான் புகுஷிமாவில் மூன்று அணுமின் உலைகளில் நிலநடுக்கத்தால் நிறுத்தமாகி, சுனாமியால் டீசல் எஞ்சின்கள் முடக்கமாகி வெப்பத் தணிப்பு நீரனுப்பு ஏற்பாடுகள் தடைப்பட்டு ஓரளவு எருக் கோல்கள் உருகி விட்டன என்று தெரிய வருகிறது !  அதை விடக் கோரமாய் அணுமின் உலைக்குள் பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் திரண்டு வெடித்து மூன்று அணுமின் உலைகளின் கட்டட மேல்தளம் சிதைந்து அங்கிருந்த யந்திர சாதனங்களும் சிதறிப் போயின !  நான்காவது அணு உலையின் மேற்தளம் நீர்த் தொட்டியில் சேமிப்பான எருக்கோல்கள் தணிப்பு நீரின்றி, ஹைடிரஜன் வாயு சேர்ந்ததால் வெடித்தது !  விபத்து நேர்ந்த திரிமைல் தீவின் விளைவு களிலிருந்து ஜப்பான் அணுவியல் துறை நிபுணர்கள் என்ன பாடங்கள் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை ! என்ன செம்மைப்பாடுகளைத் தமது அணுமின் உலைகளில் நிறுவினர் என்பதும் ஆழ்ந்து அறிய வேண்டிய உளவுகள் !
அணு உலைகளின் சிதைவாலும், அசுரச் சுனாமியாலும் ஜப்பானியருக்கு விளைந்த பாதிப்புகள் (ஏப்ரல் 25, 2011)
புகுஷிமா பூகம்பச் சுனாமி விபத்தால் நேர்ந்த மரணங்கள், சிதைந்த நகரங்கள், வீடுகள், தொழிற்துறைகள் அவற்றால் ஏற்பட்டப் புலப்பெயர்ச்சிகள், இடக்கடத்தல், கதிரியக்கத் தீண்டல்கள் ஆகியவற்றை நோக்கினால் இந்த நிலநடுக்க விபத்து உலகப் பெரு விபத்துகளில் ஓர் உச்ச இடத்தைப் பெறுகிறது ! இந்தப் பேரிழப்பின் நிதி மதிப்பு சுமார் 235 பில்லியன் டாலர் என்று உலக வங்கி மதிப்பீடு செய்கிறது !  ஜப்பான் அரசாங்கம் இவற்றைச் சீராக்க 3 பில்லியன் டாலர் நிதித் தொகை ஒதுக்குத் திட்ட ஏற்பாட்டை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 25, 2011 தேதி வரை பூகம்பம், சுனாமி, கதிரியக்கத் தாக்குதலால் ஜப்பான் பகுதிகளில் நேர்ந்த முக்கியச் சீர்கேடுகள், இன்னல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன :
1.  ஜப்பான் தேசீயக் காவல்துறை அறிக்கைப்படி மரணம் அடைந்தவர் எண்ணிக்கை : 14,358. இன்னும் காணாமல் இருப்பவர் எண்ணிக்கை : 11,889.

2.  பூகம்பத்தாலும், சுனாமியாலும், கதிரியக்கத்தாலும் இடங் கடத்தப்பட்டு தற்காலியப் பாதுகாப்பு இடங்களில் தங்கி இருப்போர் எண்ணிக்கை : 130,904.
3.  புகுஷிமா அணு உலை விபத்தால் கதிரியக்கப் பொழிவிலிருந்து 20 கி.மீடருக்குள் அப்பால், 30 கி.மீடருக்குள் வசிக்கும் 136,000 பேர் அரசாங்க ஆணையால் புலப்பெயர்ச்சி ஆக்கப் பட்டுள்ளார்.
4.  தொகூக்கு மின்சார வாரியத்தின் (Tohuku Electric Power Co) அறிவிப்புப்படி 12,485 வட ஜப்பான் இல்லங்களில் மின்சாரம் அனுப்பு வசதிகள் இல்லை.
5.  ஐந்து நகர்ப் புறத்தில் குறைந்தது 79,000 இல்லங்களில் குழாய் மூலம் குடிநீர் அனுப்பு வசதிகள் முடங்கி உள்ளன என்று உடல்நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

6.  குறைந்தது 95,100 வீடுகள் தகர்ந்து போயின, அல்லது சுனாமியால் இழுத்துச் செல்லப் பட்டன, அல்லது எரிந்து சாம்பலாயின என்று தெரிய வருகிறது.
7.  புகுஷிமாவுக்கு அருகிலுள்ள கடல் நீரைச் சோதித்ததில் கதிரியக்க சீஸியம்-134 இன் அளவு பாதுகாப்பு அனுமதி நிலைக்கு மீறி 18,000 மடங்கு ஏறி விட்டதாக அறியப்படுகிறது.
8. புகுஷிமாவைச் சுற்றியுள்ள நிலவளம், நீர்வளம், பயிர்வளம் கதிரியக்கப் பொழிவுகளால் ஓரளவு தீண்டப்பட்டு பொது மக்களின் வேளாண்மை, தொழில்கள், ஊழியங்கள், உணவு வகைகள், பால்வளம், மீன்வளம் பாதிக்கப் பட்டுள்ளன.  அவற்றின் மொத்த இழப்பீடுத் தொகை இப்போது முழுமையாகத் தெரியாவிட்டாலும், சுமார் 100 பில்லியன் டாலர் என்று பொருளாதார நிபுணர் மதிப்பீடு செய்கிறார்.

9.  பூகம்பத்தாலும், சுனாமியாலும் நேர்ந்த இழப்புக்கள் மட்டும் 300 பில்லியன் டாலர் நிதித் தொகை எண்ணிக்கையை எட்டும் என்று அறியப் படுகிறது !  இதுவரை நேர்ந்த உலக இயற்கைத் தீங்குகளில் உச்ச நிலை இழப்பாக மதிப்பீடு செய்யப் படுகிறது !
10.  ஜப்பானின் இந்தப் பேரிழப்புக்கு உதவி செய்ய இப்போது 146 உலக நாடுகள், 39 அகில நாட்டு ஆணையகங்கள் முன்வந்துள்ளன என்று ஜப்பன் வெளிநாட்டு அமைச்சம் அறிவித்திருக்கிறது.
11.  புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் வெடிப்பும், கதிரியக்க வெளியேற்றமும், சுற்றுப் புறத்தில் வாழும் மக்களுக்கு அளித்த இடர்ப்பாடுகளையும் எடைபோட்டு அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (International Atomic Energy Agency – IAEA) விபத்து நிலை அளவை ஐந்திலிருந்து ஏழுக்கு உயர்த்திச் செர்நோபில் விபத்துக்கு நிகராக ஏற்றியுள்ளது !
12.  சுனாமியால் பெருஞ் சேதமடைந்த புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளும் நிரந்தரமாய் முடக்கமாகிச் சுத்தமாக்கப் பட்டுச் சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் !  அதனால் ஜப்பானில் மின்சாரப் பரிமாற்றம் 2720 MWe குறைந்து போய் சில இடங்களில் மின்வெட்டும், மின்தடையும் உண்டாகும்.  இந்த நான்கு அணுமின் உலைகளின் சிதைந்த எருக் கோல்கள் நிரந்தரமாய் நீக்கப்பட்டுக் கதிரியக்கத் தீண்டல் யாவும் துடைக்கப்பட்டுச் சுத்தமாக்க குறைந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம் !

ஜப்பானின் எதிர்கால மின்சக்தி உற்பத்தித் திட்டங்கள் (2011 மார்ச் 30) :
ஜப்பானுக்குத் தேவையான எரிசக்தியில் 80% பங்கை மற்ற நாடுகளிலிருந்து அது இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.  இப்போது இயங்கிவரும் 50 அணுமின் உலைகள் 30% மின்சக்தியைத் தொடர்ந்து பரிமாறி வருகின்றன.   2017 இல் அணுமின்சக்தி உற்பத்தி அளவு 40% ஆகவும், 2030 இல் 50% ஆகவும் உயரும் என்று முந்தைய திட்டப்படி எதிர்பார்க்கப் படுகிறது. ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வெடிப்பால் கதிரியக்கப் பாதிப்புகளில் பேரின்னல் உற்றாலும், நிலநடுக்கம், சுனாமி அடிப்புகள் நித்தியப் பேரிடர் கொடுத்தாலும், புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் வெடித்துக் கதிரியக்கம் வெளியேறி மக்கள் பெரு வேதனைப் பட்டாலும், ஜப்பான் தேசத்துக்குத் தொடர்ந்து பேரளவில் மின்சக்தி உற்பத்தி செய்யத் தற்போது அணுசக்தியைத் தவிர எரிசக்தி வேறில்லை என்பது நாம் அறிந்து கொள்ளும் மெய்ப்பாடு ! 7.5 ரிக்டர் அளவுக்கு டிசைன் செய்த புகுஷிமா அணுமின் உலைச் சாதனங்கள். கட்டங்கள் 9 ரிக்டர் அளவுப் பூதப் பூகம்பத்தால் சிறிதளவு கூடச் சிதைவாக வில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.  30 அடி உயரச் சுனாமி அலைகளால் அணுமின் உலைகளில் சீர்கேடுகள் நிகழாமல் தடுப்பு அரண்களும், பாதுகாப்புச் சாதனங்களும் எதிர்கால ஜப்பானில் சுறுசுறுப்பாக உருவெடுக்கும் என்று நாம் நம்பலாம். அணுசக்தியால் ஓடும் ஜப்பானின் யந்திரச் சக்கரத்தை எல்லாம் பெரு நில நடுக்கமும், பேரலைச் சுனாமிகளும், கதிரியக்க அச்சமும் நிரந்தரமாய்த் தடுத்து நிறுத்திவிடும் என்று உலக மாந்தர் எதிர்பார்க்கக் கூடாது !

(தொடரும்)
***************
தகவல்:
1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill
6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)